சென்னைப் புத்தக திருவிழா 2020-ல் என்ன ஸ்பெஷல்? பபாசி பேட்டி முழு தகவல்!!

சென்னைப் புத்தக திருவிழா 2020-ல் என்ன ஸ்பெஷல்? பபாசி பேட்டி முழு தகவல்!!

சென்னையிலுள்ள புத்தகவாசிப்பாளர்களின் திருவிழாவான 43-வது சென்னை புத்தகக் கண்காட்சி நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9–ந் தேதி முதல் 21–ந் தேதி வரை நடை பெறும் என்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, இலவச நுழைவு சீட்டுகள் வழங்கப்படும். மெட்ரோ ரயில் பாஸ் வைத்திருப்போருக்கு, இலவச அனுமதி வழங்கப்படும். ஆன்லைன் வழி யாகவும் நுழைவுச்சீட்டு பெற முடியும். கண்காட்சி அரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலிகள்; மைதானத்தில், ஏ.டி.எம்., மையங்கள்; அரங்குகளில், கிரெடிட் கார்டுகளின் வழியே புத்தகம் வாங்கும் வகையில், பி.ஓ.எஸ்., கருவிகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

தென் இந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் (பபாசி) சார்பில் நடைபெறும் கண்காட்சியின் சின்னம் மற்றும் ஹேஷ்டேக் ஆகியவற்றை அறிமுகம் செய்தனர். பபாசியின் தலைவர் எஸ். சண்முகம், செயலாளர் முருகன், பொருளாளர் ஆ.கோமதிநாயகம். பின்னர் இவர்கள் புத்தக கண்காட்சி குறித்து கூறியது இதுதான்:–

ஆசியாவின் மிகப்பெரிய புத்தகக் கண்காட்சிகளுள் ஒன்றான சென்னை புத்தக காட்சிக்கு தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் நாட்டின் பிற மாநிலங்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான வாசகர்கள் வருடம்தோறும் வந்து பயன் பெற்று செல்கின்றனர். 43வது புத்தகக் கண்காட்சியில் சுமார் 700க்கும் அதிகமான அரங்குகளில், 15 லட்சத்திற்கும் மேலான தலைப்புகளில் 2 கோடி புத்தகங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேலை நாட்களில் பிற்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் புத்தகக்காட்சி நடைபெறும். அனைத்து புத்தகங்களுக்கும் 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும்.

இந்த புத்தகக் காட்சியில் வரலாற்றில் முதல் முறையாக, சுமார் 5,000 பள்ளி மாணவ-மாணவியர்கள் ஒரே நேரத்தில் புத்தகங்கள் வாசிக்கும் “சென்னை வாசிக்கிறது” என்ற நிகழ்ச்சி ஜனவரி 6–ந் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும். புத்தக வாசிப்பின் அவசியத்தை எடுத்துச் சொல்லும் வகையில் பபாசி ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில் தமிழக அமைச்சர்கள், சென்னை மாவட்ட கலெக்டர், அதிகாரிகள், ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.

“கீழடி – ஈரடி” அரங்கம்

உலகின் தொன்மையான மொழிகளுள் ஒன்றான தமிழ் மொழியின் சிறப்பையும், பாரம்பரியத் தையும் மற்றும் திருக்குறளின் பெருமையையும் புத்தகக் காட்சிக்கு வரும் அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் “கீழடி – ஈரடி” என்ற தலைப்பில் பிரம்மாண்டமான அரங்கம் ஒன்று தொல்லியல் துறையின் ஒத்துழைப்போடு அமைக்கப்படுகிறது. இந்த அரங்கில் கீழடியில் கிடைத்த அகழ்வாய்வு மாதிரி பொருட்களும், உலகம் முழுவதும் 45 மொழிகளில் வெளியான திருக்குறள் புத்தகங்களும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. ஓடிசாவை சேர்ந்த பிரபல மணற்சிற்ப கலைஞர் பட்நாயக் திருவள்ளூவரின் மணற்சிற்பத்தை உருவாக்குகிறார்.

இப்புத்தகக் காட்சி நடைபெறும் 13 நாட்களும் புத்தக வெளியீடுகள் மற்றும் தலைசிறந்த எழுத்தாளர்கள், கவிஞர்கள், விஞ்ஞானிகள், கலை உலகினர் பங்கு பெற்று சிறப்பிக்கும் அரங்க நிகழ்வுகளும் நடைபெறும். மேலும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் திறன்களை வெளிக்கொணரும் வகையில் பேச்சுப்போட்டி, ஓவியப்போட்டி, வினாடி-வினா போன்றவை பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களும், புத்தகங்களும் வழங்கப்படும்.

இளம் இயக்குனர்களை ஊக்குவிக்கும் வகையில் குறும்படம், சமுக நலன் மற்றும் புத்தகம் தொடர்பான ஆவணப்படங்களை திரையிட தனி அரங்கு, ஆன்லைன் மூலம் நுழைவுச்சீட்டு பெறும் வசதி, மாற்றுத்திறனாளிகள் எளிதில் பார்வையிட சக்கர நாற்காலிகள், இப்புத்தகக் காட்சி வளாகத்தில் ஏடிஎம், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளின் மூலம் புத்தகம் வாங்கும் வசதி போன்ற ஏற்பாடுகள் வாசர்களுக்காக செய்யப்பட்டுள்ளன. புத்தக கண்காட்சி நுழைவு கட்டணம் ரூ.10 ஆகும். மெட்ரோ ரெயில் பயண அட்டை வைத்திருப்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு நுழைவு கட்டணம் கிடையாது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.