ரயில்கள் வாடகைக்கு கிடைக்கும் – இந்திய ரயில்வே துறை அமைச்சகம் அறிவிப்பு!

பயணியர் மற்றும் சரக்கு ரயில் சேவை பிரிவுகளுக்கு அடுத்தபடியாக, ‘பாரத் கவுரவ்’ என்ற பெயரில் நாட்டின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் சுற்றுலாவுக்கு என பிரத்யேகமாக தனிப் பிரிவை துவக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. இதற்கு 190 ரயில்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும், அவற்றை தனியார் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி., இயக்க உள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் நேற்று அறிவித்தார்
நாடு முழுவதும் பயணிகள் மற்றும் சரக்கு ரயில் சேவைகளை ரயில்வேத்துறை வழங்கி வருகிறது. அந்த வகையில் நாடு முழுதும் 67 ஆயிரத்து 956 கி.மீ., தொலைவுக்கு ரயில் சேவை உள்ளது. இதில் பயணியர் போக்குவரத்து பிரிவில் 13 ஆயிரத்து 169 ரயில்களும், சரக்கு போக்குவரத்து பிரிவில் 8,479 ரயில்களும் இயக்கப்படுகின்றன.நாள் ஒன்றுக்கு 2.3 கோடி மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துகின்றனர். 30 லட்சம் டன் சரக்கு போக்குவரத்து நடக்கிறது.இந்நிலையில் பாரத் கவுரவ் எனும் பெயரில் 150க்கும் மேற்பட்ட சுற்றுலா ரயில்களை இயக்க அத்துறை முடிவு செய்துள்ளது. அதன்படி முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பான பயணங்களுக்கு தனியார் சுற்றுலா நிறுவனங்களோ அல்லது மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்களோ ரயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிய வாடகையையும் அந்நிறுவனங்களே நிர்ணயித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
இதற்கான ஆன்லைன் பதிவுக்கட்டணமாக ஒரு லட்சம் ரூபாயும், மேலும் பல கூடுதல் வசதிகளை பயன்படுத்த 1 கோடி ரூபாய் வைப்புத்தொகை செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, ஒடிசா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் ஆர்வமுடன் இருப்பதாக ரயிவேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இனி முக்கிய நிகழ்ச்சிகள் தொடர்பான பயணங்களுக்குத் தனியார் சுற்றுலா நிறுவனங்களோ அல்லது மாநில அரசுகளின் சுற்றுலா நிறுவனங்களோ ரயில்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். அதற்கான உரிய வாடகையை அந்நிறுவனங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.