தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி அறிக்கை முழு விபரம்!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி  அறிக்கை முழு விபரம்!

100வது நாள் போராட்டத்தின் போது 13 உயிர் பலி நடந்த தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமி விரிவான அறிக்கையை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பின்னர், துறை வாரியான மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்காக தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று கூடியது. பல்வேறு பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளு்கு இடையே கூடிய சட்டபேரவைக் கூட்டத்தொடரில், தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக தமிழக சட்டப்பேரவை விதி எண் 55-ன் கீழ் உறுப்பினர்கள் டிடிவி தினகரன், தமீமுன் அன்சாரி உள்ளிட்டோர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். இன்று கேள்வி நேரம் முடிந்ததும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது ஏற்பட்ட நிகழ்வு குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை எடுத்துக்கொள்வதாக சபாநாயகர் அறிவித்தார்.

ஆனாலும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுந்து தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிர் இழந்தது தொடர்பாக நான் கொடுத்திருந்த ஒத்திவைப்பு தீர்மானத்தை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். ஆனால் சபாநாயகர் அதற்கு அனுமதி மறுத்து, உங்களது கோரிக்கையையும் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் சேர்த்து எடுத்துக்கொள்வதாக கூறினார்.

இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின்மீது நீங்களும், உங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் சபாநாயகர் கூறினார்.

இதனையடுத்து கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது மு.க. ஸ்டாலின் (தி.மு.க.), ராமசாமி (காங்கிரஸ்), எஸ்.பி. சண்முகநாதன் (அண்ணா தி.மு.க.) தமிமுன் அன்சாரி, டி.டி.வி. தினகரன் ஆகியோர் பேசினார்கள்.

மு.க.ஸ்டாலின் பேசும்போது, பல்வேறு கோரிக்கைகளை வைத்தார். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வரை தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் இந்த அவை நடவடிக்கையில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பார்கள் என்று கூறி சபையிலிருந்து ஸ்டாலின் மற்றும் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தார்கள்.

காங்கிரஸ் செல்லவில்லை

காங்கிரஸ் தலைவர் ராமசாமி, இந்த பிரச்சினையில் தனது கருத்தை தெரிவித்தார். ஆனால் கூட்டணி கட்சியான காங்கிரஸ், தி.மு.க.வுடன் வெளிநடப்பு செய்யவில்லை. அவர்கள் சட்டசபையில் அமர்ந்து முதலமைச்சரின் பதிலுரையை அமைதியாக கேட்டுக்கொண்டிருந்தனர்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதில் அளித்தார்.

22–ந்தேதி நடந்த சம்பவத்தில் இறந்து போனவர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே நான் ஆழ்ந்த அனுதாபமும், இரங்கலும் தெரிவித்திருந்தேன். இப்போது இந்த அவையின் மூலமாக அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று முதலமைச்சர் கூறிவிட்டு பேசினார்.

அவர் பேசியதாவது:–

வேதாந்தா குழுமத்தின் தாமிர உருக்காலை நிறுவனம் (ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட்) தூத்துக்குடி மாவட்டம், மீளவிட்டான் கிராமத்தில் கடந்த 22 ஆண்டுகளாக இயங்கி வருகின்றது. 23.3.2013–ல் மேற்படி தொழிற்சாலையிலிருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொதுமக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததன் அடிப்படையில், தொழிற்சாலை நிர்வாகத்திற்கு 24.3.2013 தேதியிட்ட விளக்கம் கேட்கும் அறிவிப்பு அளிக்கப்பட்டு, பின்னர் தொழிற்சாலையை மூடுவதற்கும், மின் இணைப்பை துண்டிப்பதற்கும், ஜெயலலிதா 29.3.2013 அன்று உத்தரவிட்டார். அதன்பேரில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, தொழிற்சாலை உடனடியாக மூடப்பட்டது.

