June 2, 2023

கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்! – விராட் கோலி அறிவிப்பு!

நடக்க இருக்கும் டி20 தொடரை எதிர்கொள்வதற்கு முன்னதாகவே விராட் கோலியின் கேப்டன்ஷிப் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.எனினும் அவர் அந்த விமர்சனங்களை எல்லாம் எதிர்கொண்டு வருகிறார். இந் நிலையில் திடீரென்று டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார்.  எதிர்வரும் உலகக் கோப்பை டி20 தொடருக்கு பின்னதாக கேப்டன் பொறுப்பிலிருந்து விலக உள்ளதாக கோலி தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோலி வெளியிட்ட ஸ்டேட்மெண்டில் “இந்திய அணிக்காக சர்வதேச அரங்கில் விளையாட வாய்ப்பு கிடைத்தது மட்டுமின்றி அணியை வழிநடத்திய முறையிலும் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. இந்த பயணத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் எனது நன்றிகள். அணி வீரர்கள், ஊழியர்கள், பயிற்சியாளர்கள், தேர்வுக் குழு மற்றும் இந்தியாவின் வெற்றிக்காக பிரார்தனை மேற்கொண்ட ஒவ்வொரு இந்தியரும் தான் எனக்கு பக்கபலம். அவர்கள் இல்லாமல் என்னால் இதை செய்திருக்க முடியாது.

பணிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளேன். கடந்த 8 – 9 வருடங்களாக மூன்று பார்மெட் கிரிக்கெட்டிலும் விளையாடி வருகிறேன். 5 – 6 வருடங்களாக அணியை கேப்டனாக வழிநடத்தியும் வருகிறேன். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அணியை திறம்பட வழிநடத்த வேண்டுமென்ற யோசனையில் இந்த முடிவை எடுத்துள்ளேன். எனது ஆற்றல் அனைத்தையும் டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக செயல்பட்டபோது அர்பணித்துள்ளேன். கேப்டனாக இல்லை என்றாலும் அணியில் பேட்ஸ்மேனாக தொடர விரும்புகிறேன்.

இந்த முடிவை எடுக்க எனக்கு நீண்ட நாள் தேவைப்பட்டது. ஆழ்ந்த சிந்தனை மற்றும் நீண்ட ஆலோசனைக்கு பின்னதாக இந்த முடிவை எடுத்துள்ளேன். குறிப்பாக எனக்கு மிகவும் நெருக்கமான அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மற்றும் ரோகித் ஷர்மாவுடன் இது தொடர்பாக பேசிய பிறகே இந்த முடிவை எடுத்தேன். எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.

இதை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா, தலைவர் கங்குலி மற்றும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் என அனைவரிடத்திலும் தெரிவித்தாகிவிட்டது. இந்திய கிரிக்கெட்டுக்காக தொடர்ந்து சேவை புரிவேன். அணிக்காக எனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்று தெரிவித்துள்ளார்.