குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்து விட்டது! – முழு விளக்கம்!

குடியுரிமை திருத்த சட்டம் அமலுக்கு வந்து விட்டது! – முழு விளக்கம்!

ந்திய குடியுரிமை சட்டம் கடந்த 1955-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அதில் திருத்தங்கள் செய்து, கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்த மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்தது. இதன்படி, பாகிஸ்தான், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மதஅடக்குமுறைக்கு உள்ளாகி, அங்கிருந்து 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு இந்தியாவில் குடியேறிய இந்து, கிறிஸ்தவர், சீக்கியர், சமணர், பார்சிகள், பவுத்தர்கள் ஆகிய சிறுபான்மை யினருக்கு இந்திய குடியுரிமை வழங்க இம்மசோதா வகை செய்கிறது. 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம், இம்மசோதா நாடாளுமன்றத்தில் நிறைேவற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலையும் பெற்றது.

ஜனாதிபதி ஒப்புதல் பெற்று 6 மாதங்களுக்குள் சட்டத்துக்கான விதிமுறைகளை வெளியிட்டால்தான், அச்சட்டம் அமலுக்கு வரும். ஆனால், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக சில மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்தன. அவற்றில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். எனவே, விதிமுறைகள் வெளியிடப்படவில்லை. சட்டமும் அமல்படுத்தப்படவில்லை. இதற்கிடையே, குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டிருப்பதாக கடந்த டிசம்பர் மாதம் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார். அதையடுத்து இதற்கான பணிகள் வேகம் எடுத்தன.

அது சரி குடியுரிமை திருத்தச் சட்டம் என்றால் என்ன?

2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்கு முன்பு பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் புலம்பெயர்ந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்வதே இந்த CAA எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டமாகும்.அந்த நாடுகளில் மதத்தின் அடிப்படையில் சிறுபான்மையினராக உள்ளவர்களுக்குக் குடியுரிமை வழங்குவதே இந்த சட்டத்தின் நோக்கமாகும், அதன்படி 2019-இல் நிறைவேற்றப்பட்ட மசோதா, குடியுரிமைச் சட்டம் 1955-ஐ திருத்தி உள்ளது. எனினும், மேற்கண்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் குடியேறிய இஸ்லாமியர்களுக்கு இத்தகுதி தரப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CAA சட்டத்தால் யாருக்கு தாக்கம் ஏற்படும்?

இந்திய குடியுரிமை பெற்றவர்களுக்கு CAA சட்டத்தால் எந்தவொரு தாக்கமும் ஏற்படாது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தை சேர்ந்த ஆறு சிறுபான்மை பிரிவினருக்கு பயனளிக்கும் வகையில் இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

CAA இன் கீழ் குடியுரிமை எவ்வாறு வழங்கப்படும்?

குடியுரிமை கோரும் விண்ணப்பதாரர்கள் பயண ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைந்த ஆண்டை அறிவிக்க வேண்டும். இது தொடர்பாக விண்ணப்பதாரர்களிடம் இருந்து எந்தவொரு ஆவணமும் கேட்கப்படாது என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சட்டத்திற்கு எதிர்ப்பு இருப்பது ஏன்?

குடியுரிமை பெறுவதற்கு மதம் ஒரு காரணியாக முன்வைக்கப்படுவதால் இச்சட்டத்திற்கு எதிர்ப்பும் கணிசமான அளவில் உள்ளது. மேலும் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் அகதிகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்சியாக முன் வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் நேற்று வெளியிடப்பட்டன. இத்துடன், அச்சட்டம் அமலுக்கு வந்து விட்டதாக மத்திய அரசு அறிவித்தது.

அந்த வகையில் 3 நாடுகளில் இருந்து வந்த மேற்கண்ட மதத்தினருக்கு இந்திய குடியுரிமை வழங்கும் பணியை மத்திய அரசு தொடங்கும். இதற்கென பிரத்யேக இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. https://indiancitizenshiponline.nic.in/ என்ற இணையதளத்தில் தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அறிவுறுத்தல். இதற்கான மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமுள்ளதாம். எவ்வித ஆவணமும் இல்லாமல், 2014-ம் ஆண்டு டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்பு வந்தவர்கள் அதில் விண்ணப்பிக்க வேண்டும். எந்த ஆண்டு வந்தனர் என்பதை குறிப்பிட வேண்டும். அவர்களிடம் எந்த ஆவணமும் கேட்கப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த சட்டம், கடந்த நாடாளு மன்ற தேர்தலிலும், மேற்கு வங்காள சட்டசபை தேர்தலிலும் பாரதீய ஜனதாவின் முக்கிய வாக்குறுதியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. மேற்கு வங்காளத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு இது உதவியதாக பாரதீய ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள்.

அதே சமயம் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘சாதி, மதம், மொழியின் பெயரில் மக்களிடம் பிரிவினை ஏற்படுத்துவதை திரிணமூல் அனுமதிக்காது. சில நாட்களில் மத்திய அரசால் யாருக்கும் குடியுரிமை வழங்க முடியாது. இது தேர்தல் நாடகம்’’ என்று தெரிவித்தார். காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், ‘‘தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப இவ்வாறு செய்துள்ளனர்’’ என்றார். கேரள முதல்வர் பினராயி விஜயன், ‘‘கேரளாவில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ள நிலையில் தமிழக முதல்வரும் நேற்றே குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசு அமல்படுத்தினாலும், தற்போது தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!