ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு! அரிய தகவல்கள்!

தமிழகத்தின் வெள்ளை மாளிகை என்று வர்ணிக்கபட்ட முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு நினைவிடமாக மாற்றப்படும் என தமிழக அரசு அரசாணை பிறப்பித்து விட்டது.
1967-ம் ஆண்டு இந்த இடத்தை ஜெயலலிதாவும் அவரது தாய் சந்தியாவும் இணைந்து வாங்கினார்கள். அப்போது இதன் மதிப்பு ரூ.1.32 லட்சம் ஆகும். இந்த இடத்தை வாங்குவதற்கு எம்.ஜி.ஆர்- ம் ஒரு காரணம் என்று கூறுவார்கள். ஏனெனில் ஜெயலலிதா அம்மா சந்தியா வாங்க நினைத்த இடம் வேறு. எம்.ஜி.ஆர் தான் இந்த போயஸ் கார்டன் இடம் நல்லது என்று குறிப்பிட்டாராம். அதன் பின்னர் அந்த இடத்தில் வீடு கட்டி, அந்த வீட்டிற்கு தனது தாயின் உண்மையான பெயரான வேதவல்லியை சுருக்கி வேதா நிலையம் என்று பெயர் சூட்டினார். இந்த வேதா இல்லம் குறித்து ஒரு முறை ஜெ. சொன்னது இது ‘’என் வீட்டு டிராயிங் ரூமில் உட்கார்ந்திருக்கிறேன். என் வீட்டின் பெயர் வேதா நிலையம்.’ அம்மாவுடைய உண்மையான பேர் வேதா. திரை உலகத்திற்காக வைத்துக் கொண்ட பேர்தான் சந்தியா. அவங்க பேரையே வீட்டுக்கு வைச்சிருக்கேன். இந்த வீடு உள்ள இடம் போயஸ் கார்டன் ஸ்டெல்லாமமாரீஸ் கல்லூரிக்க அருகே இங்கிரந்து கடற்கரை, தியேட்டர்களை, மவுண்ட்ரோடு, ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன் எல்லாமே கிட்டே இருக்கு. இவ்வளவு ஸென்டராக இருக்கே தவிர, இங்கே போக்கவரத்து எல்லாம் ஜாஸ்தி கிடையாது. பஸ் லாரி சத்தங்களே கிடையாது. அமைதியாக இருக்கு எங்கேயோ ஊட்டியிலோ கொடைக்கானலிலோ இருக்கிற மாதிரி உணர்வு ஏற்படுகிறது.” என்றெல்லாம் குறிப்பிட்டிருந்தார். ’.. ஆம்.. அரசியல் முதல் தனிப்பட்ட வாழ்க்கை வரை பல முக்கிய முடிவுகள், ஆலோசனைகள் எல்லாமே வேதா இல்லத்தில் இருந்து தான் ஜெயலலிதா எடுத்துள்ளார். 24 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த வீட்டின் தற்போதைய மதிப்பு 100 கோடி ரூபாய்-க்கும் அதிகம் என்று கூறப்படுகிறது.
இப்போது இரண்டு மாடிகள் கொண்ட போயஸ் கார்டனின் வேதா இல்லத்தின் முன்பக்க வீட்டில் (பழைய வீடு) கீழ்தளத்தில் நான்கு அறைகள் பெரிய வராண்டா டைனிங் ரூம் கெஸ்ட் ரூம் இரண்டு ஆபிஸ் ரூம்கள் சமையலறையை ஒட்டி 2 பெரிய ஸ்டோர் ரூம்கள்உண்டு..
இரண்டாவது மாடியில் இரண்டு அறைகள். இந்த வீட்டுக்குப் பின்புறம் வீட்டின் வேலையாட்களுக்கு என தனியே கட்டப்பட்ட தனியறைகள் உண்டு. இதுதவிர வீட்டின் பின்புறமுள்ள கார்ஷெட்டுக்கு மேல் பெரிய ரூம்கள் இருந்தன.
முதல் மாடியில்தான் ஜெயலலிதாவின் பிரமாண்ட படுக்கை அறை இருந்தது. இதனருகில் உள்ள பெரிய அறைகளில் ஜெயலலிதாவின் பரிசுப்பொருள்கள், அவரது பிரத்யேக ஜிம் கருவிகள் இருந்தன. ஜெயலலிதாவின் முதல் மாடி அறையிலிருந்து நேரே கார்ஷெட்டுக்கு மேலே உள்ள அறைக்குச் செல்ல மாடியிலேயே ஒரு பாலம் அமைக்கப்பட்டது.
