அம்மா மினி கிளினிக் ஏன்? – முதல்வர் பழனிசாமி பேச்சு முழு விபரம்!
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று சொல்வார்கள். எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும், நோய் வந்துவிட்டால் செல்வத்தை அனுபவிக்க முடியாது. அப்படிப்பட்ட நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கித் தரவேண்டும், அதுவும் குறிப்பாக ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மக்களுக்கு நோய் ஏற்படுகின்றபோது தனியார் மருத்துவமனைக்குச் சென்றால், 100 அல்லது 200 ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையிருக்கின்றது.அந்த சுமைகூட இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் அரசு, குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வசிக் கின்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பகுதியிலேயே அம்மா மினி கிளினிக்குகளை உருவாக்கி, அப்பகுதி மக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை எங்களுடைய அரசு தொடர்ந்து வழங்கும் என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்” என்று சென்னை ராயபுரம் ஷேக் மேஸ்திரி தெருவில் மினி கிளினிக்கை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த முதல்வர் பழனிசாமி பெருமிதப்பட்டுக் கொண்டார்..
முதலமைச்சர் பழனிசாமி அறிவித்த 2,000 மினி கிளினிக்குகளில் முதல் கட்டமாக 630 மினி கிளினிக்குகள் இன்று தொடங்கப்படுகின்றன.சென்னையில் முதல் கட்டமாக 47 இடங்களில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படுகின்றன. கிராமப்புறம் 1,400, சென்னையில் 200, நகர்ப்புறங்களில் 200, நகரும் கிளினிக்குகள் 200 அமைக்கப்படுகின்றன.தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு பகுதியிலும் மினி கிளினிக் திட்டம் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
மினி கிளினிக்குகளில் மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் என தலா ஒருவர் பணியில் இருப்பர். இந்த மினி கிளினிக் காலை 8 – 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் 8 மணி வரை என 8 மணி நேரம் செயல்படும்.கிளினிக்கில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை, மகப்பேறு, ஹீமோகுளோபின் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு இதோ:
தமிழக அரசு கடைக்கோடி மக்களுக்கும் தரமான சுகாதார சேவைகள் கிடைக்க வேண்டும் என்பதற்காக உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தியும், பல்வேறு நலத்திட்டங்களை செயல் படுத்தியும் வருகின்றது. ஜெயலலிதா இருக்கும்போதும், அவரது மறைவிற்கு பிறகும், தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் இருக்கின்ற ஏழை, எளிய மக்களுக்கு உரிய சிகிச்சை கிடைக்க வேண்டுமென்பதற்காக 254 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
30 படுக்கைகள், ஸ்கேன் போன்ற வசதிகளுடன் 166 ஆரம்ப சுகாதார நிலையங்கள் நிலை உயர்த்தப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதிகளில் இருக்கின்ற மக்கள் அங்கேயே சிகிச்சை பெறக்கூடிய ஒரு சூழ்நிலையை அரசு உருவாக்கித் தந்திருக்கிறது.
அதுமட்டுமல்லாமல் பொதுமக்களிடத்திலிருந்து வந்த கோரிக்கைகளின் அடிப்படையில் 52 அரசு வட்டம்சாரா மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தாலுகா அரசு மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. ரூபாய் 219 கோடி மதிப்பீட்டில் 16.17 லட்சம் குழந்தைகளுக்கு அம்மா குழந்தைகள் நல பெட்டகங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அம்மா ஆரோக்கியத் திட்டம், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டம், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ரூபாய் 4000 வழங்கும் திட்டம், 104 மருத்துவ சேவை மையம் மூலம் 9.69 லட்சம் நபர்களுக்கு மருத்துவ ஆலோசனைகள் மற்றும் 108 அவசரகால ஆம்புலன்ஸ் திட்டத்தில் 902 புதிய வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. 11.26 லட்சம் கர்ப்பிணித் தாய்மார்கள் உட்பட 46.8 லட்சம் நபர்கள், புதிய ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டதன் மூலமாக பயனடைந்திருக்கின்றனர்.
