மேகதாது அணை கட்ட அனுமதி கூடாது: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

மேகதாது அணை கட்ட அனுமதி கூடாது: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்!

மேகதாது அணை கட்ட ஒன்றிய அரசு எந்தவித அனுமதியும் வழங்க கூடாது என சென்னையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுடன் ஒன்றிய அரசிடம் நேரில் வலியுறுத்த டெல்லி செல்வது என்றும் முடிவு செய்யப்பட்டது. இன்றைய கூட்டத்தில் மொத்தம் 3 தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக அரசு, மேகதாதுவில் அணையைக் கட்ட உத்தேசித்துள்ள நிலையில், காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமைகளை நிலைநாட்டவும், காவிரி நதிநீரைக் கொண்டு விவசாயம் செய்து வரும் தமிழ்நாடு வேளாண் பெருங்குடி மக்களின் நலனைப் பேணிக்காக்கவும், தமிழ்நாடு அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காமல், எவ்வித அனுமதியும் பெறாமல் மேகதாதுவில் கர்நாடகா அணை கட்ட முயற்சித்து வருகிறது. இதுகுறித்து அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுப்பதற்கு ஏதுவாக, இன்று (12–ந் தேதி) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு வருகை புரிந்தவர்களை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு வரவேற்றார்.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

பின்னர், கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டுவதற்கு மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்குவதாகத் தெரிவித்து, அரசுக்கு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

பின்னர், இந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் கீழ்க்காணும் தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு, ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

மேகதாது பிரச்சனை குறித்து நடைபெற்ற அனைத்து சட்டமன்றக் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்ட த்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று முக்கிய தீர்மானங்கள்

அரசியலமைப்பு சட்டத்துக்கு சவால்

‘உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி, காவிரியின் கீழ்ப்படுகை மாநிலங்களின், முன் அனுமதியைப் பெறாமல் மேகதாதுவில் எந்தவொரு கட்டுமானப் பணியையும் மேற்கொள்ளக் கூடாது. அதை மீறி, தற்பொழுது மேகதாதுவில் அணை கட்டுவதற்கான முயற்சிகளை கர்நாடக அரசு முழு முனைப்புடன் செய்து வருவது மிகவும் கண்டனத்திற்குரியது. இத்திட்டத்தினால் தமிழ்நாடு விவசாயிகளுக்குத் தேவையான நீர் கிடைப்பது பாதிப்படையும். உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு எதிரான இத்தகைய முயற்சி, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மாட்சிமைக்கு விடப்படும் சவாலாகும். எனவே, கர்நாடக அரசின் இத்திட்டத்திற்கு, இதில் தொடர்புடைய ஒன்றிய அரசின் அமைச்சகங்கள் எவ்விதமான அனுமதிகளையும் வழங்கக் கூடாது என ஒன்றிய அரசைக் கேட்டுக்கொள்வது.

அனைத்து கட்சிகளும் முழு ஆதரவு

இந்த அணை அமைப்பதற்கான முயற்சிகளைத் தடுப்பதில் தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மாநிலத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுடைய முழு ஆதரவையும், முழு ஒத்துழைப்பையும் வழங்கும்.

தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை முழுமையாக பிரதிபலிக்கும் வகையில், இக்கூட்டத்தின் தீர்மானங்களை ஒன்றிய அரசிடம் அனைத்துக் கட்சியினரும் நேரில் சென்று முதற்கட்டமாக வழங்குவது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையிலிருக்கும் வழக்கு உள்ளிட்ட சட்டபூர்வ நடவடிக்கைகள் மற்றும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வது’ என்றுமூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பின்னர், நீர் வளத் துறை அமைச்சர் நிறைவுரை ஆற்றினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில் பொதுப் பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நன்றிகூறினார்.

Related Posts

error: Content is protected !!