ஜெயலலிதா பிறப்பித்த இந்த உத்தரவினை எதிர்த்து, புதுடெல்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வு முன்பு ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்த முறையீட்டை விசாரித்த தீர்ப்பாயம், மூடுதல் உத்தரவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பு ஆணையை ரத்து செய்தும், தொழிற்சாலையை மீண்டும் இயக்குவதற்கு அனுமதி அளித்தும் 31.5.2013 அன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. பின்னர் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் 8.8.2013 அன்று ஸ்டெர்லைட் ஆலையை இயக்குவதற்கு அனுமதிளித்து, இறுதி தீர்ப்பு அளித்தது. மேற்படி தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவின் அடிப்படையில் தான் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வந்தது.

ஜெயலலிதா மேல்முறையீடு

தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் இந்த இறுதி தீர்ப்பை எதிர்த்தும், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும் என்றும், ஜெயலலிதா 2013–ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் விசாரணை தற்பொழுது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்நிறுவனத்தை இயக்குவதற்கான இசைவாணை 2018 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிலையில், இசைவாணையை புதுப்பிக்க தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்திடம் ஸ்டெர்லைட் நிர்வாகம் விண்ணப்பம் செய்தது. இந்த விண்ணப்பத்தினை பரிசீலித்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம், ஏற்கனவே பிறப்பித்த நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால், ஸ்டெர்லைட் ஆலையின் விண்ணப்பத்தினை 9.4.2018 அன்று நிராகரித்தது. இதனால் ஆலை இயங்கவில்லை.

இதனிடையில் 9.4.2018 தேதியிட்ட மாசு கட்டுப்பாடு வாரிய நிராகரிப்பு ஆணையை எதிர்த்து ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல் முறையீட்டு ஆணையத்தில் மேல்முறையீடு செய்தது. மேல்முறையீட்டு விசாரணை 4.5.2018 அன்று நடைபெற்றபோது, தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் சார்பில் ஆஜரான தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞர், இத்தொழிற்சாலையை மீண்டும் இயக்க அனுமதிக்கக்கூடாது என கடுமையாக வாதிட்டார்.

14 முறை பேச்சுவார்த்தை

இந்த ஆலை இயங்க அனுமதி வழங்கக் கூடாதென, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக நல அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை அமைதியான முறையில் நடத்தி வந்தன. இந்நிலையில் 12.2.2018 முதல் 25.4.2018 வரை 14 முறை போராட்டக் குழுவினருடன் தூத்துக்குடி கலெக்டர், சார் ஆட்சியர், ஒட்டப்பிடாரம் வட்டாட்சியர் போன்ற அரசின் பல்வேறு நிலையினை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, தமிழ்நாடு அரசு எடுத்துள்ள திடமான நடவடிக்கைகளை போராட்டக் குழுவினரிடம் விளக்கி உள்ளனர். இருப்பினும் பேராட்டக் குழுவினர் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர்.

தடை உத்தரவு

இந்தச் சூழ்நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக் குழுவினர், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்தபோது, 2015–2016 அன்று தூத்துக்குடி சார் ஆட்சியர் தலைமையில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் போராட்டக் குழுவினருடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. பேச்சு வார்த்தைக்குப் பின்னர், மாவட்ட கலெக்டர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தை கைவிட்டு, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லாமல் ஒரு நாள் அமைதியான முறையில், போராட்டம் நடத்திட போராட்டக் குழுவினர் ஒப்புக் கொண்டனர். இருப்பினும் முன் எச்சரிக்கையாக சுமார் 2 ஆயிரம் காவல் துறையினர் அங்கு பணியில் அமர்த்தப்பட்டனர். மேலும் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் குற்றவியல் விசாரணை முறைச் சட்டம் 144–ன் கீழ் தடை உத்தரவை பிறப்பித்தார்.

அரசுக்கு நெருக்கடி கொடுக்க…

இந்த நிலையில், தடை உத்தரவை மீறி, சில அரசியல் கட்சிகளும், சில அமைப்புகளும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டு அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென்ற எண்ணத்தோடு முனைந்து, போராட்டக் குழுவினருடன் தங்களை இணைத்துக் கொண்டு, திடீரென 22.5.2018 அன்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டு சட்டம் ஒழுங்கு பிரச்சினையை ஏற்படுத்தின.