மதுரை, தஞ்சாவூர் மற்றும் திருச்சி அரசு மருத்துவ கல்லூரிகளில் தலா ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் விபத்து சிகிச்சை மையங்களுடன் கூடிய உயர் சிறப்பு மருத்துவமனைகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. நடமாடும் மருத்துவமனைத் திட்டத்தில் 7.62 லட்சம் முகாம்கள் நடைபெற்று, அதில் ரூபாய் 6.30 கோடி பொதுமக்கள் கலந்து கொண்டு பயன் பெற்றிருக் கின்றார்கள். அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம் மற்றும் அம்மா மகளிர் முழு உடல் பரிசோதனைத் திட்டத்தில் 67,077 நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு, புற்று நோய்க்கு உயரிய சிகிச்சை அளிக்கக்கூடிய வகையில் ரூபாய் 190 கோடி மதிப்பீட்டில் 10 அரசு மருத்துவமனைகளில் லீனியர் ஆக்சலேட்டர் (Linear Accelerator) என்ற உயர் தொழில்நுட்பக் கருவி நிறுவி இருக்கின்றது. தனியார் மருத்துவமனைகளில் இருக்கும் வசதிகளைவிட கூடுதலாக வசதிகளை அரசு மருத்துவமனைகளில் நாங்கள் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
சென்னை, அடையார் புற்றுநோய் மையத்தை ரூபாய் 120 கோடி மதிப்பீட்டில் மாநில அளவில் புற்றுநோய்க்கு சிறப்பான சிகிச்சை அளிக்கும் ஒப்புயர்வு மையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஏழை, எளியோருக்கு சிறந்த சிகிச்சை செய்யக்கூடிய சூழ்நிலையை அரசு உருவாக்கித் தந்திருக்கின்றது. ரூபாய் 59 கோடி மதிப்பீட்டில் நான்கு புற்றுநோய் சிகிச்சை மண்டலங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 300 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மருத்துவமனைகளுக்கு 56 சி.டி. ஸ்கேன்கள், 22 எம்.ஆர்.ஐ. ஸ்கேன்கள், 18 கேத்லேப் மற்றும் 530 டயாலிசிஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஆகவே, மருத்துவமனைகள் இருந்தால் மட்டும் போதாது, அந்த மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கான உயர்தர கருவிகளையும் அரசு வழங்கி ஏழை, எளிய மக்களுக்கு தனியார் மருத்துவமனையில் கொடுக்கின்ற சிகிச்சையைவிட உயர்தர சிகிச்சையை நம் மருத்துவர்கள் வழங்கி வருகின்றனர். மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் 9,726 மருத்துவர்கள், 15,659 செவிலியர்கள் உட்பட 31,868 நபர்கள் நியமனம் செய்யப்பட்டு, மக்களுக்கு தேவையான சிகிச்சை செய்வதற்காக அரசு மருத்துவர்கள், மருத்துவ செவிலியர்கள், மருத்துவ பிற பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
96.31 கோடி ரூபாயில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக் கல்லூரியில் உலகத் தரத்தில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் மையம் அமைக்கப்படுகின்றது. ரூபாய் 307 கோடி மதிப்பீட்டில் 15 மாவட்ட மற்றும் துணை மாவட்ட மருத்துவமனைகள், கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தாய்சேய் ஒப்புயர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
ரூபாய் 130.50 கோடி மதிப்பீட்டில் 11 சீமாங்க் மையங்கள் தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. ரூபாய் 3,995 கோடி மதிப்பீட்டில் 11 மாவட்டங்களில் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் புதியதாக உருவாக்கி, வரலாற்றுச் சாதனையைப் படைத்த அரசு தமிழக அரசு. அதன் மூலமாக 1,650 மருத்துவர்கள் புதிதாக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்கக்கூடிய சூழ்நிலையை அரசு உருவாக்கித் தந்திருக்கின்றது.
