சுனாமியில் பெற்றோரை இழந்தவர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

சுனாமியில் பெற்றோரை இழந்தவர்களுக்கு  திருமணத்தை நடத்தி வைத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்!

2004ம் ஆண்டு சுனாமியின் கோரத் தாண்டவத்தின் போது பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டின் கடலோர மாவட்டங்களில் நாகப்பட்டினமும் ஒன்று. அந்த சுனாமி ஏற்படுத்திய பாதிப்புகளில் பலர் அவர்களில் உறவுகளையும் உடைமைகளையும் இழந்தனர். அப்போது பெற்றோர்களை இழந்த குழந்தைகள் மீட்கப்பட்டு அரசு சார்பில் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வந்தனர்.அதில், 9 மற்றும் 3 மாத குழந்தைகளாக இருந்த செளமியா மற்றும் மீனாவும் அப்போதைய நாகை மாவட்ட ஆட்சியராக இருந்த தற்போதைய மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தத்தெடுத்து வளர்த்து வந்தார். சென்னைக்கு பணி மாறுதலில் வந்தாலும் நாகையில் உள்ள செளமியா மற்றும் மீனாவுடன் நேரம் செலவிடுவதை தவறாமல் கடைப்பிடித்து வந்துள்ளார். அவர்களது கல்விக்கும் ராதாகிருஷ்ணன் உதவியாற்றியிருக்கிறார்.

பின்னர் 18 வயதை கடந்த இருவரையும் நாகையைச் சேர்ந்த மணிவண்ணன், மலர்விழி தம்பதி தத்தெடுத்து வளர்த்தனர். இந்த நிலையில், செளமியாவுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டதை அடுத்து நாகையில் உள்ள ஆஃபிசர்ஸ் கிளப்பில் நேற்று திருமணம் நடைபெற்றது. செளமியாவின் திருமணத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமைத்தாங்கி நடத்தி வைத்தார். அவருடன் ராதாகிருஷ்ணனின் மனைவியும் இருந்தார்.

“உறவுகளை இழந்த இவர்களை பெற்ற பிள்ளைகள் போன்று மலர்விழி, மணிவண்ணன் தம்பதியினர் வளர்த்து வருவது பெருமையாகவும், மனிதம் இன்னும் மடிந்துவிடவில்லை என்பதை உணர்த்துவதாகவும்” என பேசியுள்ளார்.

இந்த நிகழ்வு குறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பலரது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் பெற்று வருகிறது.

Related Posts

error: Content is protected !!