“திராவிட ஸ்டாலின்” குறித்து பெருமிதப்படும் தி எகானாமிஸ்ட்!

“தி எகானாமிஸ்ட்” – 18 ஆம் நூற்றாண்டில் இருந்து வெளியாகும் ஒரு உலகப்புகழ் பெற்ற நாளேடு, வலது மற்றும் இடதுசாரி அடைப்புகளுக்குள் சிக்காமல், செய்திகளின் தரவுகளை ஆய்ந்து வெளியிடும் நேர்மைக்குப் புகழ்பெற்றது, தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலினின் செயல்திறனைப் பாராட்டி ஒரு கட்டுரையை வெளியிட்டிருக்கிறது, ஆசியாவின் அச்சுப் பிரதியில் “திராவிட ஸ்டாலினை சந்தியுங்கள்” (Meet the Dravidian Stalin) என்ற தலைப்பில் வெளியான அந்தக் கட்டுரை அதன் உலகளாவிய இணைய தளத்தில் “இந்தியாவில் இல்லாத ஒன்றை வழங்கும் தமிழகத் தலைவர் – செயல்திறன்” (Tamil Nadu’s leader offers something India’s does not: competence) என்ற தலைப்பில் வெளியாகி இருக்கிறது.
அதன் தமிழாக்கம் கீழே :
இந்தியாவின் தலைவர்கள் தராத ஒன்றைத் தருகிறார் தமிழகத் தலைவர் – “செயல் திறன்” . சோவியத் யூனியனின் ஜோசப் ஸ்டாலினுக்கு நெருங்கிய வட்டத்தில் உங்களுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்திருந்தால் அது மிகவும் ஆபத்தானது என்று சொல்லப்பட்டது, அப்படி வாய்ப்புக் கிடைத்த பலர் சிறையில் அடைபட்டார்கள், பலர் கொல்லப்பட்டார்கள், ஆனால், அவருடைய பொருளாதார ஆலோசகராக இருந்த ஜெனோ வர்கா நீண்ட காலம் நலமோடு வாழ்ந்தார், ஜெனோ வர்கா மிக மென்மையாகக் கையாளப்பட்டதைப் போல இப்போது 5 நட்சத்திர ஆலோசகர்கள் தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். வரும் ஆண்டுகளில், தென்னிந்தியாவின் மக்கள்தொகை அதிகமான தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி இப்போது இந்த நட்சத்திரங்களின் கைகளில்…..
மு.க.ஸ்டாலின் அவர்களின் தந்தை திரு.மு.கருணாநிதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக, ஏறத்தாழ 20 ஆண்டுகள் தமிழகத்தை ஆட்சி புரிந்தவர், தமிழக அரசியலில் ஒரு அசைக்க முடியாத இடம் கொண்டவர், சோவியத் யூனியனின் தலைவர் ஸ்டாலின் மறைந்த சில நாட்களில் பிறந்தவர் என்பதால் அவரது நினைவாக திரு.மு.கருணாநிதி இந்தப் பெயரை இப்போதைய தமிழக முதல்வருக்கு சூட்டினார் என்று சொல்லப்படுகிறது. இந்தப் பெயர் குறித்த வரலாற்றைத் தாண்டி அவரது புகழ் இப்போது மெல்ல ஒளிரத்துவங்கி இருக்கிறது.
அவரது புதிய பொருளாதார வளர்ச்சிக்கான ஆலோசனைக் குழுவில் இருந்து வருவோம், எஸ்தர் டஃப்லோ, வளர்ச்சித் திட்டங்களை அணுகிய அவரது சாதனைகளுக்காக நோபல் பரிசு பெற்றவர், இன்னொருவர் அர்விந்த் சுப்ரமணியன், இந்தியாவின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர், ரகுராம் ராஜன், இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், பிந்தைய இருவரும் பணியில் இருக்கும் போதே பிரதமர் நரேந்திர மோடியுடன் மோதியவர்கள், எஸ்.நாராயண், முன்னாள் இந்திய நிதித்துறை செயலர் மற்றும் பொருளாதார அறிஞரும், சமூக ஆர்வலருமான ஜீன் ட்ரேஸ் இருவரும் கூட மோடியின் தோல்வியடைந்த பொருளாதார முடிவுகளை எதிர்க்கும் அணியில் இருப்பவர்கள், இந்தக் குழுவின் நியமனமே மு.க.ஸ்டாலினுக்கும் பிரதமருக்கும் இடையிலான முரண்பாடுகளைத் தெளிவாக சொல்லும்.
மோடிக்கு எதிர் அணியில் புகழ்பெற்ற முதல்வர்களின் வரிசையில், மேற்கு வங்கத்தின் மம்தா பேனர்ஜிக்கும், கேரளாவின் பினராயி விஜயனுக்கும் இணையாக மோடிக்கு எதிரான வலுவான ஒரு கூட்டணியை உருவாக்கும் மிக முக்கியமான முகமாக ஸ்டாலின் இன்று உருவெடுத்திருக்கிறார், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் மங்கிப் போன நிலையில் 2024 இல் இந்தியாவின் அடுத்த பிரதமரைத் தேர்வு செய்யும் ஒரு மிக முக்கியமான இடத்தில் நிற்கிறார் திரு.மு.க ஸ்டாலின்.