2011-ம் ஆண்டில் ஜெயலலிதா முதலமைச்சராக பொறுப்பேற்கின்ற வரை, 1,945 மருத்துவ இடங்கள்தான் இருந்தன. அவர்கள் 2016 வரை தமிழகத்தின் முதல்வராக இருந்த காலக் கட்டத்தில், 3,060 இடங்களாக உயர்த்தினார். அதன் பின் தமிழக அரசு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளுடன் கூடிய மருத்துவமனைகளை உருவாக்கியதன் மூலமாக 1,650 புதிய இடங்கள் தோற்றுவிக்கப்பட்டு, இப்போது 5,300 நபர்கள் மருத்துவப் படிப்பில் சேர்ந்து படிக்கக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றோம்.
அரசு பள்ளியில் படித்த ஏழை எளிய மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிப்பதற்கு உள் ஒதுக்கீடுடாக 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கிய அரசு இந்த அரசு . ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியரும், மருத்துவப் படிப்பு படிப்பது என்பது ஒரு எட்டாக்கனியாக இருந்த நிலை மாறி, அந்த ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மாணவ, மாணவியரும் மருத்துவப் படிப்பு படிக்கின்ற சூழ்நிலை எங்களுடைய அரசு உருவாக்கித் தந்திருக்கின்றது. நடப்பாண்டில் அரசுப் பள்ளிகளில் பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணாக்கர்களுக்கு 313 எம்பிபிஎஸ் இடங்கள் கிடைத்துள்ளது.
அரசுப் பள்ளியிலே படிக்கின்ற 41 சதவீதம் மாணவ, மாணவியர்களில், கடந்த ஆண்டு 6 நபர் களுக்குத்தான் மருத்துவப் படிப்பிற்கான இடம் கிடைத்த, அந்த நிலை மாறி, அரசு எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக, 313 நபர்களுக்கு மருத்துவம் படிப்பதற்கு இடம் கிடைத்ததென்று சொன்னால், இது ஒரு வரலாற்றுச் சாதனை என்பதை நினைவுகூற கடமைப்பட்டிருக்கின்றேன். அதுமட்டுமல்ல, இவர்களுக்கு மருத்துவக் கல்விக் கட்டணம் செலுத்த முடியாத நிலை உள்ளதால் அவர்களுக்கு உதவி செய்கின்ற வகையில் 16 கோடி ரூபாய் சுழல் நிதி ஏற்படுத்தி அந்தக் கட்டணத்தையும் அரசு செலுத்துகின்றது.
முதல்வரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சை பெற ரூபாய் 2 லட்சமாக இருந்ததை 5 லட்சமாக உயர்த்திய அரசும் இந்த அரசுதான். உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் தேசிய அளவில் 6-வது முறையாக முதலிடம் பெற்று, தேசிய விருதைப் பெற்றதும் இந்த அரசுதான்.
பிரதமர் கரோன தடுப்பு குறித்து காணொலிக் காட்சி மூலம் இந்தியா முழுவதுமுள்ள முதல்வர்களுடைய கூட்டத்தைக் கூட்டி, ஒவ்வொரு மாநிலத்திலும், கரோனா வைரஸ் நோயை கட்டுப்படுத்த எந்த அளவிற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றீர்கள், எந்த அளவுக்கு தொற்று குறைந்திருக்கின்றது போன்ற செய்தியை கேட்டறிந்தார்கள். அப்போது பிரதமர், இன்றைக்கு பிசிஆர் பரிசோதனைகளை அதிகமாக எடுக்கின்ற ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று குறிப்பிட்டார்.
அதனால் தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் குறைந்து கொண்டிருக்கிறது, அதற்காக தமிழ்நாடு அரசை பாராட்டுகின்றேன் என்று பாராட்டுச் சான்றிதழும் கொடுத்தார். அது மட்டுமல்ல, அவர்கள் காணொலிக் காட்சி மூலம் பேசுகின்றபோது, தமிழ்நாட்டைப் பின்பற்றி மற்ற மாநிலங்கள் செயல்பட வேண்டுமென்ற செய்தியையும் குறிப்பிட்டார். அந்த அளவுக்கு அரசு கரோன வைரஸ் பரவலைத் தடுப்பதற்கு கடுமையான நடவடிக்கைகளை எடுத்தது, அந்த முயற்சி நல்ல பலனைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது.
