June 1, 2023

சென்னையில் கொரோனா அதிக பரவல் குறித்து முதல்வர் ஆய்வு!

தமிழகத்தில் பெரும் தொற்று பகுதியாகி விட்ட பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அம்மா மாளிகையில், சென்னை மாநகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் இன்று (5.5.2020) நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி ஆய்வு மேற்கொண்டார்.

சென்னை மாநகரில், சென்னை மாநகராட்சியால் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த புகைப்பட கண்காட்சியினை பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலக வளாகத்தில், முதலமைச்சர் பழனிசாமி பார்வையிட்டார்

ஆய்வு கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அதிகாரிகள் பங்குகொண்டனர்.

ஆய்வு கூட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டத்துக்கு பின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆற்றிய உரையின் சுருக்கம்.

தமிழகம் முழுவதும் நோய் பரவலை தடுப்பதற்காக ஐஏஎஸ் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது

சென்னையில் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மண்டல வாரியாக நோய் தடுப்பு பணியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

பொதுமக்கள் பிரச்சனைகளை தீர்க்க கட்டுப்பாட்டு அறைகள் அமைத்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

சென்னையில் நோய் தொற்று வேகமாக பரவுவதற்கு காரணம் அதிகமான மக்கள் வசிப்பது தான். நோய் தொற்றை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சென்னை மாநகரில் மட்டும் 4000 படுக்கை வசதிகளுடன் மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன.

கொரோனா நோயாளிகளுக்கு ஜிங்க் மற்றும் சத்து மாத்திரைகள், கபசுர குடிநீர் வழங்கப் படுகிறது.

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளன. கொரோனா தொற்றை கண்டறிவதற்கான பரிசோதனைகளும் அதிக அளவில் நடத்தப்படுகின்றன

வெளி மாநில தொழிலாளர்கள் தங்கி பணி புரிய விரும்பினால் பணி செய்யலாம். சொந்த மாநிலத்திற்கு செல்ல வெளி மாநில தொழிலாளர்கள் விரும்பினால் அதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. படிப்படியாக ஒரு வாரத்திற்குள் வெளி மாநில தொழிலாளர்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு அறிவிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணி பெண்கள், ஆதரவற்றோர்களுக்கு உணவு அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் யாரும் பட்டினியாக இல்லை என்ற நிலை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

அரசின் அறிவிப்புகளை மக்கள் கடைபிடித்தாலே கொரோனா நோய் பரவுவதை கட்டுப்படுத்த முடியும்.

ரேசன் கடைகளில் ஜூன் மாதத்திற்கும் விலையில்லா அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படும்.

இவ்வாறு, முதலமைச்சர் பழனிசாமி ஆய்வு கூட்டத்தில் உரையாற்றினார்.