புகழ்பெற்ற, அதிகார பலம் கொண்ட அரசியல் தலைவரான தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி முரட்டுத்தனமான இளைஞனாக ஸ்டாலின் இருந்தார் என்று சொல்லப்பட்ட குற்றச்சாட்டுக்களும், அவர் மீது தொடர்ந்து சுமத்தப்பட்ட பாலியல் கிசுகிசுக்களும் (திரு.ஸ்டாலின் இத்தகைய குற்றச்சாட்டுகளுக்கு வெளிப்படையாக இதுவரை பதிலளிக்கவில்லை) 1975-77 அவசர நிலைக்காலத்தில் அவர் தடா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்ட காலத்தில் இருந்து மாறத் துவங்கியது. அவர் கொடூரமாகத் தாக்கப்பட்டார், அவரது நண்பர்களில் ஒருவர் சிறைக் காவலில் கொல்லப்பட்டார். சிறையில் இருந்து வெளியேறிய பின்பு தீவிரமாக இயங்கத் துவங்கிய திரு.மு.க ஸ்டாலின், அரசியலில் தனக்கான இன்றைய இடத்தை அறுவடை செய்ய அப்போதிலிருந்தே விதைகளை நட்டார்,
1990 களில் இந்திய சந்தையானது உலகப் பொருளாதார சந்தையாக அகலத் திறந்த போது சென்னையின் வணிக வர்க்கத்தோடு நட்பை வளர்த்தார், இறுதியில் திரு.மு.கருணாநிதி, ஸ்டாலினை மாநிலத் தலைநகரான சென்னையின் மேயராக்கினார். சாயம் பூசப்பட்ட படிய வாரப்பட்ட சிகை ஒப்பனைகளோடும், பாரம்பரிய வெள்ளை அரைக்கை சட்டை மற்றும் வேஷ்டிகளோடும் அப்போதிலிருந்து தனக்கான அரசியல் இடத்தை அவர் தக்கவைத்துக் கொண்டார், தந்தையின் தளகர்த்தரானார், அவரது கட்டளைகளுக்கு கீழ்ப்படியும் செயல்திறம்மிக்க தளபதியானார். இப்போது அவருக்கு வயது 68, திரு ஸ்டாலின் அமைதியாகவும், இருக்கமின்றியும் இருக்கிறார், அடையாளம் காணமுடியாத ஒரு நெருக்கமான வட்டம் அவரரருகில் இருந்தது, தமிழின் இலக்கிய அறிவுஜீவிகளின் வட்டம் மு.கருணாநிதியை சுற்றி இருந்ததை போல இப்போதில்லை, அது அவருக்குத் தேவையுமில்லை,
புகழ் வெளிச்சமும், செல்வாக்கும் கொண்ட தலைவியாக அதிமுகவை வழிநடத்திய ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு 2016 இன் பிற்பகுதியில் இருந்து மத்தியில் ஆளும் பாரதீய ஜனதாக் கட்சியின் ஆதரவோடு ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட அதிமுகவின் வியூகங்களை உடைத்து 2019 இல் ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெற்றார் மு.க.ஸ்டாலின்.
வட இந்தியாவெங்கும் 60 % அளவுக்கு தேர்தல் ஒப்புதல் புள்ளிகளை வைத்திருந்த மோடிக்கு தமிழகத்தில் கிடைத்த புள்ளிகள் வெறும் 2.2 %, ஆளுங்கட்சியான அதிமுகவை கிட்டத்தட்ட மரணத்தின் எல்லைகளை முத்தமிட வைத்தார் ஸ்டாலின். இப்போது மக்கள் அவரது நீண்ட கால உழைப்பை அங்கீகாரம் செய்திருக்கிறார்கள். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அவரது கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியை பரிசளித்திருக்கிறார்கள்.
“அவருடைய திறன்களும், எல்லைகளும் அவருக்குத் தெரியும், அவர் ஒரு கவர்ச்சிகரமான தலைவர் இல்லை, தந்தையைப் போல சொற்பொழிவாற்றும் திறன் கொண்டவரில்லை, மிகப்பெரிய சிந்தனையாளர் இல்லை, ஆனால், மக்களாட்சியின் மாண்புகளைக் கொண்டு செங்கோல் ஏந்திய ஒரு நிர்வாகத் திறன்மிக்க தலைவராக அவர் இடம்பெறுவார்” என்கிறார் வரலாற்று ஆய்வாளர் ஏ.ஆர்.வெங்கடாசலபதி.
அவர் ஒரு நடைமுறைகளுக்கேற்ற தலைவரும் கூட என்பதை தோற்றுப்போன அதிமுக அரசின் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவரை கோவிட் – 19 பெருந்தொற்று ஆலோசனைக் குழுவில் இடம்பெறச் செய்து நிரூபித்தார். இந்த பெருந்தொற்று ஒப்பீட்டளவில் வலுவான பொது சுகாதார உள்கட்டமைப்பிற்காக தங்கள் ஆட்சியாளர்களை நன்றியோடு நினைவு கூற தமிழர்களுக்கு ஒரு வாய்ப்பளித்திருக்கிறது. நாட்டின் பிற பகுதிகளிலிருந்து ஒரு நல்லரசு தன்னை வேறுபடுத்திக் காட்டும் வழி இதுதான். அதன் அமைதியான, செயல் திறம்மிக்க தலைவர் என்ற பெருமையை திரு.மு.க ஸ்டாலின் வரலாற்றில் பெறுவார்.
நன்றி: தி எகானாமிஸ்ட்
தமிழில்: கை.அறிவழகன்