அண்ணாமலைக்கு என்ன தேவை?

அரசியல் என்பது பூப்பாதை அல்ல. முள்பாதை. எதையாவது செய்து நுழைவது என்பது சிலருக்கு எளிதாக நடக்கலாம். ஆனால் நிலைத்து நிற்கவும் மக்கள் அபிமானம் பெறவும் தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்தே ஆக வேண்டும். அந்த பாதையில் வருபவர்களால் மட்டுமே அரசியலில் சாதிக்க முடியும். வானத்தில் இருந்து குதிப்பதுபோல் குதித்தால் நீந்தி கரை சேர்தல் நடக்காத காரியம். அண்ணாமலைக்கு இது நூற்றுக்கு நூறு பொருந்தும். அவரது எண்ணம், பேச்சு, செயல் எதிலுமே பக்குவம் இல்லாததன் விளைவு காமெடி பீசாகி வருகிறார்.
பிரதமர் வருகையின்போது நடந்தது என்ன? கூட்டத்தை காட்ட வேண்டும் என்பது மட்டுமே அண்ணாமலையின் நோக்கமாக இருந்தது. சினிமா தயாரிப்பாளர் ஒருவரிடம் சொல்லி கூட்டம் சேர்ப்பது முதல் வழி நெடுகிலும் செட் வேலைகள் வரை செய்ய சொல்கிறார். அந்த தயாரிப்பாளரும் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகளை டபுள் பேட்டா கொடுத்து கூட்டி வந்து கூட்டத்தை காட்டுகிறார். ஆனால் நடந்தது என்ன? முதல்வர் பேசும்போது உணர்வால் அவர்களும் கைதட்டி வரவேற்கிறார்கள். இது மோடிக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்துகிறது. மேடையில் அவரது முகத்தை பார்த்தாலே இது புரியும்.
மோடியை வழியனுப்ப சென்ற அண்ணாமலைக்கு கடும் டோஸ் விழுகிறது. ஏற்கனவே எல்.முருகனுடன் அண்ணாமலைக்கு பெரிய பஞ்சாயத்து. மோடி வருகைக்கு முன்னதாகவே சிடி.ரவி முன்னிலையில் வாக்குவாதம். விழாவிலும் முதல்வர் ஸ்கோர் செய்துவிட விரக்தியின் உச்சத்துக்கே செல்கிறார் அண்ணாமலை.
இந்த சூழ்நிலையில் தான் ஒரு அரசியல்வாதிக்கு நிதானம் தேவை. ஆனால் தனது விரக்தியை பத்திரிகையாளர்களிடம் கோபமாக காட்ட அது வேறு விதமாக மாறிவிட்டது. முப்பதுகளில் ஒருவர் மத்தியில் ஆளும் ஒரு கட்சியின் மாநில தலைமையில் இருப்பது என்பது ஆரோக்கியமானது தான். ஆனால் கிடைத்ததை தக்க வைக்கவும் அடுத்தடுத்த கட்டத்துக்கு செல்லவும் நிறைய வாசிக்க வேண்டும். (20 ஆயிரம் புத்தகம் வாசித்திருக்கிறேன் என்று கப்சா விடக்கூடாது.)
அண்ணாமலைக்கு ஓர் அறிவுரை… அரசியலில் எதுவுமே நிரந்தரம் இல்லை. நம்முடைய தனிப்பட்ட கேரக்டரைசேஷன் என்பது தான் நிரந்தரம். பதவியில் இருக்கிறோம் என்று பொறுமையோ பக்குவமோ இல்லாமல் ஆடினால் அது தான் நிரந்தர தோல்வி. உங்களை பா.ஜ.க. பயன்படுத்திக்கொள்கிறது என்பதை உணராமல் அவசரப்படுகிறீர்கள். எந்த காலத்திலும் உங்களை அவர்கள் முதல்வர் வேட்பாளராக்க மாட்டார்கள். உங்களை அவர்கள் ஒரு கண்டெண்ட் கிரியேட்டராக மட்டுமே பார்க்கிறார்கள். தலைவராக அல்ல…
தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக உள்ளோம். மக்களுக்காக குரல் கொடுக்கும் ஆரோக்கியமான அரசியல் மட்டுமே இங்கே நிலைக்கும். உங்கள் கட்சியிலேயே உதாரணம் வேண்டும் என்றால் தமிழிசை சவுந்தர்ராஜனுக்கும் எச்.ராஜாவுக்குமான வித்தியாசம் தான். தமிழிசை மீது விமர்சனங்கள் உண்டு. ஆனால் அவரது பக்குவம் தான் கட்சி தாண்டி அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்துள்ளது. எச்.ராஜா பற்றி சொல்ல வேண்டியது இல்லை. எந்த அடையாளம் வேண்டும் என்பதை முடிவு செய்துகொள்ளுங்கள்…!