June 7, 2023

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வேணும்: மோடியிடம் எடப்பாடி கோரிக்கை!-

‘தமிழ்நாட்டில் கொரோனா தடுப்புப் பணிகளுக்கு ஏற்கனவே நான் கோரியிருந்தபடி ரூ.3000 கோடி நிதி வழங்க வேண்டும்’ என்று இன்று பிரதமர் மோடியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி இருக்கிறார்.உடனடி நிவாரணம் – சுகாதார திட்டப் பணிகளுக்கு தொகுப்பு என்றதன் கீழ் நாங்கள் ஏற்கனவே முறையே ரூ.512.64 கோடியும், ரூ.712.64 கோடியும் பெற்றிருக்கிறோம். இந்நிலையில் இவ்விரு தொகுப்புகளின் கீழ் தொகையை ரூ.3 ஆயிரம் கோடியாக உயர்த்தித் தரவேண்டும் என்று எடப்பாடி கோரியுள்ளார்.

கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, நோய் பரவல் அதிகம் உள்ள தமிழகம் உட்பட 10 மாநில முதல்வர்களுடன் இன்று (11–ந் தேதி) காலை பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பரன்ஸ்’ (காணொலி காட்சி) மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்தியாவில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. எனினும், பல மாநிலங்களில், நோய் பரவல் தொடர்ந்தபடி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில், மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்த இடங்களில், தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், டெல்லி, உத்திரப்பிரதேசம், மேற்குவங்கம், தெலுங்கானா, குஜராத், பீகார் மாநிலங்கள் உள்ளன. இந்த 10 மாநிலங்களில் கொரோனா நோய் பரவலைத் தடுக்க, மாநில அரசுகள் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, அந்தந்த மாநில முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை 10.30 மணியளவில் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, மத்தியபிரதேச முதல்வர் உத்தவ் தாக்கரே, பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ஆகியோர் பங்கேற்றார்கள்.

இதில் எடப்படி பழனிசாமி, கொரோனா பரிசோதனைக்காக நாள் ஒன்றுக்கு 5 கோடி ரூபாய் தமிழக அரசு செலவிடுகிறது. பி.சி.ஆர். சோதனைக்கு ஆகும் செலவின் பாதித்தொகையை மத்திய அரசு ஏற்கவேண்டும். பி.சி.ஆர். சோதனைக்கான செலவை பிரதமர் ‘கேர்’ நிதியில் இருந்து ஒதுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். .

இதேபோல கடந்த முறை காணொலி மூலமான ஆய்வுக் கூட்டத்தில் தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிக்காக ரூ.9 ஆயிரம் கோடியை சிறப்பு மானியமாக வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்ததையும் இம்முறை சுட்டிக்காட்டியுள்ளார்.

ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்துக்கு ஜி.எஸ்.டி. இழப்பீட்டுத் தொகையையும் உடனடியாக வழங்க வேண்டும் என்றும், நிலுவையில் இருக்கும் சி.எம்.ஆர். மானியத்தொகை ரூ.1321 கோடியையும் இந்த நேரத்தில் கொடுத்தால் அது நெல்கொள்முதலுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.