ரித்விக் -கின் காணொளிக் காட்சிகளால் களேபரமாகும் குழந்தைகள் உலகம்!

ரித்விக் -கின் காணொளிக் காட்சிகளால் களேபரமாகும் குழந்தைகள் உலகம்!

ரே நாள் பரிச்சயத்தில், பலரின் சமூக ஊடகப் பக்கங்களில் வலம்வரும் சுட்டிப் பையனாக ரித்விக் மாறியிருக்கிறார். “வெறும் ஏழு வயதில் எத்தனை நடிப்புத் திறன், அபாரமான நினைவாற்றல், பிரமாதமான டைமிங் சென்ஸ், ஆண் பெண் என எல்லா வேடங்களிலும் அசத்துகிறானே” என்றெல்லாம் பலர் வியந்து, ரித்விக்கின் ‘ரித்து ராக்ஸ்’ காணொலிகளை ரசித்துப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். மறுபுறம், “குழந்தைகளைக் குழந்தைகளாக இருக்க அனுமதியுங்கள்” என்ற கருத்தையும் சிலர் தெரிவித்து வருகிறார்கள். இதையொட்டி குழந்தை வளர்ப்பு, தனித்திறமைகளை ஊக்குவிக்கும் போக்கில் உள்ள சிக்கல்கள் உள்ளிட்டவை குறித்து குழந்தை மற்றும் பதின்பருவத்தினருக்கான மனநல ஆலோசகர் ஆர்த்தி சி.ராஜரத்தினத்திடம் உரையாடியதிலிருந்து…

சிறுவன் ரித்விக் தோன்றும் காணொலிகள் தொடர்பாகத் தங்கள் கருத்து என்ன?

இரண்டிலிருந்து ஏழரை வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இயற்கையில் சில கற்பனைத் திறன்கள் இருக்கும். சுற்றி நிகழ்வதைப் புரிந்துகொள்ளத் தங்களை அந்த இடத்தில் பொருத்திப் பார்த்து நடித்து விளையாடுவார்கள். உதாரணத்துக்கு, எனக்குத் தெரிந்த ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு விபத்து நேர்ந்தபோது ஐந்து வயது மகன் அவருடைய மடியில்தான் உட்கார்ந்திருந்தான். அடுத்த ஆறு மாதங்கள்வரை அந்தச் சிறுவன் காகிதம், துணி எதுவாயினும் எடுத்துக்கொண்டு, “இது ஸ்ட்ரெச்சர்… இதுல அப்பாவை எடுத்துட்டுப் போயிட்டாங்க” என்று சொல்லியபடியே விளையாடினான். தன்னுடைய தந்தையின் மரணத்தைப் புரிந்துகொள்ள அந்தக் குழந்தையின் மூளைக்கு அந்த விளையாட்டு தேவைப்பட்டது.

இதனால்தான் பள்ளிக்குச் செல்லும் குழந்தை தன்னை ஆசிரியராகவும், தடுப்பூசி செலுத்த மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படும் குழந்தை தன்னை மருத்துவராகவும் கற்பனை செய்து நடித்து விளையாடுகிறது. இத்தகைய கற்பனைகளைக் குழந்தையின் போக்கில் செய்ய அனுமதித்தால் மட்டுமே, பிற்காலத்தில் படைப்பாற்றல் திறன்மிக்கவராக வளரும். மாறாக, தன்னியல்பில் குழந்தை செய்வதைத் தவிர்த்துவிட்டு வேறெதையோ சொல்லிக் கொடுத்துப் பேச வைப்பதும், நடிக்கவைப்பதும் திறமையாகாது.

இப்போது பிரமாதமாகப் பேசுவதாகத் தோன்றும் குழந்தைகளுக்குப் பிற்காலத்தில் மொழித்திறன் பாதிக்கப்படும் அபாயம் கூட உள்ளது. தவிர, “என்ன வெங்காயத்துக்கு இங்க இருக்கீங்க” போன்ற சொற்களையெல்லாம் குழந்தைகளைப் பேசவைப்பதும், அதைக் கேளிக்கையாகப் பார்த்து ரசிப்பதும் தவறான போக்கு. வயதுக்கு மீறி பேசுதலை ஊக்கப்படுத்தினால், மற்ற குழந்தைகளுக்கும் இது தவறான முன்னுதாரணமாகும். இதைப் பார்த்துவிட்டு மேலும் பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளையும் இப்படி நடிக்க வைக்கக்கூடும். “என்னால் சாதிக்க முடியாததை என்னுடைய பிள்ளையின் மூலமாகச் சாதிக்கிறேன்” என்கிற மனநிலையின் வெளிப்பாடு இது.

தங்கள் குழந்தைகளிடம் வெளிப்படும் நினைவாற்றலையும் நடிப்புத் திறமையையும் ஊக்கப்படுத்தவே இப்படியான விஷயங்களை முன்னெடுப்பதாகப் பெற்றோர்கள் தரப்பில் சொல்லப்படுகிறதே?

