ஹார்வர்ட் தமிழிருக்கையினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை? அது தேவையே இல்லைங்கறேன்!

ஹார்வர்ட் தமிழிருக்கையினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை? அது தேவையே இல்லைங்கறேன்!

380 ஆண்டுகாலம் பழமை வாய்ந்த ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் உலகின் தொன்மையான மொழிகள் குறித்து ஆய்வு செய்வதற்கென இருக்கைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ் மொழிக்கென்று தனி இருக்கை அமைக்க அமெரிக்கா வாழ் மருத்துவர்களான சம்பத், ஜானகிராமன் ஆகிய இருவரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.  தமிழ் இருக்கை அமைவதற்கு தோராயமாக ரூ.40 கோடி தேவைப்படும் நிலையில் தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி வழங்கப்பட்டுள்ளது. இதுவரையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் கொடுத்த நன்கொடையை சேர்த்து ரூ.17 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் விஷால் தன் பங்கிற்கு ரூ.10 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார். மேலும் தமிழ் இருக்கை அமைக்க வேண்டியதன் கட்டாயம் குறித்து அவர், “மூன்று கோடி பேர் பேசும் உக்ரைன் மொழிக்கும் ஒன்றரைக் கோடி பேர் பேசும் செல்டிக் மொழிக்கும் ஹார்வேர்டில் இருக்கைகள் உள்ளன. ஹீப்ரூ, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளுக்கும் இருக்கின்றன. ஆனால் 8 கோடி பேர் பேசும் தமிழுக்கு இருக்கை இல்லை என்பது நாம் கவலைப்பட வேண்டியது” என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதற்கு நன்றி தெரிவித்துள்ள அவர், “தமிழுக்கு இருக்கை அமைக்க ரூ.40 கோடி தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் 17 கோடி ரூபாய் தான் சேர்ந்துள்ளது. எனவே உலகளாவிய தமிழர்கள் ஒன்றுபட்டு இதற்கான நிதி விரைவில் சேர உதவ வேண்டும் என்றும் மத்திய அரசும் இந்த வரலாற்று சிறப்புக்கு உதவ வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே  Rajam Amma’s (US Tamil Scholar, California) message in tamil groups about Harward Tamil Chair. :

ஹார்வர்டில் தமிழ் இருக்கை பற்றிய என் கருத்தைப் பலரும் அறிவர். இங்கேயுள்ள சில உள்ளரசியலையும் இப்போது சொல்கிறேன். [நான் சொல்லாவிட்டால் வேறு யார் சொல்லப்போகிறார்!]

பின்னணி

முதலில் … அதாவது இரண்டு ஆண்டுகளுக்குமுன் (2015-இல், ஃபெட்னாவில் இரண்டாம் முறையாக எனக்குச் சிறப்புச்செய்த ஆண்டு) ஃபெட்னா தொடர்பாக என்னுடன் உரையாடியவர்களும் நெருங்கிய நண்பர்கள் என்று உறவாடிய சிலரும் … என்னை ஹார்வர்ட் இருக்கைக்குழுவின் உள் ஆளாக வைத்துக்கொண்டது-போலப் பேசி, “உங்கள் வழிநடத்தலின்படித்தான் ஹார்வர்ட் தமிழிருக்கை அமைப்பதற்கான எல்லாம் நடக்கும்” என்று ‘ஆசை காட்டி’னார்கள்! ஹார்வர்ட் மேலிடத்திலிருந்தும் “we’ll follow your lead” என்று மின்மடல் வந்தது! நம்பிவிட்டேன் நம்பிவிட்டேன் நம்பித் தொலைந்தேபோனேன்! ‘அதுக்கென்ன, எனக்கு வயதானாலும் சில ஆண்டுகள் அங்கே தங்கியிருந்து இளையதலைமுறையினரைப் பயிற்றுவிப்பேன், என்னால் இயன்ற எல்லா உதவிகளையும் செய்கிறேன்’ என்று மிகவும் ஆவலுடனும் ஊக்கத்துடனும் சொன்னேன். ‘You’re a living treasure’ என்றெல்லாம் புகழப்பட்டேன்!!!

