மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்கிறோம் : ட்விட்டர் அறிவிப்பு!
இந்திய நாட்டுக்கான ட்விட்டர் நிறுவனம் சார்பில் குறைதீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷ் நியமிக்கப்பட்டு உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
‘ட்விட்டர், பேஸ்புக்’ உள்ளிட்ட சமூக இணைய தளங்கள், ஓ.டி.டி., எனப்படும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் நிறுவனங்களின் பணிகளை முறைப்படுத்த புதிய விதிமுறைகளை மத்திய அரசு அமல் படுத்தியுள்ளது. இதன்படி, வெளிநாட்டில பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் இந்திய பயனாளிகளின் குறைகளை தீர்க்க, உள்நாட்டு குறை தீர்ப்பு அதிகாரி மற்றும் தனி அதிகாரம் பெற்ற தொடர்பு அதிகாரி ஆகியோரை முழு நேரமாக நியமிக்க வேண்டும்.
இந்த பதவிகளுக்கு ஆட்களை நியமிக்காமல், ‘ட்விட்டர் இந்தியா’ நிறுவனம் காலம் தாழ்த்தி வந்தது. தற்காலிகமாக அதிகாரிகளை நியமித்த்து. அவர்களும் பதவி விலகிவிட்டார்கள் என நீதிமன்றத்தில் கூறியது.
இந்நிலையில் டுவிட்டரில் வெளியான சில பதிவுகள் குறித்து புகார் அளிக்க விருப்பிய வழக்கறிஞர் ஒருவர், குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்கப்படவில்லை என டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ட்விட்டர் இந்தியாவுக்கு கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கு சில நாட்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்த போது, ட்விட்டர் இந்தியா தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டதாவது:
கடந்த இரண்டு நாட்களுக்கு முன் இடைக்கால தலைமை இணக்க அதிகாரியை நியமித்து உள்ளோம். இடைக்கால குறைதீர்ப்பு அதிகாரியை, ஜூலை 10ல் நியமிக்க உள்ளோம். தனி அதிகாரம் பெற்ற தொடர்பு அதிகாரியை நியமிக்க 2 வாரம் அவகாசம் வேண்டும். விதிகளை ஏற்பதாக கூறும் முதல் அறிக்கை, ஜூலை 11ல் தாக்கல் செய்யப்படும். 3 பதவிகளுக்கமான முழு நேர நிரந்தர அதிகாரிகளை நியமிக்க, 8 வாரங்கள் அவகாசம் வழங்க வேண்டும். “இவ்வாறு நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
குறைதீர்ப்பு அதிகாரி நியமனம்
இந்நிலையில், புதிய ஐடி விதிமுறைகளின்படி, இந்தியாவிற்கான குறைதீர்ப்பு அதிகாரியாக. இந்தியாவைச் சேர்ந்த வினய் பிரகாஷ் நியமிக்கப்பட்டு உள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்து உள்ளது. மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்பதாகக் கூறும் முதல் ஏற்பு அறிக்கையும் இன்று வெளியானது