மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி – சுப்ரீம் கோர்ட் நாளை தீர்ப்பு வழங்குகிறது!

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சி – சுப்ரீம் கோர்ட் நாளை  தீர்ப்பு வழங்குகிறது!

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கான கடிதம் மற்றும் எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் அளித்தனர் என்பதற்கான ஆவணங்களை சுப்ரீம் கோர்ட்டில் சொலிசிட்டர் ஜெனரல் நாளை காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதனால், இன்றைக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கான வாய்ப்பு இல்லையென்பது உறுதியாகிவிட்டது.

மகாராஷ்டிராவில் தேவேந்திரா பட்னாவிஸ் முதல்வராகவும், தேசியவாத காங்கிரஸின் அஜித் பவார் துணை முதல்வராகவும் நேற்று காலை அதிரடியாக பதவியேற்றனர். இதனை எதிர்த்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் இன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.

இன்றைய விசாரணையின் போது சிவசேனா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், தேர்தலுக்கு முந்தைய பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாகக் கூறி வாதங்களை முன்வைத்தார். மகாராஷ்டிரா பாஜக அரசு இன்றைய தினமே நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த உத்தரவிட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார். பெரும்பான்மை இருப்பதாகக் கூறும் பாஜக, சட்டப்பேரவையில் அதை உடனடியாக நிரூபிக்கப்பட்டும் எனவும் அவர் வாதிட்டார். மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் இன்றி மகாராஷ்டிரத்தில் குடியரசு தலைவர் ஆட்சி திரும்பப் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தரப்பில் வாதிட்ட அபிஷேக் சிங்வி, நம்பிக்கை வாக்கெடுப்பே ஜனநாயகத்தின் தனிச்சிறப்பு எனக் கூறினார். கர்நாடகாவை போலவே மகாராஷ்டிராவிற்கும் 24 மணி நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரிய அவர், நம்பிக்கை வாக்கெடுப்பு தாமதமானால் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என அச்சம் தெரிவித்தார். மேலும் நேற்று பெரும்பான்மை இருப்பதாகக் கூறி பதவியேற்றவர்கள், இன்று அதை நிரூபிக்க தயங்குவது ஏன் எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பாஜக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, ஞாயிற்றுக் கிழமையான இன்று மனு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருக்க கூடாது எனவும், இன்றைய தினம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கக் கூடாது எனவும் வாதிட்டார். மேலும் ஆளுநர் பாஜகவுக்கு அழைப்பு விடுத்ததில் எந்த சட்டவிரோதமும் இல்லை என தெரிவித்த முகுல் ரோத்தகி, 3 எதிர்க் கட்சிகளுக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும் என கோருவதற்கு அடிப்படை உரிமைகள் இல்லை என வாதிட்டார்.

இதனை கேட்ட நீதிபதி என்.வி.ரமணா, நீதிமன்றத்துக்கு வானமே எல்லை எனவும், யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் என பதிலளித்தார்.

இதையடுத்து காரசாரமாக நடைபெற்ற இரு தரப்பு வாதங்களையும் கவனமாக கேட்ட நீதிபதிகள், நாளை உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தெரிவித்து வழக்கை ஒத்தி வைத்தனர். மேலும் 3 கட்சிகளின் மனு தொடர்பாக மத்திய அரசு, மாநில அரசு, தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் நாளை பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். அத்துடன்
பாஜக ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கான கடிதம் மற்றும் எத்தனை எம்.எல்.ஏக்கள் ஆதரவு கடிதம் அளித்தனர் என்பதற்கான ஆவணங்களை சொலிசிட்டர் ஜெனரல் நாளை காலை 10.30 மணிக்குள் தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Related Posts

error: Content is protected !!