June 2, 2023

பட்டத்து அரசன் என்று பெயர் வைக்கக் காரணம்?-இயக்குநர் சற்குணம் விளக்கம்!

‘களவாணி’ படத்தின் மூலம் கோலிவுட் ரசிகர்களை கவர்ந்தவர் சற்குணம். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு களவாணி 2, டோரா, வாகை சூடவா, நய்யாண்டி, சண்டி வீரன் உள்ளிட்ட படங்களை இயக்கினார். பின்னர் தற்போது அதர்வாவை வைத்து ‘பட்டத்து அரசன்’ படத்தை இயக்கியுள்ளார். ‘சண்டி வீரன்’ படத்திற்கு பிறகு இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது. இந்த படத்தில் அதர்வாவுடன் இணைந்து ராஜ் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதர்வாவுக்கு ஜோடியா ஆஷிகா ரங்கநாத் நடித்துள்ளார். இவர்களுடன் ராதிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.

லைக்கா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 25-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் குறித்து இயக்குநர் சற்குணம் சொன்னது இதுதான்…..

நான் ஒரு கபடி விளையாட்டுக்காரன். ஊர்ப்பக்கம் கபடிப் போட்டிகள் நடக்கும்போது பார்க்கப்போவேன். அப்படி ஒருமுறை போனபோது, ஒரு குழுவில், ஒரு குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா அப்பா பேரன் உள்ளிட்ட மொத்தக் குடும்பமும் கபடி விளையாடியதைப் பார்த்தேன். வியப்பாக இருந்தது.
அதையே கதைக்கருவாக்கிவிட்டேன்.அதற்குள் தஞ்சை மாவட்டத்தில் வழக்கத்தில் இருக்கும் இரண்டு பாக விசயத்தையும் கதைக்குள் வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறேன்.

இரண்டு பாக விசயம் என்பது, ஒருவருக்கு இரண்டு மனைவிகள், ஒரு மனைவிக்கு நான்கு குழந்தைகள் இன்னொருவருக்கு ஒரே குழந்தைதான் என்றாலும் அவருடைய சொத்துகளை மனைவிகள் அடிப்படையில் இரண்டு பாகங்களாகப் பிரிப்பார்கள். அதனால் பல சிக்கல்கள் ஏற்படும். இவற்றையெல்லாம் வைத்து கூடவே கபடி விளையாட்டு, தாத்தா பேரன் பாசம் ஆகியனவற்றைக் கொண்டு படத்தை எடுத்திருக்கிறோம்.

பட்டத்து இளவரசன் தான் இருப்பார்கள் பட்டத்து அரசன் என்று பெயர் வைக்கக் காரணம் வாலி சாரின் பாடல்தான். பட்டத்து இராசாவும் பட்டாள சிப்பாயும் என்கிற பாடலை எடுத்துக்காட்டாக வைத்து பட்டத்து அரசன் என்றே பெயர் வைத்துவிட்டோம்.

இந்தப்படத்தில், வெற்றிலைத்தோட்டம் அங்கு நடக்கும் செயல்கள் ஆகியனவற்றைப் பின்புலமாக வைத்திருக்கிறோம். அதுகுறித்த காட்சிகள் புதிதாக இருக்கும். நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஜிப்ரான் என்னுடன் சேர்ந்து பணிபுரிந்திருக்கிறார். பாடல்களும் பின்னணி இசையும் நிச்சயம் பேசப்படும் வகையில் இருக்கும். படம் நன்றாக வந்திருக்கிறது. எல்லோருக்கும் பிடிக்கும்விதமாக அமைந்திருக்கிறது.”இவ்வாறு அவர் கூறினார்.