சிரியா விவகாரம்: அமெரிக்கா & ரஷ்யா நேரடி போர் வர வாய்ப்பு!- ஐ.நா. கவலை

சிரியா விவகாரம்: அமெரிக்கா & ரஷ்யா நேரடி போர் வர வாய்ப்பு!- ஐ.நா. கவலை

உஅல்கின் பெரியண்ணா என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவின் கூட்டு படைகள் சிரியாவில் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன என ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம் சிரியாவில் ரஷ்ய ராணுவம் முகாமிட்டிருப்பதால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடி போரில் ஈடுபடும் அபாயம் எழுந்துள்ளதாக ஐ.நா. பொதுச்செயலாளர் கவலை தெரிவித்துள்ளார்.

சிரியாவில் அதிபர் அல் ஆசாத் தலைமையிலான ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை கட்டுப்படுத்துவதற்காக அரசு ராணுவத்தினை பயன்படுத்தி வருகிறது. உள்நாட்டு போர் சூழ்ந்த சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை அங்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் வன்முறைக்கு பலியாகி உள்ளனர்.

கடந்த 7 ந் தேதி அந்நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் அருகே கிழக்கு கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்கள் பிடியில் உள்ள டூமா நகரை கைப்பற்ற ரஷ்ய ஆதரவு பெற்ற சிரிய அரசு படைகள் முற்றுகையிட்டன. இந்த நிலையில், கிழக்கு கூட்டா பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான ரசாயன தாக்குதலில் 70 பேர் பலியாகி உள்ளனர் என தகவல் வெளியானது.இந்த தாக்குதலில் விஷவாயுக்கள் பயன்படுத்தப்பட்டன என சந்தேகம் எழுப்பப்பட்டது. ஹெலிகாப்டர் ஒன்றில் இருந்து சரீன் என்ற நச்சு ரசாயன பொருள் அடங்கிய வெடிகுண்டு வீசப்பட்டிருக்க கூடும் என அமெரிக்க தொண்டு அமைப்பு ஒன்று குற்றச்சாட்டு தெரிவித்தது. எனினும் பலி எண்ணிக்கை 180ஐ தொட்டிருக்கும் என்றும், ஆனால் இரவு நேரம் மற்றும் தொடர் குண்டு வீச்சு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிய முடியவில்லை என்றும் தகவல்கள் தெரிவித்தன.

சிரியாவில் அதிபர் ஆசாத்தின் ரசாயன தாக்குதலை தடுக்க ரஷ்யா தோல்வி அடைந்து விட்டது என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு கூறினார். இந்த நிலையில், சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் வான்வழி தாக்குதலை நடத்துகின்றன என ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் விவரித்த போது, “சிரியாவில் ஆபத்து மிகுந்த ரசாயான ஆயுதங்கள் பதுக்கப்பட்டுள்ளன, தயாரிக்கப்படுகின்றன. இவற்றை அழிக்கும்வரை அமெரிக்க ராணுவம் சிரியாவில் அதிபர் பஷார் அல் அசாத் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்தும். இந்தத் தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தோடு, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இணைந்து செயல்படும். டூமா நகரில் நடத்தப்பட்ட தாக்குதல் என்பது மனிதர்கள் செய்யக்கூடியதல்ல, அது கொடிய தீயசக்திகள் செய்யத்தக்கவை.

சிரிய அரசிடம் இருக்கும் ரசாயான ஆயுதங்களை அழிக்கும் வரை அமெரிக்கா தொடர்ந்து தாக்குதல் நடத்தும். இந்தத் தாக்குதல்கள் சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இடங்கள், தயாரிக்கும் இடங்கள், விஷ வாயுக்கள் வைக்கப்பட்டு இருக்கும் இடங்களை நோக்கி இருக்கும்.

அமெரிக்க விமானங்கள் சக்திவாய்ந்த பி-1 போர் விமானங்கள், ஏவுகணை வீசும் கப்பல்கள் உள்ளிட்டவை சிரியா மீது நடத்தும் இந்தத் தாக்குதலில் ரஷ்யா, ஈரான் ஆகிய நாடுகள் தலையிடக்கூடாது. சிரியாவுக்கு ஆதரவாகவும் களமிறங்கக்கூடாது என்று எச்சரிக்கிறேன். குழந்தைகளையும், அப்பாவி மக்களையும் விஷ வாயு மூலம் கொன்று சிரியாவின் அதிபர் மிருக அசாத்துக்கு பின்புலமாக இருக்கும் ரஷியாவும், ஈரானும் ஒரு காரணம்”என்று டிரம்ப் அறிவித்தார்.

இதனிடையே சிரியாவில் ரஷ்ய ராணுவம் முகாமிட்டிருப்பதால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடி போரில் ஈடுபடும் அபாயம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் அந்தோனியோ குத்தேரஸ் கூறும்போது, ‘‘சிரியா விவகாரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமித்த கருத்து ஏற்படாதது கவலையளிக்கிறது. நிரந்தர உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் சிரியா பிரச்சினையில் சுமூக உடன்பாட்டை எட்ட வேண்டும். இந்தப் பிரச்சினை வரம்பை தாண்டிவிடக்கூடாது. அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 5 நாடுகளும் பொறுமை காக்க வேண்டும். கடந்த கால சம்பவங்களை மறந்துவிட்டு சிரியாவில் அமைதி திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றுக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related Posts

error: Content is protected !!