ஆனால் … பிறகு பாருங்கள் … சொல்லாமல் கொள்ளாமல் … என்னைத் ‘தொப்’ என்று போட்டுவிட்டார்கள்! 😉 😉 😉 தங்கள் முயற்சிகளைப் பற்றி எனக்குத் தெரிவிப்பதில்லை, அவ்வப்பொழுது மூன்றாங்கை நாலாங்கை வழியாகத் தகவல் வந்துசேரும்! சரி, நமக்கென்ன … ‘மதியாதார் வாசல் மிதிக்கவேண்டாம்’ என்று நானும் ஒதுங்கிக்கொண்டேன்.

என் குழப்பத்துக்கு அடிப்படைக்கேள்விகள்
——————————————————

1. அமெரிக்காவில் ஒரு பணியிடம் அமைக்கத் தமிழகத்து மக்களிடம் ஏன் பணம் கேட்கவேண்டும்?

2. ஹார்வர்ட் தமிழிருக்கையினால் தமிழக மக்களுக்கு என்ன நன்மை?

3. ஏற்கனவே பொதுமக்களிடம் பணம் வாங்கி அமைக்கப்பட்ட பெர்க்கிலிப் பல்கலைக்கழகத் தமிழிருக்கையில் (Berkeley Tamil Chair) ஏன் ஒரு தமிழர் இல்லை?

3a. இந்தப் பெர்க்கிலி இருக்கை முயற்சிக்கு நானும் ஊக்கமளித்து உதவினேன். பணம் திரட்டியபின் அவர்கள் அந்த இருக்கையில் அமர்த்த open search செய்வார்கள் என்று நினைத்திருந்தேன், ஏமாந்துபோனேன். ஏற்கனவே இருந்த ஜார்ஜின் பதவியை நிலைப்படுத்தச் செய்த முயற்சி என்று பிறகுதான் தெரிந்தது.

3b. பெர்க்கிலி தமிழிருக்கையின் நோக்கம் முதலிய விவரங்களைப் பொதுமக்களுக்கு அறியத்தருமாறு கேட்டிருந்தேன். இன்னும் விவரம் கிடைக்கவில்லை.

4. What are the “terms of the gift?” நன்கொடையாளர்கள் இந்த ஹார்வர்ட் தமிழ் இருக்கையை இப்படித்தான் அமைக்கவேண்டும் என்ற விருப்பத்தை வரையறுத்துச் சொன்னார்களா?

4a. நம் பண்டைய ஆவணங்களிலும் இந்நாளைய உயில் என்ற ஆவணங்களிலும் பார்க்கிறோம். இந்தக் குறிப்பிட்ட சொத்து இன்னின்னாருக்கு இப்படி இப்படிப் பங்கிடப்படவேண்டும் என்று வரையறுப்பதுவே மரபு.

என் பொதுக்கருத்து
————————-
அமெரிக்கப்பல்கலைக்கழகங்களில் படித்தும் பணியாற்றியும் ஆழங்கால் பதித்த என் பட்டறிவின் அடிப்படையில் சொல்கிறேன்.

1. ஒரு பல்கலைக்கழகத்தில் ஓர் இருக்கை அமைக்கப் பணம் திரட்டும்போது அதன் நோக்கமும் பயனும் தெளிவாக விவரமாக அறிவிக்கப்படவேண்டும்.

1a. ச்சும்மா, ஆட்டபாட்டம், தமிழே உலகின் முதல் தாய்மொழி போன்ற ஆரவாரப் பேச்செல்லாம் தேவையில்லை. மக்களிடம் காசு கேட்கும்போது, இதனால் உனக்கு இன்ன பயன் என்று சொல்லிக் காசு வாங்கவேண்டும். ச்சும்மா … தமிழ் தமிழ் என்று உணர்ச்சிவேகத்தில் காசு வாங்குவதிலும் கொடுப்பதிலும் பொருளில்லை.

2. இந்த மாதிரி ஹார்வர்ட் இருக்கை போன்றவற்றில் தமிழரை அமர்த்தமாட்டார்கள். இது ஒரு வெள்ளைக்காரக் குடும்பத்துக்கு வாழ்நாள் முழுவதும் நல்ல சொகுசான வாழ்க்கை அமையச்செய்யும், அவ்வளவே.

