பிரபலமானோர் மரண நிகழ்வுகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் போக்கு!

பிரபலமானோர் மரண நிகழ்வுகளை நேரடி ஒளிப்பரப்பு செய்யும் போக்கு!

மும்பையில் 2008ம் ஆண்டு நடந்த தீவிரவாதத் தாக்குதல் தொடர்ந்து நீண்டுகொண்டேயிருக்க, ஒரு கட்டத்தில் தேசிய பாதுகாப்பு படை (NSG) களம் இறங்கிய சூழலில், மிகத் தாமதமாக உணரப்பட்ட ஓர் உண்மை, தொலைக்காட்சிகள் நேரலை செய்த காட்சிகளை வைத்து தீவிரவாதிகளுக்கு ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகள் வந்தன என்பதுதான். ’இது முடியவேண்டுமென்றால் நாங்கள் சுட வேண்டியது டிவி கேமராக்களைத்தான்!’ என ஓர் அதிகாரி சொன்னதாக அப்போது கேள்விப்பட்ட நினைவு.

எந்தவொரு நிகழ்விலும் ஊடகங்களின் பங்கு மிக முக்கியமானது. தீவிரமாக உழைத்து அல்லது எதேட்சையாக பிடித்த சில காட்சிகள்தான் பலவற்றை வெளிச்சமிட்டுக் காட்டியிருக்கின்றன. அதே நேரத்தில் அப்படியான செயல்கள் மிகப் பெரிய சங்கடத்தையும், இழப்பையும் ஏற்படுத்தியுள்ளன என்பதையும் நாம் அறிவோம். சமீபத்தில் நிகழ்ந்த நடிகர் மாரிமுத்து மற்றும் விஜய் ஆண்டனி மகள் மரணங்களில் பெரும்பாலான ஊடகங்கள் குறிப்பாக பல YouTube சானல்கள் செய்தவை இங்கிதமற்றவை மற்றும் மிக அநாகரீகமானவை.

இழப்பு ஏற்பட்டது பிரபலமானவர் குடும்பம் என்பதற்காக மட்டுமே, பரபரப்புக்காகவோ அல்லது கடமை எனும் பெயரிலோ, எந்த எல்லைக்கும் செல்வது மனிதத் தன்மையற்றது. வாழ்வை வாழ்ந்து முடிந்து நிறைவாகச் செல்லும் ஒருவரின் மரணத்தை ஊரில் கல்யாணச் சாவு என்பார்கள். அப்படியான மரணங்களில் வருவோர் போவோரை படம் பிடிக்கலாம், இறந்தவர் குறித்த நினைவுகளுக்காக பேட்டி எடுக்கலாம். வாழ வேண்டிய வயதில், வேரை, விழுதை இழந்து நொறுங்கித் தவிக்கும் குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல வரும் பிரபலத்தை ஓடியோடி படம் பிடிப்பதில், அவர்களிடம் கருத்துக் கேட்பதில் என்ன நிகழ்த்திவிட முனைகிறார்கள்.

திடீர் மாரடைப்பால் இறந்துபோன நடிகர் மாரிமுத்து அவர்களின் மரணத்தில் அதிர்ந்து கலங்கும் அதே நேரம், பொறுமையாக புரிந்துகொள்ளும் வகையிலான மிக முக்கியமான ஒரு பாடம் உண்டு. திடீரென அதீதமான வியர்வை, ஒருமாதிரியான அசௌகரியம் என்று டப்பிங் ஸ்டுடியோவில் இருந்து வெளியில் வரும் மாரிமுத்து, ஃபோனில் யாரையோ அழைத்துவிட்டு, தாமே தம் காரை எடுத்துக்கொண்டு மருத்துவமனை செல்வது போன்று ஒரு சிசிடிவில் பதிந்துள்ளது. அது அன்றைய தினம் நடந்ததன் காட்சியாக இருப்பின், அவர் ஒட்டுமொத்த உலகத்திற்கும் ஒரு பாடத்தை தந்து சென்றுள்ளார்.திடீரென நெஞ்சுவலி அல்லது அதன் அறிகுறிகள் ஏற்படும்போது யோசிக்காமல், தயங்காமல் உடனிருப்போர் உதவியை உடனே கோரவேண்டும். முடிந்தவரை தம்மை ஓய்வில் வைத்து மருத்துவமனை செல்வதற்கு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள வேண்டும். முன்பே அறிகுறிகள் இருந்தால், அவசர கட்டத்தில் உதவக்கூடிய மருந்துகளை சரியான ஆலோசனையோடு உடன் வைத்திருத்தல் என்பதையெல்லாம் விரிவாக, தன்மையாக ஒரு விழிப்புணர்வாக செயல்படுத்துவதே ஊடகங்களின் உண்மையான தேவை மற்றும் சேவை.

தற்கொலைகளைப் பொறுத்தவரையில் எக்காரணம் கொண்டும் பரபரப்பு ஆக்கக்கூடாது, பரப்பவும் கூடாது. அது DIGயாக இருந்தாலும் சரி அல்லது 16 வயது மாணவியாக இருந்தாலும் சரி. பரபரப்பாகும் அல்லது சமூக வலைதளங்கள் மூலம் திரும்பத் திரும்ப பரவுவது, தற்கொலை எண்ணம் கொண்டிருப்போருக்கு மிகப் பெரும் பாதிப்பைத் தரும். அதிலும் தற்கொலை மரணங்களுக்கு ’உளவியல் பாதிப்பு, சிகிச்சை’ என்பதை மட்டுமே உடனடிக் காரணமாக வழங்குவதை கடுமையாகத் தடுக்க வேண்டும். உளவியல் ரீதியாக வெளியில் சொல்லியும், சொல்லத் தெரியாமலும் பல்வேறு சவால்களை பலரும் சந்தித்து வரும் இந்தக் காலகட்டத்தில், இதை ஊடகங்கள் வெறிகொண்டு முறையற்ற வகையில் பேசுவது இன்னும் பலரையும் வீழ்த்தும் அல்லது மீள முடியா ஆழத்திற்கு மெல்ல மெல்ல இட்டுச் சென்றுவிடும்.

ஊடகங்களை நோக்கி ஒரு விரல் சுட்டும்போது, பரபரப்பாக எதைப் போட்டாலும் வெறிகொண்டு பார்ப்பதோடு, பரப்பித் திரியும் நம்மை மற்ற விரல்கள் சுட்டுவதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ‘அவங்க காட்டலைனா நாங்க ஏன் பார்க்கப்போறோம், அவங்க பார்க்கலைனா நாங்க ஏன் காட்டப்போறோம்!’ என இரு தரப்பும் பழி போட்டுக்கொண்டிருக்கலாம். மனிதத்தோடு வாழ, இரு தரப்பும் பண்பட வேண்டிய நேரம் இது!

– ஈரோடு கதிர்

Related Posts

error: Content is protected !!