புதிய கொரோனா வைரஸ்-களுக்கு உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது

புதிய கொரோனா வைரஸ்-களுக்கு உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியது

கொரோனா வைரஸ் இரண்டாம் அலையின் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பாதிப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது. இந்நிலையில், சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுக்குப் பின்பு, இந்தியா, பிரிட்டன், பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளில் வெவ்வேறு வகையான உருமாறிய கொரோனா வைரசுகள் கண்டறியப்பட்டன. இதனையடுத்து, அந்தந்த நாடுகளில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசுக்கு அந்த நாட்டின் பெயரைச் சொல்லி அழைப்பதை அந்நாடுகள் விரும்பாத நிலையில், தற்பொழுது உலக சுகாதார அமைப்பு உருமாறிய வைரசுகளுக்கு கிரேக்க எழுத்துக்களின் அடிப்படையில் புதிய பெயர்களை சூட்டி உள்ளது.

அதன்படி, இந்தியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட பி1.617.1 என அழைக்கப்படும் கொரோனா வைரசுக்கு ‘கப்பா’ எனவும் அதன்பின் கண்டறியப்பட்ட பி1.617.2 எனும் வைரசுக்கு ‘டெல்டா’ எனவும் உலக சுகாதார நிறுவனம் பெயர் சூட்டியுள்ளது. இந்தியாவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனா வைரசுகள் பெருந்தொற்றுக்கு காரணமாகியுள்ளதால், இந்த வகை வைரசை சர்வதேச அளவில் ஆபத்துக்குரியது எனவும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் மட்டுமல்லாமல், பிரிட்டனில் 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட வைரசுக்கு ‘ஆல்பா’ எனவும் தென்னாப்பிரிக்காவில் கடந்த ஆண்டு மே மாதம் கண்டறியப்பட்ட வைரசுக்கு ‘பீட்டா’ எனவும் பிரேசிலில் 2020ஆம் ஆண்டு நவம்பரில் கண்டறியப்பட்ட வைரசுக்கு ‘காமா’ எனவும் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட வைரசுக்கு ‘எப்சிலான்’ எனவும் உலக சுகாதார அமைப்பு பெயர் சூட்டியுள்ளது.

இது குறித்து உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்பப் பிரிவின் தலைவர் மருத்துவர் மரியா வேன் கொர்கோவ், ‘முக்கியமான அறிவியல் தகவல்களைத் தாங்கி நிற்கக் கூடிய அறிவியல் பெயர்கள் ஆராய்ச்சிகளில் தொடர்ந்து பயன்படுத்தப்படும். தற்போது வைரசுகளுக்கு சூட்டப்பட்டுள்ள புதிய பெயர்கள் அறிவியல் பெயர்களை மாற்றாது’ எனவும் தெரிவித்துள்ளார்.

Related Posts

error: Content is protected !!