தமிழக அரசுக் கடன்: விலையில்லா வீழ்ச்சியா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

தமிழக அரசுக் கடன்: விலையில்லா வீழ்ச்சியா? -ரமேஷ் கிருஷ்ணன் பாபு

ரண்டு திராவிடக்கட்சிகளும் போட்டி போட்டுக்கொண்டு இலவச கவர்ச்சித் திட்டங்களைத் தங்களது தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். ஆளும் அதிமுக 2011 ஆம் ஆண்டிலிருந்து விலையில்லா கவர்ச்சித் திட்டங்களை பெருமளவில் நடைமுறைப்படுத்தி வருகிறது. இதன் உச்சபட்சமாக இத்தேர்தலில் சலவை இயந்திரங்களை வழங்குவோம் என்று அறிவித்துள்ளது. திமுக மகளிர் உரிமைத் தொகையாக இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000/- வழங்கு வதாக அறிவித்தது. ஆயினும் இதை முதலில் தாங்கள்தான் அறிவித்ததாக மக்கள் நீதி மையம் கட்சி உரிமைக் கோரியது. இதனிடையே அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அந்த உரிமைத் தொகையை ரூ 1500/- என உயர்த்தி அறிவித்தது. அத்தோடு வருடம் ஆறு எரிவாயு உருளைகள் விலையில்லாமல் வழங்கப்படும் என்றும் அறிவித்த்து. இப்படி கட்சி மாற்றி கட்சி இலவச திட்டங் களை அறிவிப்பதும், நடைமுறைப்படுத்துவதும் அரசின் நிதிச்சுமையை கடுமையாக ஏற்றுகிறது எனும் உண்மை இப்போது மறக்கப்படுகிறது.

என்றைக்கேனும் ஏதேனும் ஒரு பொருளின் விலை உயர்த்தப்படும்போது தான் இந்த இலவசத் திட்டங்களின் சுமை மக்களுக்கு உறுத்தும். அதுவும் தற்காலிகமாகவேனும். பின்னர் அடுத்த இலவசத்தை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். இப்படி விலையில்லாத் திட்டங்கள், கடன் என மாறி மாறி சுழற்சி ஏற்படுவதை கடன் நச்சுச் சுழற்சி என்பார்கள் பொருளாதார நிபுணர்கள். இதிலிருந்து மீள்வது எளிதல்ல. முதலில் இத்திட்டங்களுக்கான நிதியை அரசு பெருக்கிக்கொள்ள வேண்டும். ஆனால் ஏற்கனவே கடனில் இருக்கும் அரசு புதிதாக வருவாயை எப்படி ஏற்படுத்தும்? புதிதாக கடன் வாங்கியா? ஆம் அப்படித்தான் தமிழ் நாடு மட்டுமல்ல பல மாநில அரசுகள் இப்படி கடன்வலையில் வீழ்ந்துள்ளன. கடந்த 15 ஆண்டுகளாக பல மாநில அரசுகள் தங்களது சொந்த நிதியாதாரங்களைப் பெருக்கிக்கொள்ளவில்லை. இதுவே பிரச்சினையின் மூலவேர்.

கவர்ச்சித் திட்டங்கள் ஏன் தேவை? அவைகளின் சமூகப்பங்களிப்பு என்னவென்று கேட்டால் பதில் எளிதாகச் சொல்ல முடியும். எவையெல்லாம் இப்படி விலையில்லாத் திட்டங்களில் அடங்கியுள்ளன? வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள், விவசாயம் சார்ந்த தொழில்கள், கல்வி, உடல்நலம், போக்குவரத்து மற்றும் ஓய்வூதியம் போன்றவையே விலையில்லாத் திட்டங்களின் முக்கிய அம்சங்களாகும்.

நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய இலவச காலணி, வேட்டி சேலை, ஓய்வூதிய திட்டங்களின் வரிசையில் இன்று சலவை இயந்திரம் புகுந்துள்ளது. இடையே வண்ணத் தொலைக்காட்சிப்பெட்டியும் இடம் பெற்றது. இன்றைய வாழ்க்கைச் சூழல் மாறிவிட்ட்து. பெண்கள் கல்வி நிலையங்களுக்கோ அல்லது வேலைக்கோ போக வேண்டியக் கட்டாயமுள்ளது. அவர்களுக்கு வேலை-வீட்டுப்பணி நேர இடைவெளி குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் காணப்படும் ஒர்க்-லைஃப் பேலன்ஸ் எனும் பிரச்சினை சிறுநகரங்களிலும் காணப்படுவதில் வியப்பில்லை. இதை எதிர்கொள்ளும் பெண்கள் வீட்டிலும் சரி, வேலையிலும் சரி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள்.

