இந்திய விளையாட்டரங்கில் அடுத்த அதிரடி:10 மடங்கு வளரக் காத்திருக்கும் ‘பேடல்’ சந்தை!

இந்திய விளையாட்டரங்கில் அடுத்த அதிரடி:10 மடங்கு வளரக் காத்திருக்கும் ‘பேடல்’ சந்தை!

ந்திய விளையாட்டுத் துறையில் கிரிக்கெட், கால்பந்து மற்றும் அண்மையக் கால கபடி எழுச்சிகளுக்கு மத்தியில், தற்பொழுது ‘பேடல்’ (Padel) என்னும் புதிய டென்னிஸ் வடிவ விளையாட்டு மிக அதிவேகமாகத் தன் தடத்தைப் பதித்து வருகிறது. வெறும் பொழுதுபோக்கு விளையாட்டாகத் தொடங்கி, இன்று நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டு உள்கட்டமைப்புகளில் ஒன்றாக இது உருவெடுத்துள்ளது.

ஹடில் (Hudle) நிறுவனத்தின் ‘இந்தியா பேடல் அறிக்கை 2026’ தரவுகளின்படி, கடந்த 2023 ஆம் ஆண்டில் வெறும் 1,000 ஆக இருந்த இந்த விளையாட்டின் வீரர்களின் எண்ணிக்கை, நடப்பு 2026 ஆம் ஆண்டில் 1,00,000 (ஒரு லட்சம்) வீரர்களாக அசுர வளர்ச்சி கண்டுள்ளது. விளையாட்டு மீதான ஆர்வம் மற்றும் உள்கட்டமைப்புகளின் அசுர விரிவாக்கம் காரணமாக, இந்த விளையாட்டு இந்திய விளையாட்டுச் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து வருகிறது.

நகரங்களை ஆக்கிரமிக்கும் பேடல் மைதானங்கள்

விளையாட்டு வீரர்கள் அதிகரித்துள்ள அதே வேளையில், அதற்கான பிரத்யேக விளையாட்டு மைதானங்களின் (Courts) எண்ணிக்கையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. ஆரம்பத்தில் வெறும் 100 ஆக இருந்த மைதானங்களின் எண்ணிக்கை, தற்போது மும்பை, டெல்லி, பெங்களூரு மற்றும் சண்டிகர் போன்ற முக்கிய நகரங்களை மையமாகக் கொண்டு 500 மைதானங்களாக அதிகரித்துள்ளது.

இந்திய விளையாட்டுத் துறையின் முக்கிய முதலீட்டாளர்களான பார்த் ஜிந்தால் (JSW Sports) மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி ஆகியோரின் ஆதரவுடன் செயல்படும் ‘பேடல்பார்க் இந்தியா’ (PadelPark India), இந்த உள்கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லத் திட்டமிட்டுள்ளது. அதன் இணை நிறுவனர் நிகில் சச்தேவ் கணிப்பின்படி, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பேடல் மைதானங்களின் எண்ணிக்கை 5,000 ஆக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புரோ கபடி பாணியில் புதிய பிரான்சைஸ் லீக்

இந்த விளையாட்டை இந்தியாவின் பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்க்கும் நோக்கில், அடுத்த ஆண்டு முதல் எட்டு நகரங்களை உள்ளடக்கிய பிரம்மாண்ட பிரான்சைஸ் லீக் (Franchise League) போட்டிகளைத் தொடங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இது குறித்து JSW ஸ்போர்ட்ஸ் நிறுவனர் பார்த் ஜிந்தால் கூறும்போது:

“நாங்கள் ஒரு பிராந்திய அடிப்படையிலான பிரான்சைஸ் லீக் போட்டியைத் தொடங்க ஆவலோடு இருக்கிறோம். புரோ கபடி லீக் எப்படி கபடி விளையாட்டின் முகத்தையே மாற்றியதோ, அதே போன்ற ஒரு புரட்சியை இந்த பேடல் லீக் இந்திய விளையாட்டுத் துறையில் ஏற்படுத்தும் என்று நம்புகிறோம். இந்த லீக் தொடங்கப்படும் போது, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்கள் வாயிலாகப் புதிய பார்வையாளர்களை ஈர்க்க முடியும். இது இந்த விளையாட்டை மக்களிடம் கொண்டு சேர்க்கப் பெரிதும் உதவும்.”

கார்ப்பரேட் முதலீடுகளும் தற்போதைய சவால்களும்

விளையாட்டின் வணிக ரீதியிலான வளர்ச்சியை உணர்ந்து கார்ப்பரேட் நிறுவனங்களும் இதில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளன. உதாரணமாக, வேதாந்தா குழுமம் (Vedanta Group) ஏற்கனவே டபிள்யூபிஎல் (WPL) மற்றும் பேடல்360 (Padel360) ஆகிய இரண்டிலும் அணிகளைச் சொந்தமாக்கிக் கொண்டு தனது முதலீடுகளை விரிவுபடுத்தியுள்ளது.

இருப்பினும், இந்த விளையாட்டு இந்தியாவில் இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அதன் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் சில முக்கிய சவால்களாக விளையாட்டுத் துறை வல்லுநர்கள் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகின்றனர்:

  • மைதானங்களின் அடர்த்தி (Court Density): விளையாட விரும்பும் அனைவருக்கும் எளிதாக மைதானங்கள் கிடைக்கும் வகையில் அதன் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.

  • மலிவு விலை உபகரணங்கள்: பேடல் விளையாட்டிற்கான ராக்கெட்டுகள் மற்றும் பந்துகள் போன்ற உபகரணங்களின் விலையைக் குறைத்து, நடுத்தர மக்களும் அணுகும் வகையில் மாற்ற வேண்டும்.

  • இரண்டாம், மூன்றாம் கட்ட நகரங்களின் விரிவாக்கம்: பெருநகரங்களைத் தாண்டி சிறு நகரங்களுக்கும் இந்த விளையாட்டைக் கொண்டு செல்ல வேண்டும்.

  • அங்கீகரிக்கப்பட்ட கூட்டமைப்பு: சர்வதேச பேடல் கூட்டமைப்பால் (International Padel Federation) அங்கீகரிக்கப்பட்ட, தேசிய அளவிலான ஒரு முறையான விளையாட்டு ஆளுமை அமைப்பு (Governing Body) இந்தியாவுக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது.

பில்லியன் டாலர் சந்தையை நோக்கி

தற்போது இந்தியாவின் பேடல் விளையாட்டுச் சூழல் மற்றும் அதன் சந்தை மதிப்பு 25 முதல் 30 மில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், உள்கட்டமைப்பு மற்றும் லீக் போட்டிகளின் வருகையால், வரும் 2036 ஆம் ஆண்டிற்குள் இந்த சந்தை மதிப்பு இப்பொழுது இருப்பதை விட 10 மடங்கு வரை பிரம்மாண்டமாக வளர்ச்சியடையும் என்று அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலைநாடுகளில் பெரும் வரவேற்பைப் பெற்ற பேடல் விளையாட்டு, தற்பொழுது கார்ப்பரேட் முதலீடுகள் மற்றும் பிரபலங்களின் ஆதரவோடு இந்தியாவில் ஒரு புதிய விளையாட்டுப் புரட்சியை ஏற்படுத்தத் தயாராகிவிட்டது. பொழுதுபோக்காக ஆடப்படும் கிளப் விளையாட்டுகளில் இருந்து, சர்வதேச தரத்திலான வணிக ரீதியான விளையாட்டாக இது மாறுவது இனி காலத்தின் கட்டாயம்.

நிம்மி

Related Posts