2a. தமிழருக்குச் சரியாக ஆங்கிலம் பேசவராது, ஆங்கிலத்தில் கற்பிக்க முடியாது … அது இது என்ற கருத்தெல்லாம் நிலவுகின்றன.

2b. அதே நேரம் … தமிழ்ப்பேராசிரியர் பதவியில் இருக்கிற எத்தனை அமெரிக்கருக்குத் தமிழில் ஓர் ஆராய்ச்சிக்கட்டுரை எழுதத்தெரியும்? பலருக்கும் வாயில் தமிழ் விளங்காது, கடவுளே!

3. ஆராய்ச்சி, கீராய்ச்சி என்பதெல்லாம் interpretive/speculative social sciences முறையில் அமையும்.

3a. பெர்க்கிலித் தமிழிருக்கையிலிருந்து எத்தனை ஆய்வுக்கட்டுரைகள்/நூல்கள் வெளிவந்துள்ளன என்று யாராவது பட்டியலிட்டால் நலம்.

3b. அமெரிக்கத் தமிழ்ப்பேராசிரியர்கள் என்ற பதவியிலிருந்த/இருக்கும் யாராவது தமிழ் இலக்கியத்தையும் தொல்காப்பியத்தில் காணும் இலக்கியக் கருத்துகளையும் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார்களா? இவர்களுக்குத் தொல்காப்பியம் தெரியுமா?

3b1. ஒருமுறை சிக்காகோவில் தமிழ்ப்பேராசியர் பதவிக்காக ஆட்களைத் தேடிக்கொண்டிருந்தபோது அந்த வேலைக்கு நான் விண்ணப்பிக்கலாமா என்று என் மாணவி ஒருத்தியிடம் கேட்டேன். அவள் கேட்டாள்: உனக்கு Foucault (https://en.wikipedia.org/wiki/Michel_Foucault) தெரியுமா அவன் தெரியுமா இவன் தெரியுமா … அவர்கள் வழியில் இலக்கியத்தைப் படிப்பிக்க முடியுமா என்று கேட்டு அசத்திவிட்டாள்! அவள் சிக்காகோ மாணவி. சரிதான் போ என்று அந்த வேலைக்கு விண்ணப்பிக்கவில்லை!

3b2. அமெரிக்கத் தமிழ்ப்பேராசிரியர்களுக்குத் தொல்காப்பியம் தெரியுமா என்று கேட்க எந்தத் தமிழனுக்கும் துணிச்சல் இல்லையே, ஏன்? 🙁 🙁 🙁

3b3. இப்போதிருக்கிற அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழ்ப்பேராசிரியர்கள் எத்தனைப்பேர் என்னென்ன ஆய்வு நூல்கள் வெளியிட்டுளனர் என்ற பட்டியல் கிடைத்தாலும் மகிழலாம்.

3b4. ஆங்காங்கே மொழிபெயர்ப்பு முயற்சிகள் நடக்கின்றன. வெளிவந்த மொழிபெயர்ப்புகளையும் மூலநூலோடு ஒப்பிட்டுத் திறனாய்வு செய்ய எந்த முயற்சியும் இல்லை. மொழி பெயர்ப்புகளில் எத்தன ஓட்டைகள் என்று பொதுமக்களுக்குத் தெரியாது. ஆனால் விருதுகள் மட்டும் குவியும்! காலக்கொடுமை! 😉

10-கோடி உரூபாய் … அம்மாடியோவ்! வேற எவ்வளவு வகையிலே அதெச் செலவு செய்யலாம் …

1. நம்ம உள்ளூர்களில் கழிப்பறை வசதி இல்லையாமே, இது தெரியாதா?

2. ஒடுக்கப்பட்டோர், பெண்பிள்ளைகள் நலத்துக்காக ஒரு கோடியாவது ஒதுக்கலாமே???

தமிழகமே … அமெரிக்கா நல்லாத்தான் போயிட்ருக்கு … ஒங்க வரிப்பணம் அதுக்குத் தேவையில்லெ.

மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஒங்க ஊர்லே என்னென்ன செய்யணுமோ அதெச் செய்யுங்க. தமிழைப் பத்தி அப்புறமா ஆலாபனை செய்யலாம்.

இப்படிக்கு,
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ஆழங்கால் பதித்த ஒருத்தியின் பதிவு.

செல்வமுரளி

error: Content is protected !!