மருத்துவத் தாவரங்களின் மகத்துவம்:உலகக் காட்டுயிர் நாள் சொல்லும் செய்தி!
காலையில எந்திரிச்சதும் காபி குடிக்கிறோம், சுத்தமான காத்தை சுவாசிக்கிறோம். இதெல்லாம் எங்கிருந்து வருதுன்னு யோசிச்சு பார்த்திருக்கோமா? நமக்கெல்லாம் சோறு போடுற விவசாயிக்கு எவ்வளவு முக்கியத்துவம் தர்றோமோ, அதே அளவு முக்கியத்துவத்தை காடுகளுக்கும் அதில் வாழும் உயிரினங்களுக்கும் நாம கொடுத்தே ஆகணும். ஏன்னா, அவங்க இல்லாம நாம இல்லை.
‘மோசமான’ மனித ஆதிக்கம்
நாம இருக்குற அடுக்குமாடி குடியிருப்புகள் ஒரு காலத்துல அடர்ந்த காடா இருந்திருக்கலாம். “இந்த பூமி மனுஷங்களுக்கு மட்டும்தான்” அப்படின்னு நாம நினைக்கிறதுதான் இருக்குறதுலயே பெரிய தப்பு. காடுகளுக்குள்ள புகுந்து ரிசார்ட் கட்டுறது, யானைங்க பல வருஷமா நடமாடுற பாதையை மறிச்சு மதில் சுவர் எழுப்புறதுன்னு நாம செஞ்ச அத்துமீறல்கள் இன்னைக்கு ஊருக்குள்ள யானையும் சிறுத்தையும் வர்றதுக்கு காரணமாயிடுச்சு.
வன உயிரினங்களை மருந்துக்காகவும், அவங்களோட தோல், கொம்பு போன்ற அலங்காரப் பொருட்களுக்காகவும் வேட்டையாடுறது ஒரு முட்டாள்தனமான துணிச்சல்னு வன ஆர்வலர்கள் சொல்றதுல நூறு சதவீதம் உண்மை இருக்கு. ஒரு காட்டில் ஒரு புலி குறையுதுன்னா, அங்க இருக்குற மான்களின் எண்ணிக்கை அதிகமாகும். மான்கள் அதிகமானா அங்க இருக்குற செடி, கொடிகள் மொத்தமா அழியும். இப்படி ஒன்னோட ஒன்னு பின்னிப் பிணைஞ்சதுதான் இந்த இயற்கை.

2026-ன் ஸ்பெஷல்: செடி, கொடிகளும் நம் உயிர்க்காவலர்கள்!
ஒவ்வொரு வருஷமும் காட்டுயிர் தினத்துக்கு ஒரு தீம் வைப்பாங்க. இந்த வருஷம் (2026) “மருத்துவ மற்றும் நறுமணத் தாவரங்கள்: ஆரோக்கியம், பாரம்பரியம் மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தல்” அப்படிங்கிற தலைப்புல விழிப்புணர்வு செய்யுறாங்க.
காட்டுயிர்னாலே நமக்கு விலங்குகள் தான் ஞாபகம் வரும். ஆனா, அந்த விலங்குகள் வாழ்றதுக்கு ஆதாரமா இருக்குற தாவரங்களும் காட்டுயிர்கள் தான்.
-
ஆரோக்கியத்தின் ஊற்றுக்கண்: இன்னைக்கு உலகத்துல இருக்குற 50,000-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள் மருத்துவ குணங்கள் கொண்டவை. நாம போடுற சாதாரண மாத்திரையில இருந்து உயிர்காக்கும் மருந்துகள் வரைக்கும் எல்லாத்துக்கும் அடிப்படை இந்த மூலிகைகள் தான்.
-
காக்கப்பட வேண்டிய பாரம்பரியம்: நம்ம முன்னோர்கள் “உணவே மருந்து”ன்னு வாழ்ந்தாங்க. அதுக்குத் தேவையான சித்த மருத்துவம், ஆயுர்வேதம் எல்லாமே காடுகள் கொடுத்த கொடை. இந்தத் தாவரங்கள் அழிஞ்சா நம்ம பாரம்பரிய அறிவும் சேர்ந்து அழிஞ்சுடும்.
-
வாழ்வாதாரப் பாதுகாப்பு: மலைவாழ் மக்கள் மற்றும் பல உள்ளூர் கிராமப்புற மக்களோட பொருளாதாரமே இந்த நறுமணத் தாவரங்களையும் மூலிகைகளையும் நம்பிதான் இருக்கு. முறையற்ற அறுவடை மூலமா நாம அதை அழிச்சா, அவங்களோட வாழ்க்கையும் கேள்விக்குறியாகிடும்.
நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?
காலநிலை மாற்றம் (Climate Change) இன்னைக்கு உலகத்தையே அச்சுறுத்துது. காடுகள் அழிஞ்சா மழை குறையும், வெயில் அதிகமாகும். ஆனா, காடுகள் வெறும் மரங்களால மட்டும் வளர்றது இல்ல. ஒரு பறவை சாப்பிட்டு போடுற எச்சம், ஒரு யானை போடுற லத்தி… இதுல இருந்துதான் புதுப்புது மரங்கள் முளைக்குது. அப்போ விலங்குகள் இல்லாம காடுகள் வளராது, காடுகள் இல்லாம நாம வாழ முடியாது.
மார்ச் 3-ஐ வெறும் ஒரு தினமா மட்டும் பார்க்காம, இயற்கையோட நாம இயைந்து வாழப் பழகணும். காட்டை நேசிப்போம்… அது நம்மைக் காக்கும்!
நிலவளம் ரெங்கராஜன்


