கனடாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இந்திய பிரஜைகளுக்கும் எச்சரிக்கை!

காலிஸ்தான் பயங்கரவாதி கொலையை அடுத்து கனடாவிலுள்ள இந்திய தூதரை நாட்டை விட்டு வெளியேறுமாறு அந்நாடு உத்தரவிட்ட சில மணி நேரங்களிலேயே, கனடாவின் மூத்த தூதரக அதிகாரியை அடுத்த 5 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு இந்திய அரசு உத்தரவிட்டது. “இந்தியாவிற்கான கனடா உயர் கமிஷனர் இன்று வரவழைக்கப்பட்டு, இந்தியாவை தளமாகக் கொண்ட கனடா நாட்டின் மூத்த தூதரக அதிகாரியை வெளியேற்றும் இந்திய அரசின் முடிவு குறித்து தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக கனடா நாடாளுமன்றத்தில் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்திய ஏஜென்டுகளின் தொடர்பு இருப்பதாகச் சந்தேகிப்பதாகக் கூறியிருந்தார். இந்தியா-கனடா உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், கனடாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இந்திய பிரஜைகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தலில் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவுக்கு எதிரான அஜண்டாவை எதிர்க்கும் இந்திய இராஜீய அதிகாரிகள் மற்றும் இந்திய சமூகத்தின் சில பிரிவுகள் குறிப்பாக குறி வைக்கப்படுகின்றனர் என்று வெளியுறவு அமைச்சகம் (Ministry of External Affairs) கூறுகிறது. கனடாவில் தாக்குதல் சம்பவங்கள் நடந்த பகுதிகள் மற்றும் தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியமான இடங்களுக்கு செல்வதை இந்தியர்கள் தவிர்க்குமாறு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
“கனடாவில் அதிகரித்து வரும் இந்திய – விரோத நடவடிக்கைகள் மற்றும் அரசியல் ரீதியிலான வெறுப்புக் குற்றங்கள் மற்றும் குற்றவியல் வன்முறைகளைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள அனைத்து இந்திய நாட்டவர்களும், பயணம் செய்ய நினைப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சமீபத்தில், குறிப்பாக இந்திய தூதர்கள் மற்றும் இந்தியாவுக்கு எதிரான அஜண்டாவை எதிர்க்கும் இந்தியப் பிரிவினரை குறி வைத்து அச்சுறுத்தல்கள் வந்துள்ளன. எனவே இந்திய குடிமக்கள் கனடாவில் இது போன்ற சம்பவங்கள் நடந்த பகுதிகள் மற்றும் சாத்தியமான இடங்களுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்” எனவெளியுறவு அமைச்சகம் தனது ஆலோசனையில் தெரிவித்துள்ளது.