வாய்தா – விமர்சனம்!

டைரக்டர் மகிவர்மன் சி.எஸ் முதன் முறையாக இயக்கியுள்ள படம் ‘வாய்தா’. கதை என்னவென்றால் ஜாதி வெறிப் பிடித்த கிராமம் ஒன்றில் வாழும் சலவை தொழிலாளி ராமசாமி மீது இருசக்கர வாகனம் மோதியதி அவரது தோள்பட்டை எலும்பு முறிந்து போகிறது. அவருக்கு வக்காலத்து வாங்கும் ஊர் முக்கியப்புள்ளி இருசக்கர வாகனத்தை கைப்பற்றி பூட்டி வைக்கிறார். விபத்து ஏற்படுத்திய இளைஞரின் தந்தை, ராமசாமியிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தி கொஞ்சூண்டு பணத்தை நஷ் ஈடாக தர முயல்கிறார் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார் முக்கியபுள்ளி. பிரச்னை முற்றிய நிலையில் போலீஸ் வந்து ராம்சாமியை மிரட்டுகிறது. படிப்படியாக அந்த மோதல் முற்றி விவகாரம் கோர்ட் வரை போய் விடுகிறது. அங்கு நீதியை எப்படி தங்களுக்கு சாதமாக சிலர் வளைக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாக படம் விளக்க முயல்கிறது.
நாயகனாக புகழ் மகேந்திரனும் நாயகியாக ஜெசிகாவும் நடித்துள்ளனர். நாயகி காதல் காட்சிகளிலும், நாயகன் கோபமடையும் காட்சிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். இருவருக்கும் இது முதல் படம். நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் மு.ராமசாமியின் நடிப்பு அசர வைக்கிறது.
அதிலும் உடைந்த வலது கையை மடக்கி வைத்துக் கொண்டு பேசும் காட்சியிலும், மனதுக்குள்ளேயே புலம்பிக் கொள்ளும் காட்சியிலும் யதார்த்தமான நடிப்பை வழங்கியிருக்கிறார். நாசர் குறைந்த காட்சியில் வந்தாலும் நிறைவான நடிப்பை வழங்கியிருக்கிறார். ஆதிக்க சாதி கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒரு சிறிய சம்பவத்தை கருவாக எடுத்துக் கொண்டு அதில் எவ்வளவு சாதி அரசியல் நடக்கிறது என்பதை அக்கு வேறு ஆணி வேறாக அலசியி ருக்கிறார் இயக்குனர் மகிவர்மன் சி.எஸ். குறிப்பாக ஆதிக்க சாதியை சேர்ந்தவர்கள், கீழ் சாதி மக்களை எப்படிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், வழக்கறிஞர்கள் எப்படி நேரத்திற்கு ஏற்றார் போல் மாறுகிறார்கள், நீதித்துறை எப்படி பலவீனமாகவும் இருக்கிறது என்பதை சொல்லத்துணிந்த இயக்குநருக்கு சினிமா மொழி கைகூடவில்லை. இது படத்தின் பெரும் பலவீனம்.
மொத்தத்தில் வாய்தா – நேரம் கிடைத்தால் பார்க்கத் தகுந்தப் படம்
மார்க் 2.5/5