நமஸ்தே – இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – முதல் நாள் முழு ரிப்போர்ட்!

நமஸ்தே – இந்தியாவில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் – முதல் நாள் முழு ரிப்போர்ட்!

கடுமையான உழைப்பால் ஒரு இந்தியன் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு பிரதமர் மோடி வாழும் உதாரணம். அவரது கடுமையான உழைப்பால் டீ விற்பவர் என்ற நிலையில் இருந்து இன்று நாட்டின் பிரதமராகி உள்ளார் – என்று ட்ரம்ப் இந்திய பிரதமரை புகழ்ந்தார்.

அதிபர் டொனால்ட் டிரம்ப் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இது அதிபராக அவரது முதல் இந்திய பயணமாகும். அதிபர் டிரம்பை வரவேற்க பிரதமர் மோடி அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் விமானநிலையத்தில் காத்திருந்தார். மதியம் 11.37 மணியளவில் தனது ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் இருந்து அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா வந்து இறங்கினர். அவர்கள் இருவரையும் பிரதமர் மோடி வரவேற்றார்.அதிபர் டிரம்பை கட்டித்தழுவி வரவேற்ற பிரதமர் மோடி அதிபரின் மனைவி இன்வாங்கா பிராங்கை கைகுலுக்கி வரவேற்றார். விமானநிலையத்தில் கூடியிருந்த குஜராத் மாநில கலைஞர்கள் நடனமாடி அதிபர் டிரம்பை வரவேற்றனர்.

அதன் பின்னர் அதிபர் டிரம்ப், அவரது மனைவி மெலானியா மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்கள் பாதுகாவலர்கள் சூழ சபர்மதி ஆசிரமத்திற்கு சென்றனர்.இரு தலைவர்களும் சபர்மதி ஆசிரமத்திற்கு தனித்தனி கார்களில் பயணமானார்கள். அதிபர் டிரம்ப் ‘தி பீஸ்ட்’ என்றழைக்கப்படும் பிரத்யேகமான காடிலாக் -1 என்ற காரில் பயணம் மேற்கொண்டார்.

வழி நெடுக கலைஞர்கள் பாடல்கள் பாடி, நடமாடி அதிபர் டிரம்பை வரவேற்றனர்.

சபர்மதி ஆசிரமத்திற்கு வந்த அதிபர் டிரம்பை பிரதமர் மோடி வரவேற்று ஆசிரமத்தை சுற்றி காட்டினார். இருவரும் அங்கு 15 நிமிடங்கள் செலவிட்டனர்.

அமெரிக்க அதிபர் தனது துணைவியாருடன் சபர்மதி ஆசிரமத்துக்கு வந்து சேர்ந்ததும் ஆசிரம நிர்வாகி அவர்கள் இருவரையும் வரவேற்று கதர் துண்டுகளை அணிவித்தார்.

மகாத்மா காந்தியும் கஸ்தூர்பாவும் வாழ்ந்த அறையை டிரம்ப்பும் மெலனியாவும் சுற்றி பார்த்தனர் .அங்கு உள்ள பொருள்களை பற்றி மோடி விளக்கமளித்தார்.

அங்கு இருந்த மூன்று குரங்கு பொம்மைகள் சுட்டிக்காட்டி அதன் தத்துவத்தை டிரம்ப் தம்பதியருக்கு மோடி விளக்கினார்.

சபர்மதி ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த ராட்டையை சுட்டிக்காட்டி இதன் மூலம் நூல் நூற்க இயலும். மகாத்மாகாந்தி தினமும் குறிப்பிட்ட அளவு நூற்பது வழக்கம் என்று மோடி கூறினார்.

அதைத்தொடர்ந்து ராட்டையில் நூல் நூற்க டிரம்ப் முயற்சி செய்தார். டிரம்புக்கு ஆசிரமத்தில் இருந்த ஒரு பெண் உதவி செய்தார் .மெலானியா ராட்டையை சுழற்ற பஞ்சை பிடித்துக்கொண்டார் டிரம்ப். பஞ்சிலிருந்து நூல் இழுப்பதற்கு அந்தப் பெண் உதவி செய்தார்.

தொடர்ந்து சபர்மதி ஆசிரமத்தில் வைக்கப்பட்டிருந்த பதிவேட்டில் டிரம்ப கையெழுத்திட்டார்.
அதன் பிறகு டிரம்ப், மெலானியா, மோடி ஆகிய மூவரும் அந்த அறையிலிருந்து வெளியே வந்து சபர்மதி ஆசிரமத் திண்ணையில் சிறிது நேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

பின்னர் சபர்மதி ஆசிரமத்திலிருந்து அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியத் துக்கு மூவரும் புறப்பட்டனர். அங்கு அதிபர் டிரம்பை வரவேற்கும் ‘நமஸ்தே டிரம்ப்’ நிகழ்ச்சி நடைபெற்றது. சர்தார் வல்லபாய் படேல் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கூடியிருந்த சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பல்வேறு கலைஞர்கள் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி அதிபர் டிரம்பை வரவேற்று பேசினார்.

உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டுக்கு அதிபர் டிரம்பை வரவேற்பதாக கூறினார். அவரது வருகையால் புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி அறிவித்தார்.  பயங்கர வாதத்தை ஒழிப்பதில் அதிபர் டிரம்பின் பங்களிப்பை பிரதமர் மோடி பாராட்டி பேசினார். மேலும் இந்தியா – அமெரிக்கா இடையேயான உறவு இன்று மிக பெரிய உச்சத்தை தொட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதை அடுத்து நமஸ்தே என கூறி தன் உரையை துவக்கிய அதிபர் ட்ரம்ப், தனது இந்திய வருகை தனக்கு மிகவும் பெருமை அளிப்பதாக கூறினார்.