பின்னாளில் அவர் முதல்வரானபின் இதில் சிற்சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வீட்டின் அமைப்பு விரிவுபடுத்தப்பட்டபின் 36, 31 ஏ என இரு இலக்கங்கள் அளிக்கப்பட்டன. பழைய வீட்டின் கிழக்குத்திசையில் 31 ஏ என இலக்கம் குறிப்பிடப்பட்ட பகுதி 1995-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதில் 5 மாடிகள் உண்டு… வீட்டின் முதல்மாடியில் உள்ள அவரது பிரத்யேக அறை. உறவுகளால், நெருங்கிய நண்பர்களால், தன்னால் அதிகம் நேசிக்கப்பட்டவர்களால் காயமடைந்த சந்தர்ப்பங்களில் ஜெயலலிதாவுக்கு ‘கன்பெஷன்’ அறையாக இருந்திருக்கிறது. பல பிரச்னைகளுக்கான தீர்வை அவர் கண்டெடுத்த இடம் அந்த அறைதான். எத்தனை பெரிய பிரச்னைகளோடு அந்த அறையில் நுழைந்தாலும் மீண்டும் கதவு திறக்கப்படும்போது புது மனுஷியாக முகத்தில் தெளிவோடு வெளியே வருவார். இப்படி அவரின் கோபதாபங்கள், சாந்தம், கொண்டாட்டம் என அந்தந்த நேர உணர்வுகளின் ஜெயலலிதா வெளிப்படுத்திய உஷ்ணங்களை சுமந்துகொண்டிருக்கிற இல்லம் போயஸ் கார்டன்.
கொஞ்சம் டீடெய்லாக சொல்வதானால் 1950-ம் ஆண்டில் கணவர் ஜெயராமின் திடீர் மறைவையடுத்து மைசூரில் இருந்து சென்னைக்கு தன் இரு குழந்தைகளுடன் குடிபெயர்ந்தார் சந்தியா. தங்கையும் அன்றைய பிரபல நடிகையுமான வித்யாவதி வீட்டில் தங்கியிருந்தபோது சினிமா வாய்ப்புகள் அவரைத் தேடிவந்தன. சில கன்னடப்படங்களில் அவர் நடித்தார். கொஞ்சம் வசதி வந்ததும் அடையாறு, காந்தி நகரில், நான்காவது மெயின் ரோட்டில் ஓரளவு வசதிகொண்ட ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். ஜெயலலிதா, ஜெயக்குமார் இருவரின் பால்ய வயதும் இங்குதான் கழிந்தது. சினிமாவில் ஓரளவு புகழடைந்தபின் தி.நகர் சிவஞானம் தெருவுக்கு இடம்பெயர்ந்தார் சந்தியா.
பின்னாளில் ஜெயலலிதாவுக்கு கன்னடப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து அதன்மூலம் இயக்குநர் ஸ்ரீதரால் வெண்ணிற ஆடை என்ற படத்தில் முதன்முறையாக அறிமுகமானார். பிறகு, எம்.ஜி.ஆருடன் ஆயிரத்தில் ஒருவன் வாய்ப்பு, ஒரே நாளில் அவருக்கு புகழ் தேடித்தந்தது. சில வருடங்களில் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற நடிகையானார். அதன்பிறகு மகளின் கால்ஷீட்டை கவனித்துக்கொண்டு வீட்டோடு முடங்கினார் சந்தியா.
1960 களின் பிற்பகுதியில் ஜெயலலிதா புகழின் உச்சியில் இருந்தபோது, மகளின் வருங் காலத்துக்காக பிரமாண்டமாக ஒரு வீட்டை கட்டி எழுப்பும் ஆசை சந்தியா மனதில் உருவானது. இதற்காக எம் ஜி ஆர் மூலமாக இராமாவரத்தில் இடம் பார்க்க முயன்றார். ஆனால் எம் ஜி ஆர் ஆலோசனைப்படி இந்த தேனாம்பேட்டை பகுதியில் 1967-ம் ஆண்டு 10 கிரவுண்ட் இடத்தை வாங்கினார் சந்தியா. ஜெயலலிதாவின் விருப்பத்துக்காக பலமுறை இந்த வீட்டின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக தற்போது முன்பகுதியில் உள்ளதுபோல் கட்டப்பட்டது. இப்படி சிமென்ட் ஜல்லியோடு மகளின் எதிர்காலத்தையும் குழைத்துக் கட்டிய வீடு போயஸ் கார்டன் இல்லம். ஆனால், பார்த்துப்பார்த்து மகளுக்காக எழுப்பிய இல்லத்தின் கிரகப்பிரவேசத்தின்போது சந்தியா இல்லாமல் போனாதுதான் ஜெயலலிதா வாழ்வில் நிகழ்ந்த துரதிர்ஷ்டம்.
