அறிவிச்சிப்புட்டாய்ங்கய்யா- கார்ப்பரேஷன் எலெக்ஷன் தேதி அறிவிச்சிட்டாய்ங்க!
தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தேதியை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி பிப்ரவரி 19ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22ம் தேதி தேதி எண்ணப்படவுள்ளது.
தமிழகத்த்ல், கடந்த 2019-ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 24 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு அப்போது உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. அதைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு, அக்டோபர் மாதம் இரண்டு கட்டங்களாக ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது. அதில், பெரும்பான்மையான இடங்களை தி.மு.க கைப்பற்றியது. இந்த நிலையில், ஜனவரி 31-ம் தேதிக்குள் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் அண்மையில் உத்தரவிட்டது.
எனவே, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை கொரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடித்து நடத்தி முடிக்க, மாநிலத் தேர்தல் ஆணையம் கடந்த டிசம்பர் மாதம் சுற்றறிக்கை வெளியிட்டது. அதையடுத்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாகப் பெண்கள் மற்றும் பட்டியலினத்தவர்களுக்கான தொகுதிகளை ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. மேலும், தேர்தலைச் சந்திக்கும் வகையில் வார்டுவாரியாக வாக்காளர் பட்டியல் தயார்செய்யப்பட்டு இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், உள்ளாட்சித் தேர்தலுக்கான அட்டவணை இன்று மாலை 6:30 மணிக்கு வெளியிடப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பு வெளியிட்டது. அதன்படி , தமிழகத்தில் ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என மாநிலத் தேர்தல் ஆணையர் அறிவித்திருக்கிறார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என மொத்தம் 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும். தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 28-01-2022 அன்று தொடங்கி 04-02-2022 வரை நடைபெறும். அதைத் தொடர்ந்து 05-02-2022 அன்று வேட்புமனுக்கள் ஆய்வு செய்யப்படும். வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் 07-02-2022. அதைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 19-02-2022 அன்று நடைபெறும். பின்னர், 22-02-2022 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும்” என்றார்.
மேலும் மார்ச் 4-ம் தேதி மேயர், நகர்மன்ற தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் என்றும் நகர்ப்புற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து அந்த பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்தது விட்டது என்று தெரிவித்தார்.