June 2, 2023

வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை உறுதி செய்ய வேண்டும்!- முதல்வரிடம் அன்புமணி கோரிக்கை!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த அன்புமணி ராமதாஸ், வன்னியர் உள் ஒதுக்கீடு 10.5 சதவீதத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தார்.

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் மாநில அரசு வன்னியர்களுக்கு 10.5 % உள் ஒதுக்கீடு வழங்கத் தடையில்லை, அதற்குத் தேவையான தரவுகளை சமர்ப்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மாநில அரசுக்கு அதிகாரம் உள்ள நிலையில், 10.5 % உள் ஒதுக்கீட்டை தமிழ்நாடு அரசு நிச்சயம் வழங்கும் என்று அன்புமணி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்தார்.

அப்போது, வன்னியர்களுக்கான 10.5 சதவிகித இடஒதுக்கீடு கோரிக்கை தொடர்பாக, முதலமைச்சரிடம் அன்புமணி ராமதாஸ் மனு அளித்தார். இந்த சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், முதலமைச்சரை சந்தித்தபோது, சட்ட வல்லுநர்களிடம் ஆலோசித்து வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த ஆவன செய்வோம் என்று முதலமைச்சர் உறுதி அளித்தார். உச்சநீதிமன்றத்தில் நடந்த வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழக்கில், தமிழ்நாடு அரசு, மிகத் திறமையான சிறந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாடியது என்பதை நாங்கள் முன்பே கூறி இருக்கிறோம். அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை என்றார்.