தற்போது படிப்படியாக குறைந்து பிரதமரின் பாராட்டை நாம் பெற்றிருக்கின்றோம். அதற்காக பாடுபட்ட நம் மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அதோடு, அவர்களுக்குத் உறுதுணையாக நின்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தற்போது ஒரு புதிய முயற்சியாக ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்தப் பகுதியிலேயே சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 “முதல்வரின் அம்மா மினி கிளினிக்குகள்” இன்றைக்கு துவங்கப்பட்டிருக்கின்றது என்ற மகிழ்ச்சியான செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அம்மா மினி கிளினிக்குகள் மூலமாக ஏழை, எளிய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அங்கேயே அவர்கள் தங்கள் உடலில் ஏற்படுகின்ற நோய்களுக்கு சிகிச்சை பெறக்கூடிய சூழ்நிலையை நாங்கள் உருவாக்கித் தந்திருக்கின்றோம். இது வரலாற்றுச் சாதனையாகும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் செயல்படுகின்ற அரசு என்பதை நாங்கள் இந்த நேரத்தில் நிரூபித்துக்காட்டிக் கொண்டிருக்கின்றோம்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று சொல்வார்கள். எவ்வளவுதான் செல்வம் இருந்தாலும், நோய் வந்துவிட்டால் செல்வத்தை அனுபவிக்க முடியாது. அப்படிப்பட்ட நோயற்ற வாழ்வை தமிழக மக்களுக்கு உருவாக்கித் தரவேண்டும், அதுவும் குறிப்பாக ஏழை, எளிய குடும்பத்தில் பிறந்த மக்களுக்கு நோய் ஏற்படுகின்றபோது தனியார் மருத்துவமனைக்குச் சென்றால், 100 அல்லது 200 ரூபாய் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலையிருக்கின்றது.
அந்த சுமைகூட இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் அரசு, குறிப்பாக ஏழை, எளிய மக்கள் வசிக்கின்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அந்தப் பகுதியிலேயே அம்மா மினி கிளினிக்குகளை உருவாக்கி, அப்பகுதி மக்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சையை எங்களுடைய அரசு தொடர்ந்து வழங்கும் என்பதைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
அண்மையில் நிவர் புயல், புரெவி புயல் என்று இரண்டு புயல் வந்தது. இரண்டிலுமே மக்கள் பாதிக்கப்பட்டார்கள். அப்படி பாதிப்பட்டபோது, சென்னை மாநகர மக்களுக்கு 6.12.2020 முதல் 13.12.2020 வரை மூன்று வேளையும் 860 இடங்களில் அம்மா விலையில்லா உணவை வழங்கியது எங்கள் அரசு. இதுவரை 1 கோடியே 35 லட்சம் நபர்களுக்கு உணவு வழங்கப் பட்டுள்ளது.
எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களும், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் என்று அண்ணா சொன்னதைப் போல, அந்த தலைவர்களின் வழியில் நடைபெறு கின்ற ஒரே அரசு இந்த அரசு என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இந்த அற்புதமானத் திட்டத்தை மிக வேகமாக, துரிதமாக நல்ல முறையில் செயல்படுவதற்கு உறுதுணையாக விளங்கிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அவருக்குத் துணைநின்ற சுகாதாரத் துறை செயலாளர், அந்தத் துறையைச் சேர்ந்த அலுவலர்களுக்கு நன்றி”
நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி, சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமைச் செயலாளர் சண்முகம், பொன்னையன், வளர்மதி, நகராட்சி மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் மருத்துவத் துறையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கும், பல்வேறு துறையைச் சேர்ந்த அலுவலர்களும் கலந்துக்கொண்டனர்”.இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.