June 2, 2023

அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் – சசிகலா அறிவிப்பு + காரணம் என்ன?

தமிழக அரசியலைப் புரட்டிப் போடும் வல்லமைப் படைத்தவர் என்று பலராலும் வர்ணிக்கப் பட்ட சசிகலா நேற்று அதிரடியாக, ‘நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய நான் என்றும் தெய்வமாக வணங்கும் அக்கா புரட்சித்தலைவி இடமும் எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன்’ என்றொரு அறிக்கை விட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 24 ம் தேதி மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு அ.தி.மு.க லெட்டர் பேடில் பொதுச்செயலாளர் என்று அ கேம்ப் ஆபீஸ் என்றெல்லாம் குறிப்பிட்டு கையெழுத்திட்டு இருந்த வி.கே.சசிகலா தற்போது அரசியலில் இருந்து விலகுவதாக வி.கே.சசிகலா அறிவித்துள்ளதன் பின்னணி குறித்து ஆளாளுக்கு ஏதேதோ சொல்லி வருகிறார்கள்

அரசியலில் இருந்து விலகும் முடிவை சசிகலா மனப்பூர்வமாக எடுத்திருக்கமாட்டார்..சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு அவர் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் மனம் வெறுத்து இந்த முடிவை எடுத்திருக்கிறார் என்கிறார்கள்

சசிகலா மீதான வழக்குகள் எல்லாம் மத்திய அரசின் அமைப்புகளால் தொடரப்பட்டது என்பதால், சசிகலா அரசியலில் தனித்து இயங்கினால் அது அதிமுக கூட்டணிக்கு பாதகமாகிவிடுமோ என்று அஞ்சுவதாலும், அதனால் மத்திய அரசின் அதிருப்தியை சம்பாதிக்க வேண்டியிருக்குமோ எனக் கலங்குவதாலும் அவர் இத்தகைய முடிவை எடுத்திருப்பதாக ஒருதரப்பு தெரிவிக்கின்றது. சிலர், அவர் உடல்நலம் ஒத்துழைக்காது என்பதால் எடுக்கப்பட்ட இயல்பான முடிவு என்று சொல்கின்றனர்.

அதே சமயம் டி டி வி தினகரன், “தொண்டர்கள் ஒற்றுமையாக இருப்பார்களே என்பதாலேயே அவர் அப்படி சொல்லியிருக்கிறார். அதை அவரே அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.தான் ஒதுங்கி இருந்தால்தான் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என அவர் நம்புவதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்

வி.கே.சசிகலா வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நான் என்றும் வணங்கும் என் அக்கா, புரட்சித்தலைவியின் எண்ணத்திற்கு இணங்க, அவர் கூறியபடி இன்னும் நூறாண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் புரட்சித் தலைவர் மற்றும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மாவின் பொற்கால ஆட்சித் தொடர, ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகளான அம்மாவின் உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.

நம்முடைய பொது எதிரி, தீய சக்தி என்று அம்மா நமக்கு காட்டிய திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அம்மாவின் உண்மைத் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்கள் அனைவருக்கும் என் உளப்பூர்வமான நன்றிகள்.

அம்மா அவர்கள் உயிருடன் இருந்தபோது, எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன்.

நான் என்றும் பதவிக்காகவோ பட்டத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. புரட்சித் தலைவியின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கு நான் என்றென்றும் நன்றியுடன் இருப்பேன்.

நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என் அக்கா புரட்சித் தலைவியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்து கொண்டே இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதை அடுத்து சசிகலா விலகல் குறித்து டிடிவி தினகரன் அளித்த பேட்டியில், “அரசியலை விட்டு ஒதுங்குவதாக சசிகலா அறிக்கை வெளியிட்டிருப்பது எனக்கு வேதனையளிக்கிறது. தொண்டர்கள் ஒற்றுமையாக இருப்பார்களே என்பதாலேயே அவர் அப்படி சொல்லியிருக்கிறார். அதை அவரே அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். தான் ஒதுங்கி இருந்தால்தான் எல்லோரும் ஒற்றுமையாக இருப்பார்கள் என அவர் நம்புவதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.

தேர்தல் களத்தில் தான் ஒரு பேசுபொருளாக இருக்க அவர் விரும்பவில்லை என்பதால் இத்தகைய முடிவை எடுத்திருக்கிறார். அதனால், அரசியலைவிட்டு சசிகலா ஒதுங்குவதால் இனி பின்னடைவு என்றெல்லாம் சொல்லிவிட முடியாது.

ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமையவேண்டும் என அவர் தெளிவாகக் குறிப்பிட்டு இருக்கிறார். அவருடைய சுயமான முடிவு இது. எனது சித்தி என்பதற்காக அவர் மீது எனது கருத்துகளை நான் திணிக்க இயலாது. அவரின் மனசாட்சியாக நான் பேசவும் முடியாது” என்று தெரிவித்தார்.