தி கிரேட் இண்டியன் கிச்சன் – விமர்சனம்!

தி கிரேட் இண்டியன் கிச்சன் – விமர்சனம்!

21-ம் நூற்றாண்டு என்று குறிப்பிடும் இப்போதெல்லாம் சர்வதேச அளவில் பெண்கள் பல்வேறு துறைகளில் சாதித்து வருகின்றனர். ஆணுக்கு நிகர் பெண் என்ற நிலையை எட்டிக்கொண்டிருக்கிறார்கள். பெண்கள் கால் பதிக்காத துறையே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர்களது வளர்ச்சி இருந்து வருகிறது. பெண்ணுக்கு சமஉரிமை, சுதந்திரம் உள்ளிட்ட எல்லாம் வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் நம் நாட்டில் குடும்பம் என்ற அமைப்பு எப்படி எல்லாம் பெண்களை உழைப்புச் சுரண்டலுக்கு உட்படுத்துகிறது, குடும்பம் என்ற பெயரில் எப்படி எல்லாம் ஆணாதிக்கம் அமைதியாக நடந்தேறுகிறது என்பதை படம் பிடித்து காட்டுகிறது ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ (தமிழ்). மலையாளத்தில் இதே நேமில் வந்த படம்தான். ஜோ பேபி இயக்கத்தில் நிமிஷா, சுராஜ் உள்ளிட்டப் பலர் நடித்திருந்தனர். தமிழ் ரீமேக் என்ற பெயரில் அப்பட்டமாக கண்ணன் டைரக்ட் செய்ய நாயகியாக ஐஷ்வர்யா ராஜேஷ், ஆணாதிக்க ஹஸ்பெண்டாக ராகுல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படத்தின் கதை மாநாடு எஸ் ஜே சூர்யா சொன்ன வந்தான்..சுட்டான்..செத்தான் -டயலாக் மாதிரி ஒரு வரிக்குள் அடங்கி விடும்தான். இண்டர்வெல் வரை ஒரே மாதிரியான பெரும்பாலான காட்சிகள்தான் படம் முழுக்க பயணமாகிறது. ஆனால், அதுதான் முதுகெலும்பு . அதாவது டேன்ஸ் டீச்சரான ஐஷ்வர்யா ராஜேஷ், ராகுலை மேரேஜ் செய்து கொண்டு புகுந்த வீடு செல்கிறார். அங்கு, மாமியார் உதவியுடன் தினமும் காலை எழுந்ததும் கணவனுக்கும் மாமனாருக்கும் சமைத்துப் போடுகிறார். பாத்திரம் கழுவுகிறார், வீடு துடைக்கிறார், துணி துவைக்கிறார் மீண்டும் மதியம், இரவு என கிச்சனில் வேகிறார். இரவில் கணவனுடன் இல்லற வாழ்க்கை நடத்துகிறார். ஒவ்வொரு நாளும் இதுவே தொடர்கதை ஆகிறது. இப்படியே தினமும் தொடரும் குடும்ப வாழ்க்கையில் தனது ஆசையும் கனவுகளும் குடும்ப மரியாதை எனும் பெயரில் புகுந்த வீட்டில் பலியாவதை புரிந்து, ஐஷ்வர்யா ராஜேஷ் என்ன அதிரடி முடிவு எடுத்தார் என்பதுதான் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ (தமிழ்).

ஐஷ்வர்யா ராஜேஷூக்கு இந்தப் படம் குறிப்பிடத்தக்கதாகி விட்டதென்னவோ நிஜம்.. ஒரே மாதிரியான காட்சிகள் .. அதை தினமும் செய்து வரும் பெண்களுக்கு எவ்வளவு வேதனையும், சோகமும் வரும் என்பதை மிகையில்லாத நடிப்பால் வெளிப்படுத்துகிறார். எதிர்பார்ப்பு, அதிருப்தி, இயலாமை,கோபம், அழுகை என பல பண்டரிபாயாக உருவெடுக்க முயன்றிருக்கிறார். ஆனால் அவரது கணவராக வரக்கூடிய ராகுலும் அவரது அப்பா உள்ளிட்ட கேரக்டர்களெல்லாம் தங்கள் கேரக்டரையே புரியாமல் உப்புக்கு சப்பாணியாக வந்து போவது பங்களிப்பதுதான் ஒட்டவில்லை

கேமராமேன் பாலசுப்பிரமணியன் ஒரு வீட்டைச் சுற்றி மட்டுமே எடுக்கப்பட்டதைக் கூட , அழகான ஃப்ரேம்களால் அலுப்பூட்டாத அளவில் தன் பணியை செம்மையாக செய்திருக்கிறார் . எடிட்டர் லியோ ஜான் பாலும், பின்னணி இசையில் ஜெர்ரி சில்வஸ்டர் வின்சன்ட்டும் கை கொடுத்திருக்கிறார்கள். காய்கறி நறுக்குவது, சமைப்பது, சின்க் ஒழுகுவது என எந்நேரமும் `ஒலி’த்துக்கொண்டிருக்கும் படம் முடிந்த பின்னரும் காதில் நின்றதுதான் ஹைலைட்

எதையும் புதுசாக யோசித்து படைத்து சாதிக்கும் மோலிவுட் பதார்த்தத்தை  அந்த சூடு கூட குறைந்து போகாமல் அப்படியே தமிழுக்குக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர் ஆர். கண்ணன். குறிப்பாக மலையாள சுவை குறையாமல் இருக்க அதன் தலைப்பை கூட மாற்ற தோன்றாமல் அப்படியே கொடுத்திருந்தாலும் சபரிமலை பெண்கள் நுழைவு விவகாரம், நாயகியின் பணி நியமன ஆணைக்கு வரும் எதிர்ப்பு என தமிழகமென்னும் தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு ஒட்டாத காட்சிகளையும் வழங்கி கோலிவுட் ரசிகர்களிடம் எடுபடாமல் போய் விட்டதுதான் சோகம்.

மொத்தத்தில் சின்னத்திரையில் வந்தால் பார்க்க முயலலாம்!

மார்க் 2.5/5

error: Content is protected !!