விசிறி – விமர்சனம்! = டைம் பாஸ் என்பதை மீறி உபயோகமான படம்!
இயல்-இசை-நாடகம் என ஆர்வத்துடனும் ஆர்பாட்டத்துடனும் ஆரம்பித்த திராவிடத்தமிழ்ப் பண்பாடு தற்போது ஓயின்-ஓசை-ஊடகம் என்று அற்புதமாக விரிந்திருந்தாலும் நம் இந்திய மண்ணில் ரசிகர்கள் என்ற புதிய ’ஜந்து’களை தோற்றுவித்தவர்கள் தமிழர்கள் என்பது பெருமைக்குரிய விஷயமே. அப்படியான ரசிகர் மன்றங்களே அரசியல் கட்சியாக உருமாறி ஆட்சியைப் பிடித்த வரலாறெல்லாம் நம் தமிழனுக்குத்தான் உண்டு. நம் முந்தைய நடிகர்களான தியாகராஜ பாகவதர், பி.யூ. சின்னப்பாவுக்கும் ரசிகர்கள் இருந்தார்கள், ஏன்..டி.பி.ராஜலட்சுமி, பானுமதிக்கும் கூட ரசிகர்கள் இருந்தார்கள். ஆனால், ரசிகர்க்ள் கூட்டத்தை மன்றம் என்ற ஒர் அமைப்பில் இணைத்த பெருமை எம்.ஜி.ஆர், சிவாஜிக்குத்தான் உண்டு. அதிலும் எம்ஜிஆர் தன் ரசிகர் மன்றங்கள் மூலம் ஆட்சியை பிடித்தது அறிந்து கொண்ட பிறகு நடிக்கும் ஒவ்வொருவரும் தங்களுக்கு புதுப் படம் கமிட் ஆவதை விட ரசிகர் மன்றம் தொடங்க ஆர்வமாகி விடுவது வாடிக்கையாகி விட்டது. அப்படியான இரண்டு ஹீரோக்களின் ரசிகர்களின் பின்னணி மற்றும் இன்றைய இளைஞர்களின் போக்கைக் கொண்டு ‘விசிறி’ என்ற டைட்டிலில் அருமையான ஒரு பொழுது போக்கு படத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் வெற்றி மகாலிங்கம்.
படத்தின் கதை என்னவென்று கேட்டால் – இப்போதைய ட்ரெண்டிங்கில் இருக்கும் தல மற்றும் தளபதி ரசிகர்கள் பேஸ்புக்கில் கமெண்டிட்டு, கலாய்த்து மோதி கொள்கிறார்கள். அந்நிலையில் தமிழ் சினிமாவுக்கே உரித்தான ஸ்டைலில் தல ரசிகன் தளபதி ரசிகன் தங்கையை காதலிக்கிறான். அந்த காதல் திடீரென பிரேக் அப் ஆகி விடுகிறது. உடனே தல ரசிகன் தளபதி ரசிகனை நேரில் பார்த்து சமாதானமும், சம்பந்தமும் பேசும் நோக்கில் போகிறான். ஆனால் அங்கு நாயகி வந்து ‘இவன் என் அந்தரங்க போட்டோகளை வைத்துக் கொண்டு பிளாக் மெயில் செய்தான்’ என்று சொல்லி வெகுண்டெழுந்த நிலையில்.. அந்த காதல் கைகூடியதா? இல்லையா? என்பதுதான் மிச்சக் கதை.
ரொம்ப சிம்பிளான கதை, கேஷூவலான ஸ்கீரின் பிளே என்றாலும் பல வசனங்கள் மூலம் தற்போதைய இளைஞர்களின் மனநிலையை வெகு யதார்த்தமாக காட்டி சபாஷ் வாங்குகிறார். அதிலும் மினிமம் பட்ஜெட், புதுமுகங்கள், கதைக்காக எடுத்துக் கொண்ட மாஸ் ஹீரோக்களின் இமேஜ் போன்ற எல்லாவற்றையும் கவனமாக கருத்தில் கொண்டு ஒரு உருப்படியான படத்தை வழங்கியுள்ளார்கள். ஒரு காட்சியில் நாயகன் தற்கொலை செய்து கொள்ள போவதை பேஸ்புக்-கில் லைவ் செய்ய ஆயத்தமாகும் போது கிண்டல், வாழ்த்து, நக்கல் நையாண்டியான கமெண்டுகள் மட்டும் அடிப்பது, காதலர்கள் தங்கள் அந்தரங்க போட்டோக்களை பகிருவதன் பாதகம், பிளவுப்பட்டு கிடக்கும் பல ரசிகர் மன்றங்கள் ஒன்றிணைந்தால் என்ன செய்ய முடியும் என்பதையெல்லாம் ஒரு பொருத்தமான காட்சி அமைப்புகள் மூலம் சொல்லி இருக்கிறார்கள்.
மொத்தத்தில் குடும்பத்தோடு பொழுது போக்க சினிமா பார்க்க தயாரானவர்கள் இந்த ‘விசிறி” படத்துக்கு போனால டைம் பாஸ் எனபதை மீறி உபயோகமாகவும் இருக்கும் என்பதுதான் ஹைலைட்!
மார்க் 5 / 2.75