112 நாட்கள் – 300 பேர் பலி – தொடரும் விவசாயிகள் போராட்டம்!
மோடி தலைமையிலான பாஜக அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் 112 நாட்களில் 300 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளது. இதை அடுத்து #300DeathsAtProtest என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிலும் தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்தாண்டு நவம்பர் மாத இறுதியில் விவசாயிகள் தலைநகரில் தங்கள் போராட்டத்தை தொடங்கினர். கடந்த 112 நாட்களில் மட்டும் 300 விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் மாரடைப்பு, கடும் குளிர், வாகன விபத்து ஆகியவற்றாலேயே விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக டெல்லியில் கடும் குளிர் நிலவும் ஜனவரி மாதம் மட்டும் 108 விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். விவசாயிகள் மிக மோசமான நிலையில் எல்லையில் வசித்து வருவதாகவும் அவர்களுக்கு முறையான கழிப்பிட வசதிகள் கூட கிடைப்பதில்லை என்றும் விவசாய சங்கங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இதனால் அவர்களுக்கு எளிதாக மோசமான நோய் பாதிப்புகள் ஏற்படுவதாகவும் அதேபோல விபத்துகளிலும் அதிகளவில் விவசாயிகள் உயிரிழப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்தாண்டு மட்டும் சராசரியாக வாரத்தில் ஐந்து விவசாயிகள் என்று 261 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக சன்யுகட் கிசான் மோர்ச்சா தெரிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலகட்டத்தில் 93 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அதேநேரம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் விவசாயிகள் தற்கொலை 96 ஆக அதிகரித்துள்ளது. மத்திய அரசின் விவசாய சட்டங்களின் மீதான அதிருப்தியே விவசாயிகள் தற்கொலை அதிகரிக்கக் காரணம் என்று விவசாய அமைப்புகள் தெரிவித்துள்ளன.
இதனிடையே டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் 300 பேர் உயிரிழந்ததை குறிப்பிட்டு #300DeathsAtProtest என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.