கலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்!

கலவர பூமியானது அமெரிக்கா ; கருப்பினர் என்பதால் கொலை – ஒபாமா காட்டம்!

கருப்பர் ஜார்ஜ் கொடூர சாவில் நீதிகேட்டு போராட்டக்காரர்கள் திரண்டதால் அமெரிக்காவில் பதற்றம் நிலவியது. இதையடுத்து, பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப் பட்டு உள்ளது. அதே சமயம் சம்பவம் குறித்து முன்னாள் அதிபர் ஒபாமா உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் மின்னெபோலிஸ் பகுதியில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயது கருப்பின இளைஞர் கடந்த 27ம் தேதி போலீசால் கைது செய்யப்பட்டார். கள்ள நோட்டு பயன்படுத்தியதாக இவரை கைது செய்த போது போலீசார் இவரை காருக்கு வெளியே தள்ளி கழுத்தை நெரித்தனர். இதில் ஜார்ஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த ட்ரம்ப் ஆட்சி காலத்தில் அமெரிக்காவில் கருப்பர் இனத்தினர், வெள்ளை இன போலீசாரால் கொல்லப்படுவது தொடர்கதை ஆகி வருகிறது. அந்த வரிசையில், மின்னசோட்டா மாகாணம், மின்னபோலிஸ் நகரத்தில் ஜார்ஜ் பிளாய்ட் என்ற 46 வயதான கருப்பர் போலீஸ் காவலில் கொல்லப்பட்ட விவகாரம் விஸ்வ ரூபம் எடுத்து வருகிறது. அவரது மரணத்துக்கு நீதி கேட்டு மின்னசோட்டா, நியூயார்க், அட்லாண்டா என பல பகுதிகளிலும் கருப்பர் இன மக்கள் திரண்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டங்களின்போது போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல்கள் வெடித்தன. போலீசார் கண்ணீர்ப்புகை குண்டுகளை வெடித்து போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர். லாஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் அட்லாண்டா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா, ‘ அமெரிக்காவில் இப்படி கறுப்பின இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டது எனக்கு பெரிய அதிர்ச்சி அளிக்கிறது. இது சாதாரண விஷயம் கிடையாது. என்னால் இதை தாங்கி கொள்ள முடிய வில்லை. நாம் உண்மையில் 2020ம் ஆண்டில்தான் வசிக்கிறோமா என்று சந்தேகம் வந்து இருக்கிறது.

2020ல் இப்படி ஒரு விஷயம் அமெரிக்காவில் நடப்பது இயல்பானது கிடையாது. நாம் நமது குழந்தைகளுக்கு நல்ல ஒரு எதிர்காலத்தை உருவாக்க வேண்டும். இதனால் நாம் இப்போது வாழும் நாட்டை நல்லதாக நாம் மாற்ற வேண்டும். நாம் இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். கொல்லப்பட்ட ஜார்ஜுக்கு உடனே நீதி கிடைக்க வேண்டும். அவருக்கு நீதி கிடைப்பது மட்டுமே தீர்வு.

நாம் மொத்தமாக ஒரு மனித குலமாக இதில் தோல்வி அடைந்துவிட்டோம். நமது கொள்கை மற்றும் நிறத்திற்கு அப்பாற்பட்டு நாம் இதில் தோல்வி அடைந்துவிட்டோம். அமெரிக்காவில் சமத்துவமற்ற நிலை ஏற்பட்டுள்ளது. நாம் இந்த கருத்துக்களை வளர விட கூடாது.

இந்த மோசமான நோய் பரவும் காலத்தில் இயல்பு நிலை திரும்ப வேண்டும் என்பது தான் எல்லோரின் விருப்பம். ஆனால் அமெரிக்காவில் பல கோடி அமெரிக்கர்கள், அவர்களின் நிறம் காரணமாக ஒதுக்கப்படுகிறார்கள், கொலை செய்யப்படுகிறார்கள். அதை கவனத்தில் கொள்ள வேண்டும். அதை சரி செய்யாமல் நம்மால் இயல்பு நிலைக்கு திரும்பவே முடியாது.

இந்த புதிய தாக்குதல்கள், கொலைகள் என் மனதை பாதித்து உள்ளது. இது போன்ற கொலைகள் தொடர்கிறது. பலர் வரிசையாக நிறம் காரணமாக கொலை செய்யப்படுகிறார்கள். கறுப்பின மக்கள் வாழ வேண்டும். இந்த கொடூரமான சம்பவத்தால் கொல்லப்பட்ட ஜார்ஜுக்கு என் இரங்கலை நான் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே , அமெரிக்க ஜனாதிபதியின் வாஷிங்டன் வெள்ளை மாளிகை முன்பு வெள்ளிக் கிழமை போராட்டக்காரர்கள், ஜார்ஜ் பிளாய்டின் புகைப்படங்களை ஏந்தி திரண்டு வந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் வெள்ளை மாளிகை சிறிது நேரம் பூட்டப்பட்டதும் அதிபர் ட்ரம்ப் அம்மாளிகையில் உள்ள பாதாள அறைக்குள் போய் பதுங்கிக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!