வினேஷ் போகத் ஓய்வு அறிவிப்பு!

வினேஷ் போகத் ஓய்வு அறிவிப்பு!

பாரிஸ் ஒலிம்பிக்கில் மகளிருக்கான மல்யுத்தத்தில் 50 கிலோ எடைப் பிரிவில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற அரையிறுதியில் கியூபா வீராங்கனை யூஸ்னிலிஸ் குஸ்மேனுடன் மோதினார் இந்தியாவின் வினேஷ் போகத். இதில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இதன்மூலம்,வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்ததுடன், ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.

இறுதிப் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த சாரா சாரா அன் ஹில்டெப்ராண்டுடன் மோத இருந்தார் வினேஷ் போகத்.இந்த ஆட்டம் நேற்று இரவு நடக்க இருந்தது. முன்னதாக காலை 9 மணி அளவில் வினேஷ் போகத்துக்கு எடை தகுதி சோதனை நடத்தப்பட்டது. இதில் அவரது உடல் எடை 50 கிலோ 100 கிராம் இருந்தது தெரியவந்தது. நிர்ணயித்த 50 கிலோவைவிட 100 கிராம் எடை அதிகம் இருந்ததால் ஒலிம்பிக் போட்டியில் இருந்து அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. 3-வது முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள வினேஷ் போகத், இம்முறை பதக்கத்துடன் நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.இந்நிலையில் அம்மா, என்னை மன்னியுங்கள். மல்யுத்தம் என்னை வென்றுவிட்டது, நான் தோற்றுவிட்டேன். உங்கள் கனவுகளும் என் தைரியமும் உடைந்துவிட்டது. இனியும் சண்டையிட எனக்கு வலிமை இல்லை: -என்று தெரிவித்து மல்யுத்த போட்டிகளில் இருந்தே ஓய்வையும் அறிவித்து விட்டார் வினேஷ் போகத்.

,29 வயதான வினேஷ் போகத், ஒலிம்பிக் போட்டிகளின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய பெண் மல்யுத்த வீராங்கனை என்ற பெருமையை பெற்றவர் ஆவார். பெண்களுக்கான 50 கிலோ எடைப் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்து இருந்த நிலையில் அதிக எடை இருந்ததன் காரணமாக மல்யுத்த இறுதி போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இத்தனைக்கும் பட்டினி கிடப்பது, தண்ணீர் உள்ளிட்ட திரவ பொருட்களை தவிர்ப்பது மற்றும் இரவு முழுவதும் விழித்திருந்து வியர்வையை வெளியேற்றுவது உள்ளிட்ட தீவிரமான எடை குறைப்பு நடவடிக்கைகளில் வினேஷ் போகத் ஈடுபட்டாலும் அது அவருக்கு பலன் அளிக்கவில்லை. இருப்பினும், தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் மேல்முறையீடு செய்தார். அனுமதிக்கப்பட்ட எடையில் இருந்து 100 கிராம் அதிக எடையுடன் இருந்ததால் தனக்கு கூட்டு முறையில் வெள்ளிப்பதக்கம் தர வேண்டும் என அவர் கோரிக்கை வைத்து உள்ளார். இச்சூழலில், வினேஷ் போகத்தின் ஓய்வு அறிவிப்பும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இத்தனைக்கும் காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கம், உலக சாம்பியன்ஷிப் தொடரில் ஒரு வெண்கலம் மற்றும் ஆசியப் போட்டிகளில் ஒரு தங்கம் மற்றும் ஆசிய சாம்பியன்ஷுப் ஆகியவற்றை வென்று சாதனை படைத்தவர் வினேஷ் போகத். கடந்த 18 மாதங்களில் ஏராளமான போராட்டங்களை சந்தித்த வினேஷ் போகத், ஒலிம்பிக் பதக்கம் வெல்வதில் தீவிரமாக இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் நடந்த திருப்பங்களில், பதக்க கனவுடன் ஓய்வை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தைக் கொடுத்திருப்பதென்னவோ நிஜம்

error: Content is protected !!