மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!
தாங்கள் பிறந்த நாட்டிற்கு பெருமை சேர்த்தவர்கள், வெற்றி மேடையில் நின்றவர்கள், கழுத்தில் பதக்கங்கள், தேசிய கீதத்தால் ஸ்டேடியத்தை நிரப்பியவர்கள் இன்று நீதி கேட்கிறார்கள். டெல்லி ஜந்தர் மந்தரில் அவர்களது போராட்டம் ஒருமாத காலத்தை தாண்டியுள்ளது. இந்த நிலையில், டெல்லியில் நடைபெற்று வரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டது.
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பாஜக எம்பி மீது போக்சோ உள்பட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. டெல்லி போலீசார் இதுவரை 2 முறை எம்பியின் உறவினர்கள், வீட்டில் இருப்பவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.
பாஜக எம்பியை கைது செய்யக்கோரி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், பேச்சுவார்த்தைக்கு வருமாறு அவர்களுக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து இருந்தது. அதன் அடிப்படையில் டெல்லியில் இன்று அமைச்சர் அனுராக் தாக்கூர் உடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அமைச்சர் உடனான பேச்சுவார்த்தைக்கு பின் சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது; பாலியல் புகார் தொடர்பான விசாரணையை முடிக்க ஒன்றிய அரசு வரும் 15ம் தேதி வரை அவகாசம் கோரியுள்ளது.
மல்யுத்த வீரர்களுக்கு எதிரான அனைத்து எஃப்ஐஆர்களையும் திரும்பப் பெற வேண்டும் என்று நாங்கள் கோரியுள்ளோம், அதற்கு அவர் ஒப்புக்கொண்டார். பிரச்சினைக்கு 15 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உறுதி அளித்துள்ளார். ஜூன் 15ம் தேதி வரை போராட்டம் நடத்த மாட்டோம். நீதிக்கான எங்களது போராட்டம் ஓயவில்லை. 15ம் தேதிக்குள் போலீஸ் விசாரணையை முடிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டத்தை தொடர்வோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
மல்யுத்த வீரர், வீராங்கனைகளுடனான சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர், “மல்யுத்த வீரர்களுடன் நான் 6 மணி நேரம் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தினேன். ஜூன் 15-ம் தேதிக்குள் விசாரணை முடிக்கப்படும், அதன் பின்னர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டுள்ளது. மல்யுத்த கூட்டமைப்புக்கான தேர்தல் ஜூன் 30ம் தேதி நடத்தப்படும்” என்று அவர் தெரிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.