தமிழ் சினிமாவிலேயே குழந்தை நட்சத்திரங்களாக ஜொலித்த பலர் உண்டு. அவர்களில் எத்தனைப் பேர் இன்று திரைத் துறையில் நீடித்திருக்கிறார்கள்? நடனத்தை எடுத்துக்கொண்டால் தாளத்தைக் கேட்டதும் தன்னை அறியாமல் நடனமாடும் குழந்தைகள் உண்டு. சமீபத்தில் அப்படியொரு ஆப்பிரிக்கக் குழந்தையின் இயற்கையான நடன அசைவு காணொலிகூட இணையத்தில் வைரலானது. ஏனென்றால், அந்தக் குழந்தையின் நாடி நரம்பில் இயற்கையில் நடனம் ஊறிக்கிடக்கிறது.

நடிப்பு, ஆடல், பாடல் போன்ற திறமைகளை வெளிப்படுத்தும் குழந்தைகளை ‘குழந்தை மேதைகள்’ (child prodigies) என்றழைப்பதை எப்படிப் புரிந்துகொள்வது?

மற்றவர்கள் ஊட்டிவிட்டு வருமானால் அது இயற்கையான திறமையாகாது. ‘அதிவேகமாகப் பியானோ வாசித்து சாதனை படைத்த சிறுவன்’ என்று பட்டம் கொடுப்பதையெல்லாம் பார்க்கிறோம். தினமும் காலையிலிருந்து மாலைவரை வாசித்துப் பழகி வருவதற்குப் பெயர் பயிற்சி; அது மேதைமையாகாது. 6 வயதிலேயே மொசார்ட் பிரமாதமாகப் பியானோ வாசித்தார் என்றால், அத்தகைய இசைத் திறன் இயல்பாய் அவருக்கு வாய்த்தது.

இயற்கையில் இல்லாத திறமையைக் குழந்தைகள் மீது வலிந்து திணிப்பதும், அதன் மூலம் குழந்தைகளுக்கு உடனடிப் புகழ் கிடைப்பதும் அவர்களது ஆளுமையைச் சிதைக்குமா?

இந்தியாவில் இதுவரை இத்தகைய சிக்கல்கள் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளப்படவே இல்லை. ஆகையால் அதற்கான உளவியல் துறைசார் கணக்கெடுப்பையோ, ஆராய்ச்சி முடிவுகளையோ முன்வைத்துப் பேசுவதற்கில்லை. மேற்கத்திய நாடுகளில் இது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு, ஹாலிவுட் திரைப்படமான ‘ஹோம் அலோன்’ சிறுவன் மெக்காலே கல்கின் குறித்து பலருக்கு நினைவிருக்கும். பத்து வயது சிறுவனாக 1990-ல் அவர் நடித்தபோது உலகமே அவரைச் செல்லம் கொஞ்சியது. பதின்பருவத்தில் அவரை யாரும் கண்டுகொள்ளாதபோது விரக்தி அடைந்து போதை பழக்கத்துக்கு அடிமையானார். 12 ஆண்டுகள் வரை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று அதிலிருந்து மீண்டார். அறியாத வயதில் எதிர்பாராமல் கிடைக்கும் அபரிமிதமான புகழ், தோல்வியை எதிர்கொள்ளும் திராணியற்றவராகவும் ஒருவரை மாற்றிவிடும்.

பல தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில், சீரியல்களில் குழந்தைகளை வயதுக்கு மீறிய செயல்களைச் செய்ய வைப்பது வாடிக்கையாகி விட்டது. இவற்றைப் பெரியவர்களும் எந்தவித உறுத்தலுமின்றி ரசித்துப் பாராட்டுகிறார்களே!  பெண்களை இழிவுபடுத்தும் குத்துப்பாடல்களும், உருவ கேலி செய்யும் அவல நகைச்சுவைகளும் இங்கு சகஜமாக்கப் படுகின்றன (normalizing shaming). “இதைக்கூடவா நீங்க சீரியசா எடுத்துப்பீங்க?” என்று கேட்கும் மனநிலைதான், பாலியல் வன்கொடுமைகளுக்குப் பச்சைக் கொடி காட்டுகிறது. அதன் நீட்சியாகவே இதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்கும் சரியான வழிமுறை எது? அதற்கு இன்றைய பள்ளிக் கல்வி முறை இடமளிக்கிறதா?

கற்பனைத் திறன் சரியான பாதையில் வளர அனுமதித்தால் மட்டுமே, படைப்பாற்றலாக அது வளம் பெறும். அதற்கு, முதலாவதாகக் குழந்தைகள் தன்போக்கில் விளையாடும் சூழல் வேண்டும். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் சலிப்படையும்போதுதான், நரம்பியக்கங்கள் உந்தப்பட்டு தனக்கான விளையாட்டைக் குழந்தை உருவாக்கும். அந்த விளையாட்டுக்கு (play) விதிமுறைகளோ, ஒழுங்குமுறையோ நிர்ணயித்தால் அது செயல்பாடாகத் (activity) திசைமாறிப் போகும். நமது கல்வி முறைதொழிற்புரட்சியை ஒட்டி வடிவமைக்கப்பட்டதால் பணியாளர்களைத்தான் வளர்க்கிறதே தவிர, குழந்தைகளை வளர்க்கும் விதத்தில் அது வடிவமைக்கப்படவில்லை. முதலாவதாக, உங்களுடைய குழந்தை இலக்கின்றி விளையாட வேண்டிய வயது இது என்பதை உணருங்கள்!

சுஜாதா மகேஸ்வரன்

error: Content is protected !!