உலக செவித்திறன் நாளின்று-மெளன உலகில் ஒரு நிமிடம் சிந்திப்போம்!

உலக செவித்திறன் நாளின்று-மெளன உலகில் ஒரு நிமிடம் சிந்திப்போம்!

ந்த நிமிடம் நீங்க ஒரு நிமிஷம் கண்ணை மூடி யோசிச்சுப் பாருங்களேன்… உங்க வீட்ல பிடிச்ச பாட்டு ஓடிக்கிட்டு இருக்கலாம், யாராவது பேசிட்டு இருக்கலாம், ஆபீஸ்ல இருந்தா கம்ப்யூட்டர் கீ-போர்டு சத்தம் கேட்கலாம், டிராவல்ல இருந்தா வண்டி சத்தம்… இப்படிச் சுத்தி ஏதோ ஒரு சத்தம் கேட்டுக்கிட்டேதான் இருக்கு. ஒருவேளை, இந்தச் சத்தம் எல்லாம் திடீர்னு நின்னு போய், ஒரு நிமிஷம் அப்படியே ஒரு ஆழ்ந்த அமைதி நிலவுனா எப்படி இருக்கும்?

நிச்சயமா அந்தச் சூழலை வார்த்தையால விவரிக்கவே முடியாது. ஏதோ இந்த உலகத்துல இருந்து நாம தனிமைப்படுத்தப்பட்ட மாதிரி ஒரு உணர்வு வரும்ல? ஆனா, உலகத்துல சுமார் 44.6 கோடி பேர் அப்படித்தான் இருக்காங்க. ஏதாவது ஒரு குறைபாட்டால தங்களோட கேட்கும் திறனை இழந்து, ஒரு மெளன உலகத்துலதான் அவங்க வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்களோட இன்னல்களைப் புரிஞ்சுக்கவும், அவங்களுக்குச் சமூகத்துல உரிய வசதிகளைச் செஞ்சு தரவும் வலியுறுத்திதான் மார்ச் 3-ஆம் தேதியை ‘உலக செவித்திறன் நாளாக’ (World Hearing Day) உலக சுகாதார நிறுவனம் அறிவிச்சிருக்கு.

ஆபத்தில் குழந்தைகள்!

உலக சுகாதார நிறுவனம் சொல்ற தகவல் கொஞ்சம் அதிர வைக்குது. அடுத்த 30 வருஷத்துல செவித்திறன் பாதிப்பு இப்ப இருக்குறதை விட ரெண்டு மடங்கு அதிகமாகுமாம். இப்போ இருக்குற 44.6 கோடி பேர்ல, 3.4 கோடி பேர் சின்னக் குழந்தைங்கதான்.

நம்ம ஊரைப் பொறுத்தவரைக்கும், இந்தச் செவித்திறன் பாதிப்புக்கு முக்கியமான காரணமா மருத்துவர்கள் சொல்றது ‘நெருங்கிய உறவுத் திருமணம்’. சொந்தத்துல கல்யாணம் பண்ணிக்கிறதுனால பிறவிக் குறைபாடுகள் அதிகமா வருதுன்னு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி பேராசிரியை முத்து சித்ரா சொல்றாங்க. அதுமட்டும் இல்லாம, கர்ப்ப காலத்துல தாய்க்கு வர்ற வைரஸ் பாதிப்பு, குழந்தைக்கு வர்ற மஞ்சள் காமாலை, மூச்சுத்திணறல் இதெல்லாமும் காரணமா அமையுது.

வருமுன் காப்போம்… என்ன செய்யலாம்?

காது கேளாமை பாதிப்பை ஆரம்பத்திலேயே கண்டுபிடிச்சா, 60 சதவீதப் பாதிப்பைச் சரி பண்ணிட முடியும்னு சொல்றாங்க.

  • குழந்தைங்ககிட்ட கவனம்: குழந்தை பிறந்து மூணு மாசத்துக்குள்ளயே ‘பேரா டெஸ்ட்’ (Bera Test) மூலமா செவித்திறனைப் பரிசோதிக்கணும். ஒரு வயசாகியும் குழந்தை பேசலனாலோ, சத்தம் கேட்டுத் திரும்பலனாலோ உடனே டாக்டரை பார்க்கணும்.

