வாரிசு – விமர்சனம்!

வாரிசு – விமர்சனம்!

வீனமயமாகி விட்ட இவ்வுலகில் ஒரு கல்யாண வீட்டுக்குப் போனால் முகம் தெரியாதவர் வரவேற்று பன்னீர் தெளிப்பது தொடங்கி விருந்தோம்பலில் முன் பின் பார்த்திராவரின் பரிமாறல் வரை நிகழ்வது வாடிக்கைதானே.. அது போலொரு சினிமாவே ‘வாரிசு’ .. விஜய் என்ற ஹீரோவை மட்டும் நம்பி நீங்கள் யாராகயிருந்தாலும் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் குடும்பம்தான் உங்கள் அடையாளம் என்று காண்போரை உணர வைக்க முயன்றுள்ளது இந்த வாரிசு! அதாவது ஃபேமிலி ஆடியன்களுக்காகவே அம்மா – மகன், அப்பா – மகன், அண்ணன் – தம்பி என்ற அரத பழசான செண்டிமெண்டை நம்பி உருவாகியுள்ள இந்த வாரிசு படம் . மோசம் என்று சொல்வதற்கு இல்லை. ஆகா என்று பாராட்டுவதற்கும் தோன்றவில்லை. என்றாலும் பலருக்கும் பிடிக்கும்.

கதை என்று பார்த்தால் ஒன்றும் புதுசில்லை.. கோடீஸ்வர அப்பாராஜேந்திரனுடன் (சரத்குமார்) ஏற்படும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து செல்லும் மகன் விஜய் (படத்திலும் பெயர் விஜய்தான் ) அம்மாவின் (ஜெயசுதா) வற்புறுத்துதலால் ஏழு வருஷங்களுக்கு பிறகு திரும்பி வீட்டுக்குள் வருகிறார்.. ஆனால் அண்ணன்கள் இரண்டு பேர் உள்பட யாருக்கும் விஜய்யின் வருகை பிடிக்கவில்லை. இதனிடையே ராஜேந்திரன் தொழில் எதிரிகள் ராஜேந்திரனை வீழ்த்த நினைக்கிறார்கள். அதே நேரத்தில் தன் வீட்டில் உள்ள டைனிங் டேபிளில் ஒரு போதும் அனைவரும் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிடுவது கூட இல்லை.. இது போன்ற குழப்பத்தையும் இந்த சூழ்ச்சிகளையும், முறியடித்து சாதிக்கும் விஜயின் போக்கை வழக்கமான செண்டிமெண்ட், மாஸ் என மசாலா கலந்து சொல்லியிருக்கிறார் டைரக்டர் வம்சி.

விஜய் வழக்கம் போல் சார்மிங்காக இருக்கிறார். நடனக் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார். சிலபல இடங்களில் மூச்சு வாங்குவதெல்லாம் தெரிகிறது.. தன் ரசிகர்களுக்குத் தேவைப்படும் இடங்களில் பஞ்ச் வசனங்களை சரமாரியாகத் தெறிக்கவிட்டுக் கைத்தட்டல்களை அள்ளுகிறார். ஆக்சன் காட்சிகளில் பொறி பறக்கச் சண்டையிட்டு ரசிகர்களை சில்லறைகள் சிதற விடச் செய்கிறார். விஜய்யின் சொந்த வாழ்க்கையை பிரதிபலிப்பது போல் தோன்றுவதும் , சிலபல தன் முந்தைய படங்களை நினைவூட்டுவதும் நிஜம்..ஆனாலும் விஜய் அவருக்கான வேலையைக் கணக் கச்சிதமாகச் செய்துவிட்டுச் சென்றிருக்கிறார்.

ராஷ்மிகா மந்தனாவுக்கு பெரிய அளவில் படத்தில் கேரக்டர் இல்லை என்றாலும், ரஞ்சிதமே பாடலில் விஜய்க்கு ஈடாக அவர் ஆடிய நடனம் அப்ளாஸ் பெறுகிறது. மிடுக்கான சரத்குமார், முகத்தில் அன்புக்கு ஏங்கும் அப்பவாக உணர்வுகளை சரியாக பிரதிபலிக்கிறார். ஜெயசுதா ஸ்ரீ காந்த், ஷாம், பிரகாஷ் ராஜ் என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள். விஜய் -யோகி பாபு இடையேயான டைமிங் காமெடிகள் நல்ல ஒர்க் அவுட் ஆகியுள்ளது.

படம் முழுதும் பிரம்மாண்டம். மிகப்பெரிய மாளிகை வீடு, அடேங்கப்பா என்ரு வைக்கும் சுரங்கங்கள், பிரம்மாண்டமான செட்களில் பாடல்… சகல காட்சிகளையும் சிறப்பாக படம் பிடித்துக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர்கார்த்திக் பழனி . தமன் இசையில் பாடல்கள், பின்னணி இசை இரண்டும் ரசிகர்களை கவர்கின்றன.

கதைதான் நம்ப முடியாதபடி இருக்கிறது. குடும்பத்தில் பலர் இருந்தும் வீட்டில் ஒரு வெறுமை இருப்பதை டைரக்டர் நன்றாக உணர வைத்துள்ளவர்
பல்லாயிரம் கோடி ரூபாய் புரளும் நிறுவனத்தின் சேர்மேன் யார் என்று வாக்கெடுப்பு நடக்க.. அங்கே காமெடி(கதை சொல்லி) ஜெயிப்பதும், அரசையே ஆட்டம் செய்யும் வில்லனுக்கு கடன் வழங்கும் எஸ்.ஜே.சூர்யா தன் ஆள் என்று சொல்லி ஏமாற்றுவது, வழக்கம் போல் பத்து அடியாக்களை அடித்து அண்ணன் மகளை மீட்பது என்று அடப் போங்கப்பா என்று சலிப்படையும் கதையோட்டம் கொண்ட காட்சிகளாகவும் எளிதில் யூகிக்க முடியும் சீன்களாலும் எல்லா ரசிக தரப்பையும் கவர தவறி விடுகிறது…

ஆனாலும் சீரியல் உலகில் மூழ்கி உள்ள தமிழ் சமூகத்திற்கு இந்த வாரிசு பிடிக்கும்

மார்க் 3.25/5

error: Content is protected !!