June 7, 2023

அமெரிக்காவில் விமோசனத்துக்கு 12 நாள்கள் இருக்கின்றன. இங்கே?

மோதியை இந்தியாவின் டிரம்ப் என்றோ, டிரம்பை அமெரிக்காவின் மோதி என்றோ அரை குறையாக நம்மில் சிலர் புரிந்துகொண்டிருக்கிறோம். நானும் அப்படித்தான் புரிந் து கொண்டு இருந்தேன். அருந்ததி ராயின் வீடியோ ஒன்றை இரண்டாண்டுகள் முன்பு பார்க்கும் வரை. எவ்வளவு துல்லியமாக டிரம்பையும், மோதியையும், அமெரிக்காவையும், இந்தியாவையும் 2 ஆண்டுகள் முன்பே வேறுபடுத்திப் பார்த்திருக்கிறார் அருந்ததி ராய் என்பது, இன்றைய அமெரிக்க நிகழ்வுகளைப் பார்த்த பிறகு மேலும் நன்றாக உறைக்கிறது. அந்த வீடியோவை இக்கட்டுரையின் இறுதியில் இணைக்கிறேன்.

“கோளாறாகிப் போன அமெரிக்க அமைப்பின் கழிவு டொனால்டு டிரம்ப். அவரை வெள்ளை மாளிகையில் சமாளிக்கிறார்கள். ஆனால், மோதியை இந்த ஜனநாயகத்தில் உள்ள நிறுவனங்கள், ஊடகம், நீதித்துறை, உளவுத் துறை, ராணுவம் எல்லாமும் ஆதரிக்கின்றன” என்கிறார் அருந்ததி.

இவ்வளவு மோசமான தாக்குதலை, சீரழிவை, பிளவை டிரம்ப் ஏற்படுத்தியிருந்தாலும், அதை மீறி, வென்று நிமிர்ந்து நிற்கிறது அமெரிக்காவின் ஜனநாயகம். நிர்வாக அமைப்புகள், ஊடகங்கள் சுதந்திரமாக செயல்பட்டு இந்த இழிவை துடைத்திருக்கின்றன. ஆனால், இந்தியாவில் இந்த அமைப்புகள், ஊடகங்கள் இந்த வீழ்ச்சியின் பங்காளி ஆகியிருக்கின்றன. அமெரிக்காவில் விமோசனத்துக்கு 12 நாள்கள் இருக்கின்றன. இங்கே? அருந்ததி ராய் போல உலகை வியாக்கியானம் செய்யவாவது நமக்கு ஓரிருவர் இருக்கிறார்கள். ஆனால், மாற்றியமைக்க…?

இப்படி ஒரு தாக்குதலை நடத்திய நிலையில் டிரம்பின் சொந்தக் கட்சி (இத்தனை மூர்க்கத்திலும் அவரை ஓரளவு தாங்கிப் பிடித்த கட்சிதான் என்றாலும்) எப்படி அம்போவெனக் கைவிட்டு, அமைப்பைக் காக்கப் புறப்பட்டிருக்கிறது என்று பாருங்கள். (அதற்கும் ஒரு இணைப்பு -இதோ ). எப்படி கட்சி அரசியலுக்கு மேலே தங்கள் அமைப்பை, ஜனநாயகத்தை அவர்கள் மதிப்பிடுகிறார்கள் என்பது புரியும்.

ரொம்ப மோசமாகப் போன பிறகு குடியரசுக் கட்சி ஓடிவந்து ஜனநாயகத்துக்காக கை கோர்ப்பதில்கூட ஒரு பாசாங்கு இருப்பதாக கூற முடியும். ஆனால், நிர்வாக அமைப்புகள், தேர்தல் நிர்வாகம், நீதித்துறை, ஊடகங்கள் காட்டிய உறுதி சர்வாதிகாரத்தின் பக்கம் போய்விடாமல் காத்துக்கொள்ளும் ஊக்கமும், பண்பும் அமெரிக்க ஜனநாயகத்தில் உள்ளுறையாக இருப்பதை உணர்த்தும்.

கருப்பின மக்களின் எழுச்சி, அதற்கு வழிகோலும் ஜனநாயகத்தின் மீதான தடுமாற்றத்தை அமெரிக்க வெள்ளையர்களில் ஒரு பகுதியினருக்கு ஏற்படுத்தியிருப்பதை ஓரளவு அனுமானிக்கலாம். ஆனால், அந்த ஜனநாயகம்தான் தங்களுக்கும் பாதுகாப்பு என்று கருதும் சுயநலமாவது, நிதானமாவது அவர்களிடம் எஞ்சியிருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.

பொருளாதாரத்தில் நிலவாத ஜனநாயகம், எப்படி அரசியல் தளத்தில் இவ்வளவு பற்றுறுதியோடு வெளிப்படுகிறது?

இந்த ஜனநாயகத்தின் வர்ககத் தொடர்பு எப்படி செயல்படுகிறது?

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்று கூறி 100 பூக்களை கையிலேந்திப் பிறக்கிற பொதுவுடமை நாடுகள் குடிகளின் உரிமையைக் காலில் போட்டு மிதிக்கும்போது லாப தெய்வத்தை வழிபடும் முதலாளித்துவ நாடுகளில், காசு பண உறவைத் தவிர மனித உறவில் ஏதுமில்லை என்று ஆக்கியதாக மார்க்ஸ் குறிப்பிடும் முதலாளித்துவத்தின் மூர்க்க வடிவமான ஏகாதிபத்திய நாடு ஒன்றில் இப்படி எப்படி ஜனநாயகம் நிலவுகிறது? இதைப் புரிந்துகொள்ள ஒரு நல்ல ஆசிரியரைத் தேடுகிறேன்.

AD Bala