  • பெண்களுக்கு ஒரு எச்சரிக்கை: 30 வயசுக்கு மேல இருக்குற பெண்களுக்கு ‘Osteosclerosis’ அப்படிங்கிற எலும்பு பாதிப்பு நோய் வர வாய்ப்பு இருக்கு. இது பரம்பரையா வர்றதுக்கும் சான்ஸ் இருக்கு. ஆரம்பத்துல கண்டுபிடிச்சா சின்ன அறுவை சிகிச்சை மூலமா சரி பண்ணிடலாம்.

  • ஹெட்போன் கலாச்சாரம்: இன்னைக்கு சின்னப் பசங்கல இருந்து பெரியவங்க வரைக்கும் காதுல மாட்டிட்டு இருக்குற ஹெட்ஃபோன் பெரிய ஆபத்து. அதிக சத்தத்தோட பாட்டு கேட்கிறது, டிரைவர்கள், தொழிற்சாலை ஊழியர்கள்னு சத்தமான சூழல்ல இருக்குறவங்களுக்கு நரம்புத் தேய்மானம் ஏற்பட வாய்ப்பு இருக்கு.

ஒவ்வொரு ஆண்டும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஒரு குறிப்பிட்ட கருப்பொருளை (Theme) மையமாகக் கொண்டு இந்த தினத்தை முன்னெடுக்கும். 2026 ஆம் ஆண்டிற்கான கருப்பொருள் மற்றும் முக்கிய விவரங்கள் இதோ:

2026 ஆம் ஆண்டின் கருப்பொருள் (Theme):

“சமூகங்கள் முதல் வகுப்பறைகள் வரை: அனைத்து குழந்தைகளுக்கும் செவித்திறன் பாதுகாப்பு.” (From community to school: Hearing care for all children)

முக்கிய நோக்கம்:

இந்த ஆண்டு உலக செவித்திறன் தினம், முக்கியமாக குழந்தைகள் மற்றும் மாணவர்களின் செவித்திறன் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துகிறது.

  • தவிர்க்கக்கூடிய இழப்பு: குழந்தைப் பருவத்தில் ஏற்படும் செவித்திறன் இழப்புகளில் 60% க்கும் அதிகமானவை, முறையான பொது சுகாதார நடவடிக்கைகள் மூலம் தவிர்க்கப்படக்கூடியவை என்று WHO குறிப்பிடுகிறது.

  • ஆரம்பகால கண்டறிதல்: குழந்த பள்ளியில் சேருவதற்கு முன்பும், பள்ளிக் காலங்களிலும் அவர்களின் செவித்திறனை தொடர்ந்து பரிசோதிப்பதன் மூலம், பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.

  • கற்றல் மற்றும் வளர்ச்சி: கேட்கும் திறன் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பேச்சுத் திறன், மொழி வளர்ச்சி மற்றும் கற்றலில் பாதிப்புகள் ஏற்படும். இது அவர்களின் எதிர்கால வாய்ப்புகளைப் பாதிக்கும்.

  • விழிப்புணர்வு: பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தினரிடையே குழந்தைகளின் காது ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்த ஆண்டின் முக்கிய இலக்காகும்.

ஆந்தை ரிப்போர்ட்டர் சொல்லும் செய்தி:

வாகன சத்தங்களைக் குறைப்போம், ஸ்பீக்கர்களோட தரத்தை ஒழுங்குபடுத்துவோம், காதுல மாட்டுற ஒலிப்பான்களை அளவோட பயன்படுத்துவோம். முக்கியமா, சொந்தத்துல கல்யாணம் பண்றதைத் தவிர்த்து, வருங்காலத் தலைமுறை எந்தக் குறைபாடும் இல்லாம பிறக்க வழி செய்வோம்.

அரசு கொண்டு வர்ற ‘தேசிய காது கேளாமை தடுப்புத் திட்டங்களை’ மக்கள்கிட்ட கொண்டு சேர்ப்பது நம்ம எல்லாருடைய கடமை. காது கேட்பது வெறும் உணர்வு மட்டுமல்ல… அது இந்த உலகத்தோட நாம இணைஞ்சு இருக்குறதுக்கான ஒரு பாலம். அந்தப் பாலத்தைப் பாதுகாப்போம்!

தனுஜா

Related Posts

error: Content is protected !!