இக்கூட்டத்தில் சிலர் ஊடுருவி காவல் துறையினர் மீது கல்லெறிந்தும், அவர்களை விரட்டித் தாக்கியும், மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை கல்லெறிந்து சேதப்படுத்தியும், அவ்வளாகத்தில் இருந்த அரசுத்துறை வாகனங்கள், காவல்துறை வாகனங்கள், இதர வாகனங்கள் மற்றும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்களை தீயிட்டுக் கொளுத்தியும் கலவரத்தில் ஈடுபட்டனர். மேலும் அருகில் இருந்த ஸ்டெர்லைட் ஆலை ஊழியர் குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களை தீயிட்டும், மாவட்ட தொழில் மைய அலுவலகம், தூத்துக்குடி தெற்கு காவல் நிலையம் மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களையும் சேதப்படுத்தினர்.

இந்நிலையில், வன்முறைகளை கட்டுக்குள் கொண்டு வரவும், பொதுமக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்கவும் பொதுச்சொத்துக்கு மேலும் சேதம் விளைவிக்காமல் தடுக்கவும், கலவரக்காரர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தும், அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் வன்முறையைக் கட்டுக்குள் கொண்டு வர தடியடியும் நடத்தப்பட்டது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர்.

அமைதி திரும்ப நடவடிக்கை…

இந்த சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்ததோடு இரண்டு மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளையும், மூத்த காவல் துறை அதிகாரிகளையும் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர ஆணையிட்டார். மேலும், மாவட்டத்தில் அமைதி திரும்பிட துரித நடவடிக்கை எடுக்க காவல்துறை தலைமை இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

இந்த சம்பவத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதியாக தலா 10 லட்சம் ரூபாய் வழங்கவும், பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் வழங்கவும் லேசான காயமடைந்தவர்களுக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் வழங்கவும் அரசு ஆணையிட்டது. மேலும் உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் தகுதிக்கு ஏற்றவாறு அரசுப் பணி வழங்கவும் உத்தரவிடப்பட்டது.

ரூ.20 லட்சம் நிவாரணம்

ஆய்வுக்குச் சென்ற மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், உயிரிழந்த குடும்பத்தினர் மற்றும் காயமடைந்தோரை சந்தித்தபோது, அவர்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையிலும், நிவாரண நிதியை உயர்த்தி வழங்கக்கோரும் மனுதாரின் கோரிக்கையை பரிசீலிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை 25.5.2018 அன்று பிறப்பித்த உத்தரவின் அடிப்படையிலும், பல்வேறு தரப்பினரிடமிருந்து அரசுக்கு வைக்கப்பெற்ற கோரிக்கைகளின் அடிப்படையிலும், இச்சம்வத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கான நிவாரண நிதியை 10 லட்சம் ரூபாயிலிருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும், பலத்த காயமடைந்தவர்களுக்கான நிவாரண நிதியை 3 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கவும் லேசான காயமடைந்தவர்களுக்கான நிவாரண நிதியை ஒரு லட்சம் ரூபாயிலிருந்து ஒன்றரை லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் 27.5.2018 அன்று அரசு ஆணையிட்டார்.

முதலமைச்சரின் ஆணையின்படி 28.5.2018 அன்று துணை முதலமைச்சர் உட்பட 4 அமைச்சர்கள் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று பார்வையிட்டு, அங்கு சிகிச்சையில் இருக்கும் காயமடைந்தோர்களை மருத்துவமனைக்குச் சென்று பார்த்து, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தும், அவர்களின் கோரிக்கைகளை கேட்டுக் கொண்டனர். மேலும் முதலமைச்சர் அறிவித்த நிவாரணத் தொகையினையும் வழங்கினர்.

விசாரணை கமிஷன்

மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைத்து அரசு உத்தரவிட்டது.