மேலும் போது , பிரதமர் மோடி மிக சிறந்த தலைவர். அவர் இந்தியாவுக்காக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். கடுமையான உழைப்பால் ஒரு இந்தியன் என்ன சாதிக்க முடியும் என்பதற்கு பிரதமர் மோடி வாழும் உதாரணம். அவரது கடுமையான உழைப்பால் டீ விற்பவர் என்ற நிலையில் இருந்து இன்று நாட்டின் பிரதமராகி உள்ளார். உலகின் மிக பெரிய ஜனநாயக நாடான இந்தியா மனித சமுதாயத்திற்கு நம்பிக்கை அளிக்கிறது. மேலும் குறுகிய காலத்திலேயே உலக நாடுகளுக்கு சவால் விடும் வகையில் பெரும் பொருளாதார சக்தியாக மாறியுள்ளது.

இந்தியாவின் பன்முகத்தன்மை, பல்வேறு கலாச்சாரங்கள், வளங்கள், மக்களின் ஒற்றுமை அனைத்தும் என்னை மிகவும் கவர்ந்துள்ளன. ஒரு நாடு அடக்குமுறையால் முன்னேறுவதற்கும் தன் மக்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிப்பதன் மூலம் முன்னேறுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

இந்தியா – அமெரிக்கா இடையே இயற்கையான நட்புறவு உள்ளது. இந்தியாவுடன் சிறப்பான வர்த்தக ஒப்பந்தத்தை உருவாக்குவோம். இந்தியாவுடன் 300 கோடி டாலருக்கு ஆயுத தளவாட விற்பனை ஒப்பந்தங்கள் செவ்வாயன்று முடிவு செய்யப்பட உள்ளன.

பயங்கரவாதத்தையும் பயங்கரவாத சிந்தனைகளையும் ஒழிக்க அமெரிக்கா – இந்தியா தொடர்ந்து போராடும். பாகிஸ்தான் அரசு தன் மண்ணில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்க நடவடிக்கை எடுக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எங்கள் முயற்சியால் பாகிஸ் தானின் செயல்பாட்டில் முன்னேற்றம் தெரிகிறது. அமெரிக்கா எப்போதும் இந்தியாவின் விசுவாசமான நண்பனாக இருக்கும். அமெரிக்காவில் 40 லட்சம் இந்தியர்கள் எந்த பிரச்சனையும் இன்றி மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.எனக்கு சிறப்பான வரவேற்பு அளித்த உங்கள் அனைவருக்கும் என் நன்றிகள்” என ட்ரம்ப் தெரிவித்தார்.

இதன் பின் அங்கிருந்து விமானம் மூலம் கேரியா விமானத் தளத்துக்கு வந்தார். கேரியா விமானத் தளத்தில் இருந்து 30-க்கும்மேற்பட்ட கார்கள், பாதுகாப்பு வாகனங்கள் அணிவகுக்க தாஜ்மஹால் அருகே இருக்கும் ஓபராய் அமரவிலாஸ் நட்சத்திர ஹோட்டலுக்கு ட்ரம்ப் சென்றார். தாஜ்மஹால் அருகே 15 ஆயிரம் பள்ளிக் குழந்தைகள் அமெரிக்க, இந்திய தேசியக் கொடியை ஏந்தி அதிபர் ட்ரம்ப்பை வரவேற்றனர்.

அதிபர் ட்ரம்ப்பை வரவேற்று சாலையெங்கும் மிகப்பெரிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன. பிரதமர் மோடி, ட்ரம்ப் சேர்ந்திருக்கும் பதாகைகளும் வைக்கப்பட்டன. தாஜ்மஹாலுக்கு வரும் பாதை முழுவதும் 3 அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அமெரிக்க அதிபர் வருகையையொட்டி நண்பகலுக்குப் பின் மக்கள் யாரையும் தாஜ்மஹாலைப் பார்க்க அனுமதிக்கவில்லை.

அதிபர் ட்ரம்ப் , அவரின் மனைவி மெலானியா டிரம்ப், மகள் இவாங்கா ட்ரம்ப், மருமகன் ஜார் குஷ்னர் ஆகியோர் தாஜ்மஹாலுக்கு வந்து அதன் அழகைக் கண்டு ரசித்தனர். அதிபர் ட்ரம்ப்பும், அவரின் மனைவி மெலானியாவும் தாஜ்மஹால் நடைபாதையில் கை கோத்து நடந்து அதன் அழகை ரசித்தனர். தாஜ்மஹாலின் பெருமைகள், வரலாற்றுச் சிறப்புகள் ஆகியவை குறித்து ட்ரம்ப்புடன் வந்த மொழிபெயர்ப்பாளர் விளக்கிக் கூறினார்.

தாஜ்மஹாலின் அழகை ரசித்த அதிபர் ட்ரம்ப், தனது மனைவி மெலானியாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். ட்ரம்ப் மகள் இவாங்கா, அவரின் கணவருடன் தனியாகப் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

அதன்பின் ட்ரம்ப் ட்விட்டரில் இந்தியில் தன் விசிட் குறித்து, “நானும் எனது மனைவியும் 8 ஆயிரம் மைல்கள் இந்த உலகைச் சுற்றி இருக்கிறோம். இந்திய மக்களுக்கு நாங்கள் ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறோம். அமெரிக்கா இந்தியாவை நேசிக்கிறது. அமெரிக்கா இந்தியாவை மதிக்கிறது. அமெரிக்க மக்கள் எப்போதும் இந்தியாவுக்கு உண்மையாகவும், நட்பாகவும் இந்திய மக்களுடன் இருப்பார்கள்” என்று கமெண்ட் போட்டுள்ளார்.

Related Posts

error: Content is protected !!