மதுரையில் வரும் 12 ஆம் தேதிவரை முழு ஊரடங்கு நீட்டிப்பு!
மதுரையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக ஜூலை 5 வரை முழு முடக்கம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த முழு முடக்கம் மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிக்கை இதோ:
மாண்புமிகு அம்மாவின் அரசு, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொது மக்களை பாதுகாத்து, அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. அதனால் தமிழ்நாட்டில் சிகிச்சைக்குப் பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய்த் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்பு மிகக் குறைவாகவும் இருந்து வருகிறது.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் மத்திய அரசு, ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் அமல் படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும் தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல் படுத்தியது. இதைத் தொடர்ந்து, கொரோனா தொற்றின் நிலைமையை கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் 31.7.2020 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு மற்றும் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளிலும் முழு ஊரடங்கு 24.6.2020 அன்று முதல் 5.7.2020 வரை அமல்படுத்த உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த முழு ஊரடங்கின்போது கொரோனா நோய்த்தொற்று குறைந்திருப்பினும், கொரோனா நோய்த்தொற்றினை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இந்த முழு ஊரடங்கினை மதுரை மாவட்டத்தில், மதுரை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களில் மேலும் 7 நாட்களுக்கு அதாவது 6.7.2020 முதல் 12.7.2020 வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது