June 7, 2023

கொஞ்சம் கால அவகாசம் கொடுங்க..!- தேர்தல் ஆணையத்திடம் உதயநிதி ஸ்டாலின்

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடந்த மார்ச் 31-ம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையின் போது “பிரதமர் மோடி, நான் குறுக்குவழியில் வந்துவிட்டதாகக் குற்றம்சாட்டினார். இதை யார் சொல்கிறார் என்று பாருங்கள்… எத்தனை முக்கியத் தலைவர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, குஜராத்தின் முதல்வரானார் மோடி என்பது உங்களுக்குத் தெரியுமா? என்னிடம் பட்டியலே இருக்கிறது” என்றவர், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட சில தலைவர்களின் பெயரைப் பட்டியலிட்டார் மேலும் பேசிய அவர், “அருண் ஜெட்லி, சுஷ்மா ஸ்வராஜ் ஆகிய தலைவர்கள், மோடியின் சித்ரவதை காரணமாகத்தான் உயிரிழந்தனர்” என்று கூறினார். முன்னாள் மத்திய அமைச்சர்களின் மரணம் குறித்து உதயநிதி பேசியது இந்திய அளவில் சர்ச்சையானது. இந்த விவகாரத்தில் சுஷ்மா, அருண் ஜெட்லியின் மகள்கள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தனர். அத்துடன் தலைமை தேர்தல் அதிகாரியிடம் பாஜக சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜின் மரணங்கள் பற்றி தேர்தல் பரப்புரையில் பேசியது குறித்து இன்று மாலை 5 மணிக்குள் விளக்கமளிக்கும்படி உதயநிதி ஸ்டாலினுக்கு, தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது. இந்நிலையில் தாராபுரம் பிரசாரத்தில் சுஷ்மா சுவராஜ், அருண் ஜெட்லி குறித்து அவதூறாக பேசவில்லை என்று தேர்தல் ஆணையத்திடம் உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு அவர் எழுதியுள்ள பதில் கடிதத்தில், “கடந்த மார்ச் 31 தாராபுரத்தில் தான் பேசிய இரண்டு வரிகளை மட்டுமே எடுத்துக்கொண்டு என் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்த குற்றசாட்டுகளை நான் முழுமையாக மறுக்கிறேன். இதனை என்னுடைய இடைக்கால பதிலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இது குறித்து நேரடியாக விளக்கம் அளிக்க எனக்கு கால அவகாசம் தேவை. ஒரு பகுதி உரையை மட்டுமே கவனத்தில் கொண்டு, என் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது” என்று அதில் உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.