June 2, 2023

தமிழக அரசு அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரலை! – மத்திய தலைமை கணக்காயர் அதிருப்தி!

நம் தமிழக அரசு அடுத்தடுத்து வாங்கி வரும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. அப்படி வாங்கிய கடனை பொறுத்தவரை ரூ. 3 லட்சத்து 97 ஆயிரத்து 495 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது. இதுமட்டுமின்றி வாங்கிய கடனுக்கு செலுத்த வேண்டிய வட்டித் தொகை மட்டும் ரூ. 33226.27 கோடியாக உள்ளது என்று ஓ பன்னீர்செல்வம் தாக்கல் செய்த பட்ஜெட் மூல வெளியான தகவலின் அதிர்ச்சியே இன்னும் விலகாத நிலையில் மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 3,676 கோடி ரூபாயை தமிழக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கை யில் தகவல் வெளியாகி உள்ளது! அதிலும் கிடைத்த நிதியை சரியாக பயன்படுத்த திட்டம் இல்லாமல் கால விரயம் செய்தது, வேலையில் வேகம் குறைவு, திட்டமிடப்பட்ட காலத்துக்குள் வேலைகள் முடிக்கப்படாமல் பாதியில் திட்டம் கைவிடப்பட்டது போன்ற குறைபாடுகளும் நிதியை திரும்ப அனுப்ப காரணங்களாக இருந்துள்ளதாக சிஏஜி குறிப்பிட்டுள்ளது.

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்துவதற்காக 2017-18 ஆண்டுக்கான நிதியாக 5920 கோடி ரூபாய் தொகையை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதொடர்பான செலவின விவரங்களை மத்திய கணக்கு தணிக்கை அலுவலகம் வெளியிட்டுள்ளது. அதில்தான், மத்திய அரசு ஒதுக்கிய நிதியில் 3,676 கோடி ரூபாயை தமிழக அரசு பயன்படுத்தாமல் திருப்பி அனுப்பியதாக சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் தகவல் வெளியாகி உள்ளது.

இது குறித்து மத்திய தலைமை கணக்காயர் எனப்படும் சிஏஜி அறிக்கையில், நிதியாண்டில் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்காக மத்திய அரசு சார்பில் 5 ஆயிரத்து 920 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தொகையில் 3 ஆயிரத்து 676 கோடி ரூபாயை பயன்படுத்தப் படாமல் தமிழக அரசு திருப்பி அனுப்பி உள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக மத்திய அரசின் ஆவாஸ் யோஜனா திட்டத்துக்கு 3 ஆயிரத்து 82 கோடியே 39 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில், 728 கோடி ரூபாய் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.செலவிடப்படாத 2 ஆயிரத்து 354 கோடியே 38 லட்சம் ரூபாயை திருப்பி அனுப்பி உள்ளது தெரியவந்துள்ளது.

இதேபோல் ஊரக வளர்ச்சி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 97 கோடியே 65 லட்சம் ரூபாயும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் 247 கோடியே 84 லட்சம் ரூபாயும், பெண்கள் முன்னேற்ற திட்டத்தில் 23 கோடியே 84 லட்சம் ரூபாயையும் தமிழக அரசு பயன் படுத்தாமல் திருப்பி அனுப்பி உள்ளதாக குறிப்பிட்டப்பட்டு உள்ளது.

மொத்தத்தில் நிதியை சரியாக பயன்படுத்த திட்டமிடப்படாமல் கால விரயம் செய்ததே திரும்ப அனுப்பியதற்கான காரணமாக  சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.