தனியார் மருத்துவமனைகளிலும் இலவச தடுப்பூசி.. முதல்வர் தொடங்கி வைத்தார்!

தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், கடந்த வாரம் 137 மருத்துவமனைகளின் பிரதிநிதிகள் மற்றும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலதிபர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, பெருநிறுவனங்கள் பங்களிக்கும் சமூக பொறுப்பு நிதியை கொண்டு, தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கொரோனா இலவச தடுப்பூசி போடும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் கோவக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசிகள் இலவசமாக போடப்படும். காவேரி மருத்துவமனையில் சுமார் 36,000 பேருக்கு இலவச தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதைதொடர்ந்து, இந்த திட்டம் மாவட்டங்களில் படிப்படியாக செயல்படுத்தப்பட உள்ளது.
அதேசமயம், தனியார் மருத்துவமனைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையின் கீழ், தடுப்பூசி போடும் தற்போதைய நடைமுறையும் தொடரும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. தனியார் மருத்துவமனைகளில் கோவிஷீல்ட் தடுப்பூசி ஒரு டோஸ் 780 ரூபாய்க்கும், கோவாக்சின் தடுப்பூசி ஒரு டோஸ் 1410 ரூபாய்க்கும் செலுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.