71-ம் ஆண்டின் மத்தியில் வீடு கட்டும் பணி நிறைவடைந்திருந்த நிலையில் ஒருநாள் (அக்டோபர் 31-ந் தேதி) திடீரென ரத்த வாந்தி எடுத்தார் சந்தியா. பூந்தமல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் மறுநாள் நவம்பர் 1-ம் தேதி சிகிச்சை பலனின்றி இறந்துபோனார். வீட்டின் பூமி பூஜை நடந்த சமயம் அதுதொடர்பாக உறவினர் களுக்கு சேலை எடுப்பது தொடர்பாக ‘எங்கிருந்தோ வந்தாள்’ படப்பிடிப்பிலிருந்த மகளிடம் பேசவந்தார் சந்தியா. அப்போது இருவருக்குமிடையே சிறு சிறுவாக்குவாதமானது. அப்போதுதான் அமங்களமாக தாயிடம் சொன்ன ஓர் வார்த்தை பலித்துவிட்டதாக ஜெயலலிதாவே சொல்லி வருந்தியிருக்கிறார் பின்னாளில்.
1972-ம் வருடம் மே மாதம் 15-ம் தேதியன்று போயஸ் கார்டன் இல்லம் கிரகப்பிரவேசம் நிகழ்ந்தது. மகளோடு மகிழ்ச்சியாக அந்த நாளை கொண்டாடியிருந்திருக்கவேண்டிய சந்தியா வீட்டின் சுவரில் புகைப்படமாக தொங்கிக்கொண்டிருந்தார்.
வீட்டுக்குத் தாயின் நினைவாக அவரது இயற்பெயரான வேதா என்பதை சூட்டினார் ஜெயலலிதா. எம்.ஜி.ஆர் தவிர, தமிழகத்தின் பிரபலங்கள் பலரும் ஆஜராகியிருந்தனர். ! அப்போது எம்.ஜி.ஆருக்கும் ஜெயலலிதாவுக்குமிடையே ஏதோ பிரச்னை எனப் பேசப்பட்டது. ஆனால், உதவியாளர் மூலம் விலையுயர்ந்த பரிசுகளை அனுப்பிவைத்திருந்தார் எம்.ஜி.ஆர். கோபத்தில் அவற்றைத் திருப்பியனுப்பினார் ஜெயலலிதா.
விழாவில் வீணை வித்வான் சிட்டிபாபு நிகழ்த்திய சிறப்புக் கச்சேரியின்போது ‘வேதா நிலையத்தின்’ பெயரிலேயே ஒரு பாடலை புனைந்து பாடி ஜெயலலிதாவை மகிழ்வித்தார். வேதங்களையும், வேதங்களின் ஆகம சூத்திரங்களையும் கொண்டு புனையப்பட்ட அப்பாடலை கேட்டு உருகிநின்றார் ஜெயலலிதா.
ஜெயலலிதாவுக்கு இந்த கிரகப்பிரவேசத்தின்போது இன்னொரு மறக்கமுடியாத சம்பவமும் உண்டு. அது விழாவை சோ புறக்கணித்தது. ஜெயலலிதாவின் இளமைக்கால நண்பரான சோ, குடும்ப நண்பரும்கூட. தனது வீட்டு நிகழ்ச்சிகளை சோ இன்றி நடத்தியதில்லை சந்தியா. அதனால் கிரகப்பிரவேசத்தில் சோ வை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார் ஜெயலலிதா. உள்ளூரில் இருந்தும் சோ விழாவுக்கு வரவில்லை. காரணம் கேட்டதற்கு 6 பக்கத்துக்கு கடிதம் எழுதியிருந்தார் சோ. பத்திரிகையை நேரில் தராமல் தன்னை அவமதித்துவிட்டதாக அக்கடிதத்தில் குறிப்பிட்ட சோ, கர்வத்தினால், தான் செய்த தவறுக்கு வருந்துவதாக கூறியிருந்தார்.
தென்னகத்தின் புகழ்மிக்க நட்சத்திரமாக ஜெயலலிதா நூறாவது பட கொண்டாட்டத்தைக் கண்டது, நம்பிய மனிதர்களால் நம்பிக்கைத் துரோகத்துக்கு ஆளானது, உறவினர்களால் நடுவீதிக்கு கொண்டுவரும் நிலை உருவானது, வாய்ப்புகள் குறைந்து பொருளாதாரப் பிரச்னைக்காக நாட்டியக்குழுவை நடத்தி சிரமப்பட்டது, அ.தி.மு.க-வில் சேர்ந்தது, அடுத்தடுத்து அரசியலில் வெற்றி தோல்விகளைச் சந்தித்தது என ஜெயலலிதா என்ற பெண்மணி சினிமாவில் வெளிப்படுத்திய சோகம், ஆனந்தம், துக்கம், விரக்தி வெறுமை என அத்தனை உணர்ச்சிகளையும் நிஜமாய் அனுபவித்தது இந்த வீட்டில்தான்.