ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!- வீடியோ!

ஸ்டேன் சுவாமி அஸ்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை!- வீடியோ!

ழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான ஸ்டேன் சுவாமி சிகிச்சைக்காக மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 5-7-2021 அன்று உயிரிழந்தார். மறைந்த ஸ்டேன் சுவாமியின் அஸ்திக்கு முதலமைச்சர் .மு.க. ஸ்டாலின் இன்று, (18-7-2021) மலர்வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினார்.

ஒருங்கிணைந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் 1937 ஆம் ஆண்டு பிறந்த ஸ்டேன் சுவாமி என்று அழைக்கப்படும் ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி அவர்கள், சிறு வயதிலேயே சமூகத் தொண்டாற்றுவதில் ஆர்வம் கொண்டிருந்தார். ரோமன் கத்தோலிக்கப் பாதிரியாரான ஸ்டேன் சுவாமி அவர்கள், பெங்களூரில் உள்ள ஜேசுயிட் நடத்தும் இந்திய சமூக நிறுவனத்தின் இயக்குநராக இருந்தார். பழங்குடியின மக்களின் உரிமைக்காகவும் அவர்களின் மேம்பாட்டிற்காகவும் போராடினார். இந்திய அரசியலமைப்பின் ஐந்தாவது அட்டவணையில் உள்ள அம்சங்களை அமல்படுத்தாமல் இருப்பது குறித்துக் கேள்வி எழுப்பினார். பழங்குடி மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு, மேம்பாட்டுக்காகப் பழங்குடியினரை உறுப்பினர்களாகக் கொண்ட பழங்குடியினர் ஆலோசனைக்குழு அமைக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்தார்.

ஜார்கண்டில் ஆதிவாசிகள் நிலங்களைப் பாதுகாக்கும் போராட்டத்திற்காக ஸ்டேன் சுவாமி அவர்கள் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 5-7-2021 அன்று அவர் உயிரிழந்தார்.அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், அடித்தட்டு மக்களுக்காகப் போராடிய அவருக்கு நேர்ந்த துயரம் இனி எவருக்கும் நிகழக் கூடாது என்று குறிப்பிட்டிருந்தார்கள்.

இதை அடுத்து சென்னை – லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள பழங்குடியின மக்களின் உரிமைப் போராளியும், மனித உரிமைச் செயற்பாட்டாளருமான மறைந்த ஸ்டேன் சுவாமி அவர்களின் அஸ்திக்கு இன்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியில் உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி கருணாநிதி, தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச் செல்வன், இனிகோ இருதயராஜ் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related Posts

error: Content is protected !!