தமிழ் நாட்டின் முதல் பெண் பொக்லைன் ஓட்டுநர் ஈஸ்வரி!

தமிழ் நாட்டின் முதல் பெண் பொக்லைன் ஓட்டுநர் ஈஸ்வரி!

கோவை, தடாகம் சாலை இடையர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அங்காள ஈஸ்வரி. கால் டாக்ஸி டிரைவராகப் பணியாற்றி வந்தார். தற்போது, முறையான பயிற்சி பெற்று பொக்லைன் ஓட்டி வருகிறார். இதற்கு முன் தமிழகத்தில் பெண்கள் யாரும் பொக்லைன் ஓட்டுநராக இருந்ததில்லை. அதனால் தமிழ் நாட்டின் முதல் பெண் பொக்லைன் ஓட்டுநர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஈஸ்வரி.

மஹிந்திரா அண்ட் மஹிந்திராவின் விநியோகிஸ்தரான சாரு சிண்டிகேட் நிறுவனம், பெண்களுக்குக் கனரக வாகனங்களை இயக்கும் பயிற்சிகளை வழங்கி வருகிறது. அவர்கள்தான் அங்காள ஈஸ்வரிக்கும் பயிற்சி அளித்துள்ளனர்.

பொக்லைன் ஓட்டுவதைப் பற்றி அங்காள ஈஸ்வரி தெரிவிக்கும் போது: “கால் டாக்சியில் குடும்பத்தைக் காப்பாற்றப் போதுமான வருமானம் கிடைப்பதில்லை. அதனால் தான் பொக்லைன் ஓட்டலாம் எனத் தீர்மானித்தேன். பொதுவாக, இவ்வளவு பெரிய கன ரக வாகனங்களைப் பெண்கள் யாரும் ஓட்ட மாட்டார்கள். குடும்பத்தை எண்ணி மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பொக்லைன் இயக்கும் பயிற்சியில் இறங்கினேன்.

இப்போது என்னால் ஒரு நாளைக்கு ரூ.1,000 வரை சம்பாதிக்க முடியும். தமிழ் நாட்டின் முதல் பெண் பொக்லைன் ஓட்டுநர் என்ற பெருமையையும் இப்போது பெற்றுள்ளேன். இது என்னைப் போன்ற எளிய குடும்பத்துப் பெண்களுக்குப் பெரிய விஷயம். இதேபோல மற்ற பெண்களும் பொக்லைன் உள்ளிட்ட கன ரக வாகனங்களை இயக்க முன் வர வேண்டும்.பெண்கள் எதற்காகவும் கலங்கி நிற்கக் கூடாது. தன்னம்பிக்கையோடு இறங்கி முயற்சி செய்தால் சாதிக்க முடியாதது என்று எதுவும் இல்லை” என்கிறார்.

அங்காள ஈஸ்வரிக்கு உளமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிப்போம்…

அதே நேரத்தில் ஒலா, ஊபர், ரெட் டாக்ஸி போன்ற கார்ப்பரேட் கம்பெனிகளின் வரவு, பெட்ரோல், டீசலின் கடுமையான விலையேற்றம் மற்றும் கொரோனா பெருந்தொற்றுக் கால ஊரடங்கு போன்றவற்றால் கால் டாக்சி தொழில் கடுமையாகப் பாதிப்பு அடைந்துள்ளதை அங்காள ஈஸ்வரியின் ஸ்டேட்மென்டிலிருந்து தெரிய வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.

Kpsudhir Sudhir

Related Posts