எனவே பொதுமக்கள் இச்சம்பவத்தினால், உணர்ச்சி வயப்படாமலும், யாருடைய தூண்டுதலுக்கும் ஆளாகாமலும் தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து அமைதி நிலவ ஒத்துழைக்க வேண்டும் என்று அம்மாவின் வழியில் செயல்படும் இந்த அரசு இந்த அவையின் மூலம் மீண்டும் கேட்டுக்கொள்கிறது.

22–ந்தேதி அன்று நடந்த பேரணியில் 24 இடங்களிலிருந்து ஆங்காங்கே வந்தவர்கள் ஒரே இடத்தில் வந்து கூடினார்கள். 5 இடங்களில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து கூட்டத்தினர் மேற்கொண்டு செல்லாமல் தடுத்தார்கள். ஆனால் பேரணியில் வந்தவர்கள் போலீஸ் எச்சரிக்கையையும் மீறி செல்ல முயன்றார்கள். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை தடுத்தார்கள். ஆனால் அவர்கள் அதையும் மீறி வந்தார்கள். மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலிகளையும் தாண்டி உள்ளே சென்றார்கள்.

சமூக விரோதிகளும் உள்ளே நுழைந்தார்கள். 99 நாட்களாக போராட்டம் நடத்தினார்கள். ஆனால் எந்த பிரச்சினையும் இல்லை. அமைதியாக நடந்தது. ஆனால் இப்போது சமூக விரோதிகளும் உள்ளே நுழைந்தார்கள். அரசியல் சூழ்ச்சி செய்து அப்பாவி மக்களை ஊர்வலத்தில் செல்ல சதி திட்டம் தீட்டி பயன்படுத்தினார்கள். போலீசார் மீது கல்வீசி தாக்கினார்கள். கலெக்டர் அலுவலக வளாகத்தில் 35 அரசு வாகனங்கள், 2 போலீஸ் வண்டிகள், 110 தனியார் வாகனங்கள் ஆகியவற்றுக்கு தீவைத்து கொள்ளுத்தப்பட்டது. (இப்படி கூறிய முதலமைச்சர் பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் நுழைந்தது. போலீஸ் வண்டிகளுக்கு தீ வைத்தது. ஆயிரக்கணக்கான பேர் கலெக்டர் அலுவலகத்திற்குள் நுழைந்து தாக்கியது உட்பட ஏராளமான புகைப்படங்களை சட்டசபையில் காட்டினார்). ரணியில் சென்றவர்களை தடுப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என்பதற்கான வரைபடத்தையும் முதல்வர் சட்டசபையில் காட்டினார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 100 நாள் போராட்டம் மட்டுமல்ல 22 ஆண்டுகாலமாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். அம்மாவின் வழியில் நடைபெறும் ஆட்சி தான் அவர்களது போராட்டத்திற்கு தீர்வு கண்டிருக்கிறது. இந்த அரசு தான் தீர்வு காணும் என நினைத்து, அவர்களும் போராட்டம் நடத்தினார்கள். உரிமைக்காக போராடிய மக்களுக்கு நாங்கள் பாதுகாப்பு தந்தோம்.

ஸ்டெர்லை ஆலைக்கு மத்தியில் இருந்த காங்கிரஸ் ஆட்சிதான் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது. தி.மு.க. ஆட்சி காலத்தில் தான் இந்த ஆலை இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.22–ந்தேதி நடந்த சம்பவத்தின்போது தி.மு.க. ஒன்றிய செயலாளர் காரில் வந்தார். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் அவரை காரிலிருந்து இறக்கிவிட்டு அந்த காருக்கு தீ வைத்திருக்கிறார்கள். எனவே இதிலிருந்தே மக்கள் யார் மீது கோபம் கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும்.”இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

எனினும் முதல்வரின் விளக்கத்தில் துப்பாக்கிச்சூடு என்ற வார்த்தை இடம் பெறவில்லை. உயிரிழப்புகள், காயம் குறித்த எந்த தகவல்களும் இடம் பெறவில்லை என கூறி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

error: Content is protected !!