வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரன்பை, ஒரு நொடியில் கடத்திவிடும் உன்னதமான கலை முத்தம். உலகெங்கிலும் உள்ள மனிதர்களிடையே அன்பு, காதல் மற்றும் பிணைப்பின் ஆகச்சிறந்த குறியீடாகத் திகழும் இந்த உணர்வுப்பூர்வமான செயலைக் கொண்டாடும் விதமாக, ஆண்டுதோறும் ஜூலை 6-ஆம் தேதி ‘உலக முத்த நாள்’ (World Kissing Day / International Kissing Day) கொண்டாடப்படுகிறது. வெறும் காதல் வயப்பட்ட விஷயமாக மட்டுமே பார்க்கப்படும் முத்தத்திற்குப் பின்னால் அலாதியான வரலாறும், வியப்பூட்டும் மருத்துவ அறிவியலும் ஒளிந்திருக்கின்றன.
உலக முத்த நாளின் பின்னணி
இந்தக் கொண்டாட்டத்தின் வேர்கள் ஐக்கிய இராச்சியத்தில் (UK) இருந்து தொடங்கின. 2000-களின் ஆரம்பத்தில் அதிகாரப்பூர்வமாக உலக நாள்காட்டியிலும் இது இடம்பிடித்தது. மனிதர்களுக்கிடையிலான நெருக்கத்தை, அன்பை எவ்வித நிபந்தனையுமின்றி வெளிப்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும். வணிகமயமாக்கப்பட்ட காதலர் தின கொண்டாட்டங்களைப் போலன்றி, எந்தவொரு பகட்டும் இல்லாமல் உண்மையான உணர்வுகளைப் பகிர்ந்துகொள்ளும் நாளாக இது உலகெங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது.

வரலாற்றின் பக்கங்களில் முத்தம்
மானுடவியல் ஆய்வுகளின்படி, முத்தம் என்பது மனித நாகரிகத்தின் தொடக்கக் காலத்திலிருந்தே இருந்து வருகிறது. கி.மு. 1500-களிலேயே இந்தியாவின் வேத நூல்களில் மனிதர்கள் தங்களின் முகங்களை ஒருவரோடுមொருவர் தேய்த்து, அன்பை வெளிப்படுத்தியதற்கான குறிப்புகள் உள்ளன. பின்னர் ரோமானியப் பேரரசு காலத்தில், முத்தம் என்பது சமூக அந்தஸ்தின் அடையாளமாக மாறியது. அவர்கள் முத்தத்தை மூன்று வகையாகப் பிரித்திருந்தனர்: ‘ஆஸ்கியுலம்’ (சமூக நட்புக்கான கன்னத்தில் முத்தம்), ‘பேசியம்’ (உதட்டு முத்தம்), ‘சாவியம்’ (ஆழ்ந்த காதல் முத்தம்). காலப்போக்கில் இது உலகளாவிய அன்பின் மொழியாக உருவெடுத்தது.
முத்தத்தின் பின்னுள்ள மருத்துவ அறிவியல்
முத்தம் என்பது வெறும் உணர்ச்சி வெளிப்பாடு மட்டுமல்ல, அது உடலிலும் மனதிலும் பல்வேறு ஆரோக்கியமான மாற்றங்களை நிகழ்த்தும் ஒரு இயற்கை மருத்துவம் என்று அறிவியல் கூறுகிறது.
-
மகிழ்ச்சி ஹார்மோன்களின் சுரப்பு: ஒருவருக்கு முத்தமிடும்போது மூளையில் ஆக்ஸிடாசின் (Oxytocin), டோபமைன் (Dopamine) மற்றும் செரோடோனின் (Serotonin) போன்ற மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் அதிகளவில் சுரக்கின்றன. இது மன அழுத்தத்தைக் குறைத்து, உடனடி புத்துணர்ச்சியைத் தருகிறது.
-
இரத்த அழுத்தம் குறைதல்: முத்தமிடும்போது இதயத் துடிப்பு சீராகி, இரத்த நாளங்கள் விரிவடைகின்றன. இதனால் உடலின் இரத்த ஓட்டம் சீராகி, உயர் இரத்த அழுத்தம் குறைகிறது.
-
இளமையைத் தக்கவைத்தல்: ஒரு தீவிரமான முத்தத்தின்போது முகத்தில் உள்ள சுமார் 34 தசைநார்கள் (Facial muscles) வேலை செய்கின்றன. இது முகத்திற்கான சிறந்த உடற்பயிற்சியாக அமைந்து, தோலில் சுருக்கங்கள் விழுவதைத் தடுத்து இளமையைத் தக்கவைக்க உதவுகிறது.
-
கலோரி எரிப்பு: வியப்பாக இருந்தாலும், ஒரு நிமிட முத்தத்தின் மூலம் உடலில் தோராயமாக 2 முதல் 6 கலோரிகள் வரை எரிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கலாச்சார வேறுபாடுகளும் உலக சாதனையும்
உலகில் 90 சதவீதத்திற்கும் அதிகமான கலாச்சாரங்களில் முத்தம் என்பது பொதுவான ஒன்றாக இருந்தாலும், சில நாடுகளில் இதற்கு மாறுபட்ட வடிவங்கள் உள்ளன. உதாரணமாக, பிரான்ஸ் நாட்டில் கன்னத்தோடு கன்னம் வைத்து ‘லா பைஸ்’ (La Bise) என்ற முறையில் வாழ்த்துப் பகிர்வது வழக்கம். அதேபோல் எஸ்கிமோக்கள் தங்களின் மூக்குகளை ஒன்றுடன் ஒன்று தேய்த்து அன்பை வெளிப்படுத்துகிறார்கள்.

உலக முத்த நாளைப் பற்றிப் பேசும்போது, தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் நிகழ்த்திய உலக சாதனை என்றும் நினைவுகூரத்தக்கது. எக்கடாய் மற்றும் லக்ஷனா தீரநாரத் ஆகிய தம்பதியினர் தொடர்ந்து 58 மணி நேரம், 35 நிமிடங்கள், 58 நொடிகள் முத்தமிட்டு ‘மிக நீண்ட முத்தம்’ என்ற கின்னஸ் உலக சாதனையைப் படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உறவை பலப்படுத்தும் மந்திரச் சாவி
நவீன உலகின் பரபரப்பான வாழ்க்கைச் சூழலில், தம்பதியினரிடையேயும், குடும்ப உறுப்பினர்களிடையேயும் இருக்கும் இடைவெளியைக் குறைக்க முத்தம் ஒரு எளிய பாலமாக அமைகிறது. அது காதலர்களுக்கு இடையிலான காதலாக இருக்கலாம், பெற்றோர் – குழந்தைகளுக்கிடையிலான பாசமாக இருக்கலாம் அல்லது நண்பர்களின் பிரியமாக இருக்கலாம்; வார்த்தைகள் தோற்றுப்போகும் இடத்தில் ஒரு சிறிய முத்தம், “நான் உன்னோடு இருக்கிறேன்” என்ற மாபெரும் நம்பிக்கையைத் தந்து உறவை மேலும் பலப்படுத்துகிறது.
நிம்மி

