‘தக்ஸ்’ – விமர்சனம்!

‘தக்ஸ்’ –  விமர்சனம்!

துல்கர் சல்மானை வைத்து ‘ஏ சினாமிகா’ என்னும் காதல் கதையை ரசிக்கும்படி படமாக்கிய இயக்குநர் பிருந்தா, இரண்டாவது படத்தில் ஆக்‌ஷன் கதையை கையில் எடுத்திருக்கிறார்.மலையாளத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான ஸ்வாதந்தர்யம் அர்த்தராத்திரியில் படத்தின் ரீமேக் ஆகும். தமிழுக்காக சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. கதை அ ங்கிருந்து எடுத்தாலும் திரைக்கதையும், காட்சிகளும் வேகமாக இருக்க வேண்டும் என்று இயக்குநர் பிருந்தா முடிவு செய்திருப்பதை படத்தின் ஒவ்வொரு காட்சியும் நிரூபிக்கிறது. சிறையில் இருந்து தப்பிப்பதை மையமாக வைத்துக்கொண்டு ஒரு முழுநீள ஆக்‌ஷன் கதையை விறுவிறுப்பாகவும், வேகமாகவும் நகர்த்தியிருக்கும் இயக்குநர் பிருந்தா, ஆக்‌ஷன் காட்சிகளை மிக நேர்த்தியாக படமாகியிருக்கிறார். ஆனாலும் இந்த டைப் படங்களுக்கு தேவையான அழுத்தம் மிகக் குறைவாக இருப்பதால் பாஸ் ஆகி இருக்கிறது.

ஹீரோ ஹிருது ஹாரூன் கொலை , கொள்ளை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று குமரி மாவட்ட சிறையில் அடைக்கப்படுகிறார். தனக்காக காத்திருக்கும் தனது காதலி அனஸ்வரா ராஜாவுக்காக சிறையில் இருந்து தப்பிக்க முடிவு செய்யும் ஹிருது ஹாரூன், தன்னை போல் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் சில கைதிகளை தன்னுடன் சேர்ந்துக்கொண்டு சிறையில் இருந்து தப்பிக்க திட்டம் போட, அந்த திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தினாரா? இல்லையா? என்பதே ‘தக்ஸ்’ படத்தின் கதை.

வேகமான செயல்பாடு, துடிப்பான நடிப்பு, ஆக்ரோஷமான கண்கள் என்று ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளையும் கொண்டுள்ள நாயகன் ஹிருது ஹாரூன், முதல் படம் போல் இல்லாமல் பட்டையை கிளப்பியிருக்கிறார். அவரது துடிப்பான நடிப்பு காட்சிகளின் விறுவிறுப்பை அதிகரிக்க செய்கிறது. நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் ஹிருது ஹாருனுக்கு கோலிவுட்டில் பெரிய எதிர்காலம் இருக்கிறது. நாயகியாக நடித்திருக்கும் அனஸ்வரா ராஜாவுக்கு வசனம் இல்லை என்றாலும் கண்களினாலேயே பேசி நடித்திருக்கிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் கவனம் பெறும் விதத்தில் அவரது அமைதியான நடிப்பு அமைந்திருக்கிறது.

இந்த கதை தமிழ் சினிமாவில் புதிதானது அல்ல எனினும் படத்தின் திரைக்கதை மற்றும் மேகிங் நாம் ரசிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது , இந்தப் படத்தின் டெக்னிக்கல் குழு தங்களது வேலையை சிறப்பாக செய்துள்ளனர் குறிப்பாக சாம் சி எஸ் இசை படத்திற்கு பெரிதும் பக்க பலமாக அமைந்துள்ளது,

ஆக்சன் காட்சிகள் நிறைந்த இந்த கதையை பரபரப்பான திரைக்கதையுடன் விறுவிறுப்பாக சொல்லி இருக்கிறார் இயக்குனர், படத்தில் ஒவ்வொரு சண்டை காட்சிகள் முடிந்த பின்னரும் ஒவ்வொருவரின் பின்னணி கதைகளை கூறி திரைக்கதையை சுவாரஸ்யமாக கையாண்டுள்ளார், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற பரபரப்பு ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. ஹிருது ஹாரூன் ஒரு இளம் வயது வாலிபனாக கண்களில் கோபத்துடன், ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக சாலையில் ஆட்டோவில் ஒருவரை துரத்தி அடிக்கும் காட்சியில் லைவாக இருந்தது நிறைய மெனக்கெடல் போட்டுள்ளார் என்பது அதிலிருந்தே தெரிகிறது,

ஆர்கே சுரேஷ் ஒரு சிறை அதிகாரியாகவே வாழ்ந்துள்ளார் என்றே கூறலாம். மறுபுறம் பாபி சிம்ஹா தனது தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் அவரின் எண்ட்ரி காட்சிகள் மாஸாக இருந்தது , முனீஸ் காந்த் வழக்கம் போல் தனது குணச்சித்திர நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், கதாநாயகி அனஸ்வரா ராஜன் மிகவும் அழகாக நடித்துள்ளார், எனினும் இந்த படத்தில் அனைவரும் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் தவறு செய்து விடுகின்றனர், அதனால் அவர்கள் தப்பிக்க முயற்சி செய்கின்றனர் இதை கொஞ்சம் மாறுதலாக சொல்லி இருக்கலாம்

ஒளிப்பதிவாளர் பிரியேஷ் குருசாமியின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சிறைச்சாலை காட்சிகள், சிறையில் இருந்து தப்பிக்கும் காசிகள் என அனைத்தையுமே மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பவர் ஆக்‌ஷன் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார். இசையமைப்பாளர் சாம் சிஎஸின் பின்னணி இசை படத்தின் ஆரம்பம் முதல் இறுதிக் காட்சி வரை படம் விறுவிறுப்பாக நகர பக்கபலமாக இருக்கிறது. பிரவீன் ஆண்டனியின் படத்தொகுப்பு எக்ஸ்பிரஸ் வேகத்தில் இருக்கிறது. ஜோசப் நெல்லிக்கல்லின் கலையும், ஸ்டண்ட் இயக்குநரின் பணியும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.

ஹாலிவுட்டில் ஹிட்டடித்த ‘பிரிசன் பிரேக்’ வகையறா திரைப்படங்களின் முக்கிய பலமாக இருப்பது சிறையில் இருப்பவர்கள் தப்பித்தே ஆகவேண்டும் என்ற பதற்றம் பார்வையாளனுக்கும் தொற்றிக்கொள்வதுதான். அது இந்த படத்தில் கொஞ்சம் கூட கனெக்ட் ஆகவில்லை.. மேலும் சிறையிலிருந்து தப்பித்தே ஆக வேண்டும் என்ற உணர்வை ரசிகனுக்குள் கடத்தாமல் இவர்கள் போடும் திட்டமெல்லாம் லைட்மேனுக்கே போரடிக்கும் விதத்தில் பண்ணி சொதப்பி விட்டார்..

ஆனாலும் மேக்கிங்-கில் முழுக் கவனம் செலுத்தி பாஸ் மார்க் வாங்கி விட்டது இந்த தக்ஸ்

மார்க் 2.75/5

Related Posts

error: Content is protected !!