விஸ்வாசம் – விமர்சனம்!

விஸ்வாசம் – விமர்சனம்!

நம்ம கோலிவுட் நாயகர்களின் டாப் லிஸ்ட்-டில் உள்ளவர்கள் நாலைந்து பேர்கள்தான். அவர்களும் ஆண்டுக்கு ஒரு படமோ அல்லது இரண்டு படமோ வழங்குகிறார்கள். அதையும் தன் மாஸ்-சைக் காட்டும் கதைக்களத்தை காட்டும் ஸ்கிரின் பிளேக்களை மட்டுமே தேர்ந்தெடுக்கிறார்கள். இதிலும் ஓரிருவர் கதை களம் என்பதில் உள்ள கதையை சட்டை செய்யாமல் களத்தை மட்டுமே செலக்ட் பண்ணும் போக்கும் அதிகம். அதாவது ஓப்பன் பண்னா ஹீரோ எண்ட்ரி, அதைத் தொடர்ந்து ஹீரோ யின், கூடவே வில்லன், இந்த மூன்று கேரக்டர்களையும் கோர்த்துக் கட்ட கொஞ்சம் உதிரிப் பூக்கள் (நடிக/ நடிகைகள்), நாலு ஃபைட்டு, நாலு சாங், க்ளைமாக்சில் ஹீரோ ஜெயிச்சு சிரிச்சு ரசிகனை அனுப்பணும். இதுதான் பெரும்பாலான திரைப்படங்களின் திரைக் கதைச் சுருக்கம். அப்படியான ஒரு படமே ‘விஸ்வாசம்’. அதே சமயம் இதில் எக்ஸ்ட்ராவாக நம்மளோட கடந்த காலத்தையும், நிகழ் காலத்தையும், நம்ம குழந்தைகளோட எதிர்காலத்துல திணிக்க வேண்டாங்க. குழந்தைங்க வளரட்டுங்க, சந்தோஷமா, குழந்தைங்களாவே – அப்படீன்னு ஒரு யூஸ்ஃபுல் மெசெஜ் கூட சொல்லும் படமிது என்பதுதான் சிறப்பு.

கதை முன்னரே சொன்ன ஃபார்முலாபடி பழசுதான். தேனி கிராமத்தில் படிப்பறிவு இல்லாத பணக் கார, அடிதடி, அடிபொடிகளோடு அலப்பறை செய்தபடி வலம் வரும் நாயகன் தூக்குத்துரை (அஜித்). ரொம்ப பெரிய டாக்டரா வரும் நிரஞ்சனா. இருவருக்கும் மோதலாகி அதுவே வழக்கம் போல் காதலாகி, கல்யாணமாகி, குழந்தையாகி திருப்தியாக போய் கொண்டிருக்கும் வாழ்க்கையில் பிளவு எற்படுத்தும் ஒரு சம்பவம் ஏற்பட்டு விடுகிறது. உடனே நயன் அஜித்துக்கு குட் பை சொல்லி விட்டு குழ்ந்தையுடன் மும்பை போய் செட்டிலாகி விடுகிறார்.

அதையடுத்து கிட்டத்தட்ட 10 வருடங்களாக தன் மனைவியையும் குழந்தையையும் பிரிந்து வாழும் அஜித் ஊரார், உறவினர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க மனைவியுடன் மறுபடியும் இணைய மும்பை போகிறார். போன இடத்தில் மகளின் உயிருக்கு ஆபத்தெனத் தெரிந்து, அதிலிருந்து மகள் ஸ்வேதாவைப் பாதுகாக்க பெத்த மகளுக்கே ‘அங்க்கிள்’ என்ற அடைமொழி யுடன் எஸ்கார்டாக இருந்து ஸ்வேதாவிற்கு ஏன், யாரால் ஆபத்து என்பதை கண்டறிந்து, மகள் மனைவியுடன் கிராமத்துக்கே திரும்புவதுதான் முழுக் கதை.

