தமிழ்நாடு அரசு உண்மைச் சரிபார்ப்புப் பிரிவும், அதை வழிநடத்தப் போகும் யூடர்ன் ஐயன் கார்த்திகேயனும் – கொஞ்சம் டீட்டெய்ல்

தமிழ்நாடு அரசு உண்மைச் சரிபார்ப்புப் பிரிவும், அதை வழிநடத்தப் போகும் யூடர்ன் ஐயன் கார்த்திகேயனும் – கொஞ்சம் டீட்டெய்ல்

மிழ்நாடு அரசு உருவாக்கி இருக்கக் கூடிய பொய் மற்றும் வெறுப்புப் பரப்புரையை வீழ்த்த உண்மை சரிபார்ப்பு அலகு என்பது இன்றைய காலகட்டத்தில் மிகவும் இன்றியமையாத ஒன்று! ஏன் இப்படி ஓர் அலகினை தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்? பெருகி வரும் சமூக ஊடகப் பயன்பாடுகளைக் கொண்டு வெறுப்பு உணர்ச்சியைப் பரப்பக்கூடிய கும்பல்கள், பல்வேறு பிரிவினர்களுக்கு எதிராக பொய்யான பரப்புரைகளை சமூக ஊடகங்களில் உலவவிடுகின்றனர். அதனால் பல்வேறு குழப்பங்களும், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் செயல்கள் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருவதை உண்மை கண்டறியும் வல்லுநராகவும், பயற்றுநராகவும் நான் அறிவேன்.

அந்தகையச் செயல்கள் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு அரசு இதனை முன்னெடுத்திருப்பது வரவேற்கத்தக்கதே! இந்த அலகினைக் கொண்டு எந்தவொரு சமூக சீர்கேடுகளும் நடைபெறா வண்ணம் தொடக்கத்திலேயே தடுத்துவிட முடியும்.

இது கருத்துரிமைக்கு அச்சுறுத்தலா?

கருத்துரிமைகளுக்கும், அவதூறுகளுக்கும், பொய் பரப்புரைகளுக்கும், வெறுப்புப் பரப்புரைகளுக்கும், சதி கோட்பாட்டு பரப்புரைகளுக்கும் பெரிய வேற்றுமை உண்டு.  விமர்சனம் என்ற பெயரில் பொய் பரப்புரைகளை தனிப்பட்ட நபர்களே விரும்புவதில்லை. உண்மையான ஐயப்பாடுகளை எழுப்பக்கூடாது என்பது இந்த அலகின் நோக்கமல்ல!

பொய் மற்றும் வெறுப்புப் பரப்புரைகளுக்கு மக்கள் வீழ்ந்துவிடக் கூடாது என்பதே நோக்கம்.

இது போன்ற முன்னெடுப்புகளை வேறு யாரும் எடுத்து இருக்கிறார்களா? எனில் மத்திய அரசு இத்தகைய முன்னெடுப்பினை எடுத்திருக்கிறது. கர்நாடக மாநிலம் இது போன்ற முன்னெடுப்பை அறிவித்து இருக்கிறது. இன்னும் பல்வேறு மாநிலங்களில் இத்தகைய முன்னெடுப்புகளுக்கான திட்டங்கள் கருத்துரையாடல்களில் இருக்கின்றன.

ஐயன் கார்த்திகேயன் இந்த அலகின் திட்ட இயக்குநராக இருப்பதற்கு சரியான நபரா? என்று கேட்டால் முற்றிலும் சரியான நபரே! இத்துறையில் அவர் தொடக்க காலம் முதல் அறிந்தவன் என்ற அடிப்படையில் நான் சொல்கிறேன், ஐயன் கார்த்திகேயன் முற்றிலும் தகுதியானவர் தான். பல்வேறு நிகழ்வுக்கு என்னை விடப் பொருத்தமானவர் ஐயன் கார்த்திகேயன் தான் என அவருக்கே தெரியாமல் நான் பரிந்துரைத்து இருக்கிறேன். உண்மை சரிபார்ப்பு துறையில் தமிழை உலகரங்குக்கு கொண்டு சென்றவர் ஐயன் கார்த்திகேயன். தமிழில் தொடங்கப்பட்டு IFCN சான்று பெற்ற நிறுவனம் You Turn தான்.

இப்போது சிலர் எல்லோரும் பரவலாகப் பயன்படுத்தும் சில அடிப்படையான நிரலிகளையும், கருவிகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு உண்மை சரிபார்ப்பு என்பது இவ்வளவு தான் என சுருக்க நினைக்கிறார்கள். ஆனால் கருவிகளும், நிரலுகளும் அதுமல்ல என்பதை அவர்கள் அறியமாட்டார்கள். கடந்த ஆண்டு உண்மை கண்டறிவதற்கான பாடத்திட்ட வகுக்கும் குழுவில் இருந்தவன் அடிப்படையில் சொல்கிறேன். பன்னாடுகளுக்குச் சென்று பல்வேறு நாடுகளில் நடைபெறும் இதுபோன்ற பொய் மற்றும் வெறுப்புப் பரப்புரைகளை கண்டறிந்து தடுப்பவர்களுடன் உரையாடி இத்துறையில் அறிவை செழுமைப் படுத்தி வைத்திருக்கும் ஐயன் கார்த்திகேயன் தான் இப்பொறுப்பிற்கு சரியான நபர்!

முரளிகிருஷ்ணன் சின்னதுரை
உண்மை சரிபார்ப்பு பயிற்றுநர்.

error: Content is protected !!