இதனைப் போக்கும் அல்லது குறைக்கும் விதமாகவே ஜெயல்லிதாவின் விலையில்லா மிக்சி, கிரைண்டர் திட்டம் அமைந்தது. விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும் விதமாக விலையில்லாக் கறவை மாடுகள் வழங்குவதும் நிகழ்ந்த்து. இப்போது உரிமைத் தொகையும், சலவை இயந்திரங்களும் வங்கிக் கடன் தள்ளுபடியும் பெண்களுக்கு சுமைக்குறைப்பாக இருக்கும். ஆனால் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையின் மீதும் ரூ 60,000.- க்கும் மேல் கடன் சுமை இருப்பதையும் நம்மால் புறக்கணிக்க இயலாது. ஆக, யாருடைய பணத்தில் இந்த இலவசத் திட்டங்கள் நிறைவேறுகின்றன?

அரசிற்கு வருவாய் வரும் வழிமுறைகளாக எரிபொருள் மீதான வரியும், டாஸ்மாக் கடைகளுமே இருக்கின்றன. தமிழக அரசின் அதிகாரிகள் எடுத்துச் சொன்னார்களோ இல்லையோ, சொத்து வரி வழக்கு நிலுவையில் உள்ளது. கோயில் சொத்துக்கள் முறைப்படுத்தப்படவில்லை, நில வரி உயர்த்தப்படவில்லை, இயற்கைக் கனிமங்களிலிருந்து வருவாய் அதிகரிக்கவில்லை, என இப்படி வருவாய் வழிவகைகள் எப்பலனையும் தரவில்லை. மத்திய அரசிடம் போராடி 41% மத்திய வரிகளிலிருந்து தமிழகம் பெறுகிறது. இதை 50% அதிகரிக்கவும் செய்யலாம். ஆனாலும் அடுத்து வரும் இலவசத் திட்டங்களுக்கு இந்த நிதி போதுமா? ஆகையால் மக்களுக்கு கடன் சுமை அதிகரிப்பதைத் தடுத்தாக வேண்டும்.

மாநில அரசின் இலவசத் திட்டங்களில் முக்கியமானது இலவச மின்சாரம், உணவு மானியம், கல்வியில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மடிக்கணினி, இப்போது இலவச 2 ஜி டேட்டா, பயணக் கட்டணச் சலுகை என விரிவுபட்டுள்ளது. இப்படி பரந்து பட்ட சலுகைகளை ஒரே திட்டமாக ஒவ்வொரு ஏழை, எளிய நிலைக் குடும்பங்களையும் துல்லியமாக்க் கணக்கிட்டு அவர்களுக்கு மட்டும் சலுகைகள் கிடைப்பதை உறுதி செய்ய முடியாதா? இயலும். ஆனால் அதற்கு அரசியல் துணிபு வேண்டும். இப்போதைய சலுகைகள் அனைவருக்கும் பொருந்தும். அனைத்துச் சலுகைகளும் குடும்ப அட்டையில் குறிப்பிடப்படும் வருமானத்தை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது.

ஆதார் கார்டு, வருமான வரித்துறை அளித்துள்ள தரவுகளின் அடிப்படையிலும், மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரிய வரும் புள்ளிவிவரங்களின் அடிப்படையிலும் துல்லியமாக உண்மையானப் பயனாளிகளை அடையாளம் காண முடியும். ஆயினும் இதில் அரசியல் பாகுபாடுகள் காட்டாமல் செம்மையாகச் செய்வது கடும்பணி. நியாய உணர்வுடன் செயல்பட்டால்தான் மாநில அரசின் கடனை ஒருமுகப்படுத்த முடியும்.

அதிரடியான முறையில் ஒவ்வொரு ஏழை, எளிய குடும்பத்திற்கும் ஆண்டு தோறும் இவ்வளவு தொகை ரொக்க மானியமாகவும், பொருள் மானியமாகவும் கொடுக்கப்படும் என்பதை ஒரேயொரு சிறப்புத் திட்டமாக மாற்றினால்தான் கடன் சுமைத் தீர வழிபிறக்கும். அத்துடன், இலவசக் கல்வி, பயணக்கட்டணச் சலுகை, இலவச மருத்துவம் ஆகியவற்றையும் இணைத்தால் அரசின் செலவு வகைகளில் தெளிவு பிறக்கும். அடுத்த அமையவுள்ள அரசு தீர்மானமாக செயல்பட்டால் அரசின் கடன் சுமையும், மக்களின் சுமையும் அறவே நீங்க வழியுண்டாகும்.

ரமேஷ் கிருஷ்ணன் பாபு

Related Posts