அஜித் வேஷ்டி சட்டை, முழுமையான வெண் தாடி & முடியுடன் தான் படத்தின் பெரும் பகுதி வருகிறார்.  பல காட்சிகளில் அழகாக தெரியும் அஜித் குளோஸ் அப் காட்சியில் கண் பீழையைக் கூட அப்பட்டமாக காண்பித்து முகம் சுளிக்க வைக்கிறார்(கள்). அதே சமயம் பிளாஸ் பேக்கில் வரும் கிராமத்து அஜித் நயனிடம் லவ்ஸ் விடுவதும், ஆடுவதும் ,பாடுவதும் ரசிக்க வைக்கிறார். பின்னர் மும்பையில் தன் மகளே தன்னை துரை அங்க்கிள் என்று அழைக்கும் போதும் ஓட்டப் பந்தயத்தில் தன் காலடியில் அப்பாவை நினைத்து மிதித்துக் கொண்டு ஓடுகிறேன் என்று சொல்வதை கேட்டு அதிர்வதையும் ரசிகனுக்கும் புரிய வைப்பதில் ஜெயித்து விட்டார்.

நயன்தாரா தன் கேரக்டருக்கு என்ன தேவையோ அத்தனையையும் ரொம்ப பர்பெக்ட்டாக வழங்கி இருக்கிறார். அஜித் என்னும் வேற லெவல் நடிகரை சில சமயம் ஓவர் டேக் செய்து விடும் நடிப்பு நயனுக்கு கை வந்த கலையாகி விட்டது.

அஜித் மகளாக வரும் என்னை அறிந்தால் அனிகாவுக்கு ஒரு பூங்கொத்தே கொடுக்கலாம். ஆர்வம், மகிழ்ச்சி, அன்பு ,பயம், பீதி,கவலை, கோபம், நெகிழ்ச்சி என எல்லா உணர்ச்சிகளையும் முழுமை யாகக் கொடுத்து தனிக் கவனம் பெறுகிறார்.

காமெடி என்ற பெயரில் யோகி பாபு, தம்பிராமையா, ரோபோ சங்கர், விவேக், கோவை சரளா   எல்லோரும் இருந்தாலும் அஜித்-தான் அப்பப்போ சிரிக்க வைத்தார்.

வில்லன் ஜெகபதிபாபு.. மகளின் நிலைமையைக் கண்டு வெகுண்டெழுந்து அஜித் மகளை போட்டுத் தள்ள முயலும் வில்லன்.. சொன்னதை செய்திருக்கிறார்.

டி.இமான் 6 பாடல்களை கொடுத்துள்ளார். அதிலும் கண்ணாண கண்ணே பாடல் நெஞ்சை வருடுகிறது. அடிச்சி தூக்கு பாடல் ஆட வைக்கிறது. அதேபோல் பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்துள்ளார் இமான்.

வெற்றியின் ஒளிப்பதிவில் டைட்டிலின் போது பச்சை பசேல் என்று ஆரம்பித்து மும்பையையும் உறுத்தாமல் காட்டி படத்துக்கு பலம் சேர்த்துள்ளார்..

ஒரு கமர்சியல் சினிமாவுக்கு உண்டான ஃபார்முலாவை முக்கால்வாசி கடைப் பிடித்திருக்கிறார் கள் சிவா & அஜித். அதே சமயம் பைக் ஓட்டும் போது ஹெல்மெட் போட்டப்படியே வண்டி ஓட்டும் அஜித் சமப்ந்தமே இல்லாமல் குழந்தையை கையில் பிடித்தப்படி அரிவாள் சண்டை போடுவதெல் லாம் டீ மச்.. ஆனாலும் அதுதான் கதையின் ட்விட்ஸ் என்பதால் இந்த சீனை இன்னும் கவனமாக செய்திருக்கலாம். மேலும் ஒரு கிராமத்து அல்லபறை மும்பையிலும் அதே பாணியின் அதகளம் பண்ணுவதெல்லாம் நம்பும் படியாக இல்லை என்றாலும் ஆரம்ப பேராவில் சொன்னது போல் இது டாப் லிஸ்ட் நாயகனின் படம் என்பதால் லாஜிக் இல்லாத மேஜிக்

மார்க் 3.25 / 5

error: Content is protected !!