June 2, 2023

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் பிள்ளை பட இசை வெளியீட்டு விழாத் துளிகள்!

KNR மூவிஸ் சார்பில் KNR ராஜா தயாரித்து, அவரே கதாநாயகனாக நடித்து இயக்கியுள்ள படம் மாவீரன் பிள்ளை. இந்த படத்தில் கதாநாயகியாக நடிப்பதன் மூலம் மறைந்த வீரப்பனின் மகள் விஜயலட்சுமி சினிமாவில் அடி எடுத்து வைத்துள்ளார். முக்கிய வேடத்தில் தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவி நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு மஞ்சுநாத் ஒளிப்பதிவு செய்ய, பாடல்களுக்கு ரவிவர்மா இசையமைத்துள்ளார். பின்னணி இசையை பிரேம் அமைத்துள்ளார். ‘படத்தொகுப்பை ஜூலியன் மேற்கொள்ள, பாடல்களை ஆலயமணி எழுதியுள்ளார்..

இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் பேரரசு, அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா, நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் இவர்களுடன் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமியும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும் இயக்குனருமான KNR ராஜா பேசும்போது, “எல்லா வீடுகளிலும் ஏதோ ஒரு வகையில் மதுவால் பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. மதுவிற்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் மிகுந்த கஷ்டப்பட்டு இந்த படத்தை எடுத்துள்ளேன்” என்று கூறினார்.

இசையமைப்பாளர் ரவிவர்மா பேசும்போது, “இந்த படத்தில் நான்கு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் குறிப்பாக சாராயம் அபாயம் என்கிற பாடலை பாடலாசிரியர் ஆலயமணி எழுதி அவரே பாடியும் உள்ளார். இந்த படத்திற்கு நான் பாடல்களுக்கு மட்டும் இசையமைத்துள்ளேன். பின்னணி இசையை பிரேம் அமைத்துள்ளார். முதல் படத்தில் கமர்சியலாக சம்பாதிக்க நினைக்காமல் இப்படி ஒரு சமூகத்திற்கு தேவையான ஒரு படத்தை தயாரிப்பாளர் ராஜா எடுத்துள்ளார் என்றால், அவரது சகோதரர் குறைந்த வயதிலேயே மதுவால் மரணம் அடைந்த தாக்கம் தான் அதற்கு காரணம். இது தர்மபுரி மாவட்டத்தில் நடக்கும் கதையாக உருவாகியுள்ளது. பல காட்சிகளில் டாஸ்மாக்கிலேயே நிஜமாக படப்பிடிப்பு நடத்தி உள்ளோம்.

நாயகி விஜயலட்சுமி பேசும்போது, “சின்ன வயதில் இருந்தே நடிக்க வேண்டும் என்கிற விருப்பம் இருந்தது. என்னுடைய தந்தை தனிமனித ஒழுக்கத்துடன் வாழ்ந்து ஒரு முன் உதாரணமாக இருந்தவர். சமூகத்தில் ஒரு பக்கம் குடி, இன்னொரு பக்கம் காதல் என்கிற பெயரில் பெண்கள் சீரழிக்கப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. இவற்றை மையமாக வைத்து திரைப்படம் எடுத்தால் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். அதனாலேயே இந்த படத்தில் நடிக்க ஒப்புக கொண்டேன் நிச்சயமாக என் தந்தையின் பெயருக்கு எந்தவித களங்கமும் வராமல் அவரது பெயரை காப்பாற்றுவேன